பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட கிறிஸ்தவருக்கு நீதி வேண்டும்!

கிறிஸ்தவ சமூகத்திற்குப் பாதுகாப்பை வழங்கவும், எதிர்காலத்தில் அவர்கள் மீது பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் பாகிஸ்தானின் கத்தோலிக்கத் திருஅவையின் நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையம் (NCJP) அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாகிஸ்தானின் சர்கோதாவில் கிறிஸ்தவக் காலணித் தொழிற்சாலை உரிமையாளரான நசீர் மசிஹ் அவர்கள் அண்மையில் தெய்வ நிந்தனையின் பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்த வேளை, அவர்மீது இந்தத் தாக்குதலை நிகழ்த்திய குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்று பஞ்சாப் அதிகாரிகளிடம் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது ICN செய்தி நிறுவனம்.

பாகிஸ்தானின் கத்தோலிக்கத் திருஅவையின் நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையம் (NCJP) வெளியிட்டுள்ள அதன் அண்மைய அறிக்கையில், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை தனது அறிக்கையொன்றில் கூறியிருந்த, சட்ட அமைப்பில் நம்பிக்கையை மீட்டெடுக்க விரைவான மற்றும் ஒருதலைசார்பற்ற நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், காவல்துறை அதிகாரிகளின் செயலற்ற தன்மைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஆயர் பேரவையின் அறிக்கையில், எந்த ஒரு கிறிஸ்தவர் மீதும் பொய்யான தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது NCJP அமைப்பு.

பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பது, சட்ட அமலாக்க நெறிமுறைகளை மேம்படுத்துவது மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது NCJP அமைப்பு.

கிறிஸ்தவ சமூகத்திற்குப் பாதுகாப்பை வழங்கவும், எதிர்காலத்தில் அவர்கள் மீது பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் கோரியுள்ளது NCJP அமைப்பின் அறிக்கை.

மே 26, ஞாயிறன்று, பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் Sargodha மாவட்டத்தில் தெய்வநிந்தனையின் பெயரில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு 1000 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட 74 வயதான கிறிஸ்தவர் நசீர் மசிஹ் அவர்கள்,  ஜூன் 3-ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2024, 15:24