திராட்சை பயிர் திராட்சை பயிர்  (AFP or licensors)

விடை தேடும் வினாக்கள் – முட்செடிகளில் திராட்சையா?

போலி இறைவாக்கினர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் என்பதையோ, மீட்பின் போதனைகள் கிட்டும் என்பதையோ நம்ப வேண்டாம் என்கிறார் இயேசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? (மத் 7:16) என்ற கேள்வியை இன்றைய நம் சிந்தனைக்கு முன்வைக்கிறார் இயேசு.

ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது என்பது, யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் ஏற்றுக்கொண்ட பொது சிந்தனை. மத்திய கிழக்குப்பகுதிகளில் “வேரைப்போல அதன் கனி” என்கிற பழமொழி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இன்று இயேசு, ”முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா?” என்று நம்மிடம் கேட்கிறார்.

இயேசு போலி இறைவாக்கினர்களைக் குறித்துப் பேசும்போது இவற்றைச் சொல்கிறார். முட்செடிகளில் முட்களைத் தான் பார்க்க முடியும், அங்கே திராட்சைப் பழங்கள் விளைவதில்லை. திராட்சைப் பழங்கள் வேண்டுமெனில் திராட்சைக் கொடிகளைத் தான் நாடவேண்டும். அதே போல அத்திப் பழம் வேண்டுமெனில் அத்தி மரத்தைத் தான் நாட வேண்டுமே தவிர, முட்பூண்டுகளை அல்ல. போலி இறைவாக்கினர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் என்பதையோ, மீட்பின் போதனைகள் கிடைக்கும் என்பதையோ நம்ப வேண்டாம் என்கிறார் இயேசு.

இன்று எங்கும் போலிகளின் நடமாட்டம் பெருகிவிட்டது. உணவுப் பொருள்கள், நுகர்வுப் பொருள்களில் போலிகள் இருக்கின்றன. மருத்துவர்கள், ஆன்மீகவாதிகளிலும் போலிகள் நுழைந்துவிட்டதைப் பார்த்து உலகம் அதிர்ந்து நிற்கிறது. ”போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது” என்று உரைத்ததில்தான் இயேசுவின் நம் இன்றைய கேள்வியும் அடங்கியிருக்கிறது.

இது நல்லக் கனியா அல்லது நச்சுக் கனியா என மனிதர்களால் தரம் பிரித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், மனிதர்களிலேயோ அவ்வாறு தரம் பிரித்துப் பார்க்க முடியுமா என்பதுதான் பிரச்சனை. உண்மையான இறைவாக்கினர்கள் மக்களை இயேசுவின் போதனைகளின் படி நடத்துவார்கள். அது இடுக்கமான பாதை வழியாக நம்மை அழைத்துச் செல்லும். அங்கே செல்வத்தின் ஆசைகளோ, பதவியின் மோகங்களோ, போட்டி பொறாமைகளோ இருப்பதில்லை.

அதுபோல் போலி இறைவாக்கினர்களையும் எளிதில் கண்டு கொள்ளலாம். அவர்கள் ஆடுகளை முதலீடாக நினைக்கும் மேய்ப்பர்கள். அச்சுறுத்தியோ, கடவுளுடைய வசனங்களைச் சொல்லி எச்சரித்தோ மக்களுடைய பணத்தைப் பிடுங்குவதே இவர்களுடைய ஒரே குறிக்கோள். அவர்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள் என்கிறார் இயேசு. பக்தர்கள் காசில்லாமல் கால்நடையாக வர, ஆடி காரில் ஆடி அசைந்து வந்திறங்கும் போதகர்கள் இவர்கள். கனிகொடுக்கும் வாழ்க்கையைப் எடுத்துரைக்கும் இயேசுவின் போதனைகள் குறித்து போலி இறைவாக்கினர்கள் கவலைப்படுவதில்லை. இந்த வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு தேவையெல்லாம் பக்தர்களின் பணம், பணம், பணம் ஒன்று மட்டுமே.

நாம் முட்பூண்டுகளிடையே நின்று கொண்டு அத்திப் பழங்களைப் பொறுக்குவதாய் இயேசு சொல்கிறார். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவர் என்று சொன்னவரும் அவர்தாம். ஆன்மிகக் குருடனிடம், அதாவது, போலி இறைவாக்கினரிடம் சென்று உங்கள் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய முயலாதீர்கள் என்று இன்று கூறுகிறார் அவர். நாம் விதைப்பதையே நாம் அறுக்க முடியும். நாம் கயவர்களை நம்பி விட்டு, நல்லது நடக்கும் என நம்புவதுதான் தவறு.

