நைஜீரியா கிறிஸ்தவர்கள் நைஜீரியா கிறிஸ்தவர்கள்   (ANSA)

நைஜீரியாவில் மீண்டும் ஓர் அருள்பணியாளர் கடத்தப்பட்டிருக்கிறார்.

நைஜீரியாவில் மே மாதத்தில் இரண்டு அருள்பணியாளர்களும், ஜூன் மாதத்தில் ஒருவரும் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

தெற்கு-மத்திய நைஜீரியாவின் Anambra மாநிலத்தின் அஜல்லியில் உள்ள புனித மத்தேயு பங்குத்தளத்தின் அருள்பணியாளர் Christian Ike மற்றும் உடன் சென்ற பொதுநிலையினர் Ogbonnia Aneke இருவரும் ஜூன் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கடத்தப்பட்டனர் என்று Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள Ekwulobia மறைமாவட்டம், அருள்பணியாளர் Christian Ike மற்றும் பொதுநிலையினர் Ogbonnia Aneke இருவரும் புறநகர் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் கடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மூன்று வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள் அவர்களின் வாகனத்தை வழிமறித்துத் தாக்கி இருவரையும் கடத்திச் சென்றதாகவும், வாகனத்தில் இருந்த பொருள்களை எடுத்துச் சென்றதாகவும் இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும், கடத்தப்பட்ட இவ்விருவரின் விடுதலைக்காக இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளை அம்மறைமாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நைஜீரியாவில் மே மாதத்தில் இரண்டு அருள்பணியாளர்களும், ஜூன் மாதத்தில் ஒருவரும்  கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2024, 14:12