தடம் தந்த தகைமை - தமக்காகவே செல்வம் சேர்ப்பவர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே, என்றார் இயேசு (லூக் 12 20,21).
மாந்தரெல்லாம் மனநிறைவோடு வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அந்த மனநிறைவு செல்வத்தால் வந்துவிடாது என்பது இயேசுவின் போதனைத் திருப்பம். ஏழை இலாசரைக் கண்டுகொள்ளாத செல்வருக்குப் பெயர் கொடுக்காத இயேசு (லூக் 16:19-31) இங்கே சொல்லும் செல்வருக்கு ஒரு பெயர் கொடுக்கிறார். அறிவிலி| என்பதே அவர் பெயர். தனக்கென, தன் தலைமுறைக்கெனச் சேர்த்துச் சேர்த்துப் பதுக்கி வாழ்வோரின் பெயர் மட்டுமல்ல, வாழ்வும் அறிவற்றது, அர்த்தமற்றது.
ஒருவரது செல்வத்தை, அவர் எவ்வளவு வைத்திருக்கிறார் என்பதை வைத்து இந்த உலகம் கணக்கிடும், ஆனால் அவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பதை வைத்துக் கணக்கிடுவார் கடவுள். வாழ்வே உயர் செல்வம். அதை நமக்கென மட்டும் என்றில்லாமல் பிறர்க்கென வாழ்கையில் உண்மையான செல்வந்தர் நாமே. இதை உணர்ந்தவர் சிலரே. அந்தச் சிலருள் நான் உண்டா என எண்ணிப்பார்க்கலாமே! செல்வம் நம் அன்றாட அனுபவத்திற்கே, அவை அன்பிற்குரியவை அல்ல.
இறைவா! எனக்கென மட்டும் வாழ நீர் என்னை இப்பூமிக்குள் அனுப்பவில்லை. பிறர்க்கென என்னைப் பங்கிட்டு வாழ வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்