இஸ்ரேயல் -பாலஸ்தீனா போர் இஸ்ரேயல் -பாலஸ்தீனா போர்   (AFP or licensors)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 53-2, தீங்கிழைப்போர் அறிவற்றவர்!

நாமும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழும்போது ஒருபோதும் அவமானமும், வெட்கமும், மானக்கேடும் அடைய மாட்டோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 53-2, தீங்கிழைப்போர் அறிவற்றவர்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மதிநுட்பம் கொள்வோம்'  என்ற தலைப்பில் 53-வது திருப்பாடலில் 1 முதல் 3 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 4 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இந்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.  ‛தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!’ இவர்கள் கடவுளை நோக்கி மன்றாடுவதுமில்லை; எனவே, அவர்கள் இதுவரை கண்டிராத முறையில் பேரச்சத்தால் நடுநடுங்குவர்; இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்; கடவுள் அவர்களைக் கைவிட்டதால் அவர்கள் மானக்கேடு அடைவர். சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! கடவுள் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக! (வச. 4-6)

முதலாவதாக, ‛தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? என்றதொரு கேள்வியை எழுப்புகின்றார் தாவீது அரசர். இதன் பொருள் என்ன? இவ்வுலகில் நிகழும் பெரும்பாலான தீமைகளுக்கு அடிப்படைக் காரணம் அறிவிழந்த நிலைதானே. இதற்கொரு எடுத்துக்காட்டை உங்களுக்குக் கூற விழைகின்றேன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்தித்தாளில் படித்த ஒன்றுதான். சென்னையின் புறநகர் பகுதியில் ஓர் எளிமையான குடும்பம். அக்குடும்பத்தில் கணவனை இழந்த அந்தக் கைம்பெண்ணுக்கு இரண்டு மகன்கள். ஒரு தீபாவளி பெருநாளன்று, மூத்தவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைக் கழித்துவிட்டு, மது அருந்திய போதையில் தாமதமாக வீட்டிற்கு வருகின்றான். அந்நேரம் ஏறக்குறைய நடுஇரவு. அவனது தாயும் தம்பி இளையவனும் உறங்கிவிட்டனர். தட்டுத்தடுமாறி வீட்டிற்குள் வரும் மூத்தவன், மின்விளக்கை எரியவிடுகிறான். உடனே தம்பி எழுத்து, “நல்லநாளும் பெரியநாளுமா ஏன் இப்படி குடிச்சிட்டு தாமதமா வந்து என்னையும் அம்மாவையும் தொந்தரவு பண்ற...” என்று கூறியவாறு மின்விளக்கை அணைக்கிறான். உடனே கோபம் கொண்ட அண்ணன் மீண்டும் மின்விளக்கை எரியவிடுகிறான். தம்பி மீண்டும் அணைக்கிறான். அண்ணன் மீண்டும் எரியவிடுகிறான், தம்பி மீண்டும் அணைக்கிறான். இதனால் குடிபோதையில் இருந்த அண்ணன், தம்பியின்மீது கோபவெறிகொண்டு சமயலறைக்குள் சென்று ஒரு கத்தியை எடுத்துவந்து தனது தாய்க்கு முன்பாகவே அவனைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுபோடுகிறான். உடனே தூக்கத்திலிருந்து எழும் அந்தத் ததாய் இந்தக் கோரக்காட்சியைக் கண்டு அலறித்துடிக்கிறார்.  இன்று உலகில் நிகழும் மோதல்கள், சண்டைசச்சரவுகள், போர்கள், கலவரங்கள், தீவீரவாதம் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் யாவும் இத்தகைய அறிவிழந்த நிலையில்தான் நிகழ்த்தப்படுகின்றன. இதன் காரணமாகவே, நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “போர் என்பது மதியற்றதனம் என்றும் போர்கள் எப்போதும் தோல்வியைத்தான் தரும்” என்றும் அடிக்கடி கூறி அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்பிடுமாறு உலகத் தலைவர்கள் யாவருக்கும் அறைகூவல் விடுத்து வருகின்றார்.