போலி இறைவாக்கினர்கள் எப்போதுமே, தாங்கள் போலி என சொல்லிக் கொள்வதில்லை. தாங்கள்தான் நிஜம் என பிறரை நம்பவைக்க பெரும் முயற்சிகள் செய்வார்கள். உண்மையான இறைவாக்கினர்களை விட தூய்மையானவர்களாய் நடிப்பார்கள். ஆனால் மழையில் சாயம் கலைந்துவிடும். அவர்களுடைய செயல்கள் அவர்களை வெட்ட வெளிச்சமாக்கிவிடும். ஆட்டின் தோலைப் போர்த்துக் கொண்டு வந்து விட்டால் ஓநாய் ஆடாய் மாறிவிடுவதில்லை. பார்வைக்கு ஆட்டைப் போல தோற்றமளிக்கலாமே தவிர, அதன் இயல்புகள் மாறி விடுவதில்லை. 

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘சட்டியில இருக்கிறது தான் அகப்பைல வரும்’ என்று. ஒரு மனிதன் தனது உள்ளத்தில் இருப்பதைத் தான் பேச முடியும். சமூகத்தில் நிலவுகின்ற கொடுமைக்கு எதிராகப் பேசுகிறவன் உண்மையிலேயே சமூக அக்கறை உடையவனாக இருப்பான். மத உணர்வுகளைத் தூண்டும்படி பேசிக்கொண்டே இருப்பவனின் உள்ளம் சுயநலத்தினால் நிரம்பியிருக்கும். சாதீய வன்மத்தினால் பேசுபவனின் இதயம் வெறுப்பினால் கறைபடிந்துக் கிடக்கும். ஒருவனுடைய பேச்சு அவனுடைய அடையாள அட்டை. உள்ளம் அமைதியாய், அன்பாய் இருந்தால் வார்த்தைகளும் அன்பாய், அழகாய் இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டியது அழகிய வார்த்தைகளைத் தேடுவதல்ல, அழகிய இதயத்தை நாடுவது.

நீங்கள் ஒருவருடைய போதனையைக் கேட்கும்போது உங்கள் பாவங்கள் உணர்த்தப்பட்டு, மனம் திரும்ப வேண்டும் எனும் ஆர்வம் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிய வேண்டும்.

பிறருடைய கண்களில் துரும்பு கிடக்கிறது என பேசித் திரியும் இவர்களுடைய கண்களில் கிடக்கும் மரக்கட்டையைக் கண்டுகொள்வதே இல்லை. போலிப் போதகர்களின் போதனை அன்பை மையப்படுத்தாமல், சட்டங்களை மையப்படுத்தி அமையும். போலிப் போதகர்களின் போதனைக்கும், வாழ்க்கைக்குமிடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கும். அவர்களுடைய செடிகளில் வெறும் காகிதப் பூக்களே பூத்துக் கிடக்கும். செடியின் அழகல்ல, கனியின் விளைச்சலே தேவையானது. இலையின் ஆர்ப்பாட்டமில்லாத அசைவுகள் எளிதில் வசீகரிக்கலாம், கனியின் சுவையே கவனிக்கப்படவேண்டியது.

ஒருவன் தீயவனாக இருந்தால் அவனிடமிருந்து நல்ல வார்த்தைகள் வருவதில்லை. இதயம் முழுவதும் குப்பையைச் சேகரித்து விட்டு, வாயில் நறுமணம் கமழவேண்டுமென நினைத்தால் முடியாது. அப்படியே செயற்கைத் தனமாய் வாசனை பூசிக் கொண்டாலும் அது சற்று நேரத்தில் காட்டிக்கொடுத்துவிடும். நறுமணம் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது வாசனையைப் பூசிக் கொள்வதல்ல, குப்பையை அகற்றி விடுவது.

போலிகளை உருவாக்குவதும் மனிதன்தான். அதை அழிக்க முடியாமல் பல இழப்புக்ளைச் சந்திப்பதும் அதே மனிதன்தான். கள்ள நோட்டுகள் பொருளாதரத்தைத் சிதைத்துவிடுகிறது. போலி மருத்துவர், மனிதனின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார். இதுவே போலி இறைவாக்கினர் என்றால், பொருளும் உயிரும் ஆன்மாவும் பாதிப்புக்குள்ளாகிவிடுகிறது. இவ்வுலக வாழ்வும் மறுவுலக வாழ்வும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, போலி இறை வாக்கினர்கள் மனிதர்களுக்குப் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் மட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என இயேசு எச்சரிப்பது சரியானதே.

