நைஜீரியாவில் மீண்டும் ஓர் அருள்பணியாளர் கடத்தப்பட்டார்
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
ஜூன் 9ஆம் தேதி, நைஜிரியாவின் வடமேற்கு மாநிலம் கடுனாவில் உள்ள புனித தோமையார் ஆலயத்தின் அருள்பணியாளர்கள் தங்கும் இல்லத்தில் அதிகாலையில் நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர்களால் அருள்பணியாளர் Gabriel Ukeh அவர்கள் கடத்தப்பட்டார்.
கடந்த மே மாதம் 2023 முதல் இப்போது வரை ஏறக்குறைய 4000க்கும் மேற்பட்ட கடத்தல்கள் நடைபெற்றுள்ளதாகவும், இவ்வாண்டின் துவக்கத்தில் இக்கடத்தல் நிகழ்வுகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட நற்செய்தி அறிவிப்புப் பேராயம், நெருக்கடிச் சூழல்களை எதிர்கொள்ளும் நைஜீரிய மக்களுடன் தன்னுடைய ஆழமான மற்றும் இதயப்பூர்வமான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இப்பகுதியில் மேலும் ஓர் அருள்பணியாளர் கடத்தப்பட்டிருப்பதைக் கண்டித்த நைஜிரியாவின் Kafanchan மறைமாவட்டத்தின் முதன்மை குரு Emmanuel Kazah Faweh, அருள்பணியாளர் Gabriel Ukeh அவர்களின் பாதுகாப்பான விடுதலைக்காக தொடர்ந்து வேண்டுவதாகவும், அதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பற்ற அப்பாவி குடிமக்கள் பணத்திற்காக கடத்தப்படுவதை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஜூன் 15 முதல் 19 வரையுள்ள நாட்களில் நடைபெறும் இஸ்லாமிய திருவிழாக்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டி அரசைக் கேட்டுக்கொண்ட அவர், நைஜிரிய கொள்ளையர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், அருள்பணியாளர் Ukeh அவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றும்போது நீதியை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அருள்பணியாளர் Ukeh அவர்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறிய மறைமாவட்டத்தின் முதன்மை குரு, அருள்பணியாளர் Ukeh மட்டுமல்ல, பிணைக்கைதிகளாக உள்ள அனைவரும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டுவதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு நெருக்கடிகள் பரவலாக உள்ள சூழலில், கொள்ளையர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் அரசியல் மற்றும் கருத்தியல் காரணங்களுக்காகவும், மீட்பு நடவடிக்கைகளில் கிடைக்கப்பெறும் அதிக அளவிலான தொகைக்காகவும் நைஜிரியாவில் அப்பாவி மக்கள் சிறைபிடிக்கப்படுவது வேதனையான தொடர் நிகழ்வாக மாறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்