இரண்டாவதாக, "உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!’  என்று கூறுகிறார் தாவீது அரசர். பசியுணர்வு என்பது எல்லா உயிரினங்களுக்கும் அடிப்டையானதுதான். ஆனாலும் அந்த நேரத்திலும் இருக்கும் உணவை எப்படி எல்லாருடனும் பங்கிட்டுக்கொள்வது என்பதை அறிந்தவர்தான் மிகவும் உயர்ந்தவராகப் போற்றப்படுவார். நான் பணியாற்றும் வத்திக்கான் வானொலியின் தமிழ் அலுவலகத்திற்குப் பின்புறம் ஒரு சிறிய மேல்தளம் இருக்கிறது, ஒரு சில நேரங்களில் மட்டும் கடல் பறவைகள் வந்து உணவு கேட்ட வண்ணம் சப்தம் எழுப்பும். ஏன் சில நேரங்களில் எங்களின் கண்ணாடிக் கதவையும் தட்டி உணவு கேட்கும். அப்போது எங்களில் யாராவது ஒருவர் எழுந்து சென்று ரொட்டித்துண்டை போடுவோம். பெரும்பாலும் முதலில் ஒரு பறவைதான் வரும், நாங்கள் ரொட்டித்துண்டைப் போட்டதும், அது உடனே சாப்பிடாது, சப்தமிட்டு தனது சக பறவைகளையும் அழைக்கும், அவைகள் வந்ததும் இருப்பதை பகிர்ந்து உண்டுவிட்டு எல்லாம் கிளம்பிப்போய்விடும். தான் பசியின் கோரப்பிடியில் இருந்தாலும்கூட, தனது இனத்திற்கும் உணவளிக்க வேண்டுமென விரும்புகின்றன இந்த பறவைகள். ஆனால் மனிதர் மட்டுமே உணவைக் கண்டதும் மாறுபட்டு நடந்துகொள்கின்றனர். இங்கே, தனது எதிரிகள் எப்படி கோரப்பசி கொண்டவர்களாக தனது மக்களை ஆட்கொண்டு கொன்றொழிக்கப் பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறும் விதமாகவே, "உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!’ என்று உரைக்கின்றார் தாவீது அரசர். ஒருவேளை, நாம் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கண்டதுபோல, இந்த எதிரிகள் என்பவர்கள் அசீரியர்களாக கூட இருந்திருக்கலாம். அதேவேளையில், கடவுள் தனது கரங்களில் ஒப்படைத்த இஸ்ரயேல் மக்களை எப்படிக் கண்ணும் கருதுமாகப் பாதுகாக்கிறார் என்பதும் தாவீதின் இந்த வார்த்தைகளில் வெளிப்படுவதையும் நம்மால் கண்டுணர முடிகின்றது. இன்றைய நம் இந்தியாவில் அதானியும் அம்பானியும், இன்னும் பல அரசியல் தலைவர்களும் கோரப்பசிகொண்டவர்களாக மக்களின் செல்வங்களையும் இயற்கை வளங்களையும் கூட்டாகக் கொள்ளையடிப்பதாகவும் அதற்கு ஆளும் அரசு துணைபோவதாகவும் தேர்தல் பரப்புரைகளில் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமதி வந்ததைப் பார்த்தோம். இவர்கள் கொரோனாவை விடக் கொடூரமானவர்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