எனவே, ஆன்மீகத் தலைவர்கள் தாங்கள் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துக்காட்டும் கடமையில் இருக்கின்றனர். ஆண்டவர் கூறுவது போல, நல்ல மரங்கள் கெட்ட கனியைத் தரா. அவ்வாறே, போலி இறைவாக்கினர்களை அவர்களது செயல்களைக் கொண்டே அறிந்துகொள்ளலாம். எனவே, துறவிகள், அருள்பணியாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் தங்கள் வாழ்வையும், பணியையும் பற்றி விழிப்பாயிருக்க வேண்டியது அவசியம்.

ஒருவரது கொள்கைகளைக் கொண்டோ, அவரது பேச்சினைக் கொண்டோ அவரது ஆன்மீகத்தை நாம் எடைபோட முடியாது. மாறாக, அவரது செயல்களைக் கொண்டே கண்டுகொள்ள முடியும். அதற்கு இயேசு தரும் எடுத்துக்காட்டுதான் மரமும், கனியும். நல்ல மரம் நல்ல கனிகளைத் தருகிறது. நச்சு மரமோ நச்சுக் கனிகளையே தரும். நல்ல ஆன்மீகம் கொண்டவர்கள் நல்ல கனிகளைத் தரும் மரத்திற்கு ஒப்பானவர்கள். அவர்களின் செயல்களில் அவர்களின் ஆன்மீகம் வெளிப்படும். எனவே, பிறரது சொற்களைக் கொண்டு அவர்களின் ஆன்மீகத்தை எடைபோடக்கூடாது. நாமும் நற்செயலால் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை அறிவிக்க வேண்டும்.

கிறிஸ்தவர்களாக வெறும் தோற்றத்தில் இருந்தால் அதனால் பலன் ஒன்றுமில்லை. வெறும் அருள் அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதால், நாம் கிறிஸ்தவர்களாக மாறிவிட முடியாது. மாறாக, கிறிஸ்துவை நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்தவ மதிப்பீடுகளை நமது வாழ்வாக்க வேண்டும். அதுதான் கடவுளுக்கு ஏற்புடையவர்களின் வாழ்வாக இருக்க முடியும்.

இந்த சமுதாயத்தில் நல்லவர்கள் என்கிற போர்வையில் பல கெட்டவர்கள் வாழ்ந்து இந்த சமுதாயச் சீரழிவுகளுக்கு காரணமாக இருக்கின்றனர். அவர்களிடத்தில் எச்சரிக்கை உணர்வோடு இருக்க அழைக்கப்படுகிறோம்.

முட்செடிகளுக்கும் திராட்சைப்பழங்களுக்கும் என்ன தொடர்பு? முட்பூண்டுகளுக்கும், அத்திப்பழங்களுக்கும் என்ன ஒற்றுமை? என்ற கேள்வியைக் கேட்போம்.

பாலஸ்தீனப்பகுதியில் ஒரு சில முட்செடிகள், சிறிய பழங்களைக் கொண்டிருந்தன. அவை திராட்சைப் பழங்களைப் போன்ற தோற்றம் உடையதாக இருந்தன. அதேபோல முட்பூண்டுகளில் இருக்கும் பழங்கள், அத்திப்பழங்களை நினைவுபடுத்துவது போன்று இருந்தன. எவ்வளவுதான் அவைகள் தோற்றத்தில், திராட்சைப் பழங்களையும், அத்திப்பழங்களையும் நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அவைகள் திராட்சைப் பழங்களாகவோ, அத்திப்பழங்களாகவோ மாறிவிட முடியாது. அதேபோலத்தான் போலி இறைவாக்கினர்களும். அவர்கள் இறைவாக்கினர்களைப் போல உடையில் காணப்பட்டாலும், அவர்கள் இறைவாக்கினர்கள் ஆகிவிட முடியாது. எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

மாமரம் எப்போதுமே மாங்கனியைத் தான் கொடுக்கும். அதில் என்றைக்குமே பலாப் பழத்தை நாம் பறிக்க முடியாது. மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாள முயலும் இன்றைய அரசியல் நிலைகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2024, 12:50