அடுத்து அதனைத் தொடர்ந்து வரும் வார்த்தைகளில், "இவர்கள் கடவுளை நோக்கி மன்றாடுவதுமில்லை" என்று தீயவர்களின் பண்பையும் எடுத்தியம்புகின்றார் தாவீது அரசர். தீயவர்கள் என்று சொன்னாலே இறையச்சம் இல்லாதவர்கள்தானே! அவர்களிடத்தில் நீதி நேர்மை, உண்மை, சமத்துவம், அமைதி போன்ற நற்பண்புகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் கடவுள் பக்கம் திரும்பவே மாட்டார்கள் என்பது திண்ணம். அதனால்தான், "இவர்கள் கடவுளை நோக்கி மன்றாடுவதுமில்லை" என்று தெளிவுபடக் கூறுகின்றார். அடுத்து, "இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்; கடவுள் அவர்களைக் கைவிட்டதால் அவர்கள் மானக்கேடு அடைவர்" என்று தொடர்ந்து கூறும் தாவீது அரசரின் வார்த்தைகளில் அவர்களுக்கான தீர்ப்பு வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். அதாவது, அவர்கள் மற்றவர்களுக்கு செய்த தீமையைவிட பலமடங்கு அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள் என்பதை உரைக்கின்றார் தாவீது. 'அவன் செய்த கெட்ட செயல் ஒண்ணா இரெண்டா... இப்ப அதுக்கெல்லாம் சேர்த்துவச்சு அனுபவிக்கிறான்’ என்று நாம் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா...? அதுதான் தீயவர்களுக்கு நடக்கும் என்பது இதன்வழி அறியவருகின்றோம். இங்கே, 'எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்' என்பது அத்தீயவர்கள் பெறப்போகும் வலிமையற்ற உடல் நிலையையும்,  அதன் விளைவாக அவர்களுக்கு வரவிருக்கும் கொடிய நோய் மற்றும் மரணத்தைக் குறிக்கும் விதமாகக் கூட இவ்வாறு கூறியிருக்கலாம் தாவீது அரசர். அடுத்து அவர் சொல்லக்கூடிய இன்னொரு முக்கியமான வார்த்தை 'மானக்கேடு'. இது நமது தமிழ்ச் சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வார்த்தை. ‘உனக்கு இதைவிட பெரிய மானக்கேடு தேவையா? உனக்கு சூடு’ சொரணை’ மானம்’ ரோசம் இருந்தா இப்படியெல்லாம் செய்திருப்பியா? உனக்கு மானம் இருந்தா நீ செத்துப்போய்டு... இனிமே நீ உயிரோடு இருக்காத...’ என்று அடிக்கடி நாம் கூறக் கேட்டிருப்போம். ஆக, அடிப்படையில் மானக்கேடு என்பது நயவஞ்சகம், சூது போன்ற தீய குணங்களால் ஏற்படுவது. மேலும் தீமையை விளைவிக்க விரும்பும் மனிதர்கள் யாவரும், தங்களுக்கு வரவிருக்கும் மானக்கேடு குறித்து அந்நேரம் கவலைபடாதிருந்தாலும், அது வந்த பின்னர் முற்றிலும் ஒடுங்கிப்போவர். அவர்தம் எலும்புகளெல்லாம் தளர்ந்துபோகும், நோய்நொடிகளால் அவர்தம் உடல் வலிமையிழந்துவிடும். அந்நேரத்தில் அவர்கள் மானக்கேடு அடைந்தவர்களாக மரணத்தைத் தழுவிக்கொள்வர்.

ஆனால் அதேவேளையில், இறையச்சம் கொண்டவர்கள், எத்தகைய தீமையான செயல்களிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பர். மானக்கேடு அடைவதை விட சாவதே மேல் என்று எண்ணக் கூடியவர்கள் இவர்கள். "தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்" (1பேது 3:17) என்று புனித பேதுருவும், ‘பாவம் செய்வதை விட சாவதே மேல்’ என்று தூய தொமினிக் சாவியோவும் கூறுகின்றனர். ஆக, இறையச்சம் கொண்டவர்கள் தீமையையும் பாவத்தையும் விலக்கி மானமுடன் வாழவேண்டும் என்றுதான் விரும்புவர். நமது திருவள்ளுவரும் கூட, "இளிவரின் வாழாத மானம் உடையார் ⁠ஒளிதொழுது ஏத்தும் உலகு" (குறள் 970) என்ற குறள் வழியாக, தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர் என்று கூறுகின்றார்.  

இறுதியாக,"சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! கடவுள் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!" என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். அதாவது, வாழ்வில் எத்தகைய துன்ப துயரங்கள் வந்தாலும், கடவுளுடைய பேரன்பில் ஆழமான இறைநம்பிக்கை கொண்டு நிலைத்து நிற்கும்போது, நாம் உறுதியாக மீட்கப்படுவோம் என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு கூறுகின்றார் தாவீது.

மேலும் “ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்” (திபா 18:2-3) என்றும், “ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? (திபா 27:1) என்றும், வேறுசில திருப்பாடலிகளிலும் தாவீது அரசர் உரைப்பதைப் பார்க்கின்றோம். ஆகவே, நாமும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழும்போது ஒருபோதும் அவமானமும், வெட்கமும், மானக்கேடும் அடைய மாட்டோம் என்பதை உறுதியாக நம்புவோம். அறப்பாடல் என்று பொருள்கொண்டுள்ள இத்திருப்பாடலை தியானித்து முடித்திருக்கும் நாம் நமது வாழ்க்கையில் அறம்சார்ந்த செயல்கள் செய்து என்றும் வாழும் நம் இறைவனுக்கு விருப்பமுள்ள மக்களாக வாழ்வோம். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2024, 11:29