திருஉடல் திருஇரத்தப் பெருவிழா : தியாகமிகு தூய அன்பின் அடையாளம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. விப 24:3-8 II. எபி 9:11-15 III. மாற் 14:12-16, 22-26)
இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கான தனது செபக் கருத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் நெஞ்சைத் தொடும் நிகழ்வொன்றின் வழியாகத் தனது இறைவேண்டலுக்கான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். அதில் இவ்வாறு உரைக்கின்றார். “ஒருமுறை துருக்கியின் Lesbos தீவிலுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமுக்கு நான் சென்றபோது ஒருவர் என்னிடம், ‘தந்தையே, நான் ஒரு முஸ்லிம். என் மனைவி கிறிஸ்தவர். பயங்கரவாதிகள் எங்கள் இடத்திற்கு வந்து, எங்களைப் பார்த்து எங்கள் மதம் என்ன என்று கேட்டார்கள். அப்போது சிலுவையை கையில் வைத்திருந்த என் மனைவியை அணுகி அதைத் தரையில் வீசி எறியச் சொன்னார்கள். ஆனால் அவள் அதைச் செய்ய மறுத்துவிட்டாள். அதனால், அவர்கள் என் கண் முன்பாகவே அவள் கழுத்தை அறுத்துக்கொன்றனர்’ என்று என்னிடம் கூறினார். மேலும் அவர் அந்தப் பயங்கரவாதிகள்மீது எவ்வித வெறுப்பும் கொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் தனது மனைவி கொண்டிருந்த கிறிஸ்துவின் முன்மாதிரியான அன்பில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். கிறிஸ்துவின் மீதான அவரின் அன்பு, அவர் தம் மனைவியை ஏற்றுக்கொள்ளவும், மரணம் வரை அவருக்கு உண்மையாக இருக்கவும் வழிவகுத்தது.
இன்று நம் அன்னையாம் திருஅவை கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இப்பெருவிழா நான்கு வகையான தியாகங்களை (கொடுத்தல்கள்) உள்ளடக்கியுள்ளது. 1. உள்ளதிலிருந்து கொடுப்பது 2. உள்ளதையெல்லாம் கொடுப்பது. 3. உள்ளதையெல்லாம் கொடுத்து உடலையும் கொடுப்பது 4. உடலையும் கொடுத்து உயிரையும் கொடுப்பது. நமதாண்டவர் இயேசு இந்த நான்காவது வகையான தியாகத்தை நிறைவேற்றி இந்த மனுக்குலத்தை அதன் பாவத்திலிருந்து மீட்டுள்ளார். இந்தவகையான இழத்தல் அல்லது கொடுத்தால்தான் தூய்மைமிகு அன்பின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த உலகிலே ஐந்து வகையான மனிதர்கள் இருப்பதாக கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துரைக்கின்றார். முதல் வகையினர் கடுகுபோல் உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் தன்பிள்ளை, தன்குடும்பம், தன் சோறு, தன் வீடு தன் சம்பாத்தியம் என்று சுயநலம் கொண்டு வாழ்பவர்கள். இவர்களால் தெருவில் உள்ளவர்களுக்குக் கூட பயனில்லை என்கின்றார். இரண்டாம் வகையினர் துவரை போன்ற உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் தங்களது ஊரே கரும்பு போன்றது என்று எண்ணுபவர்கள். அதனைவிட்டு இவர்கள் வெளியே வரமாட்டார்கள். மூன்றாம் வகையினர் தொன்னையுள்ளம் கொண்டவர்கள். இவர்கள் தங்களுடைய நாட்டின் நன்மைக்காகப் பிற நாட்டின் மக்களைத் துன்புறுத்துபவர்கள். இவர்களைத் தனது நலன்களுக்காகப் பிறரைத் துன்புறுத்துபவர்கள் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். நான்காம் வகையினர் மாம்பிஞ்சு போன்ற உள்ளம் கொண்டோர். இவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தவறு என்றும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறுவர். ஆனால் இவர்களோ தன் வீடு, நகர், நாடு காக்க சண்டையிடுவர். ஐந்தாம் வகையினர் அன்புள்ளம் கொண்டோர். இவர்கள் தூய உள்ளம், அன்புள்ளம், பெரிய உள்ளம் கொண்டவர்களாய், உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றே என்று எண்ணுபவர்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மனப்பான்மை கொண்டு வாழ்பவர்கள். இவர்களைத் தாயுள்ளத்துடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். இத்தகைய உள்ளம் கொண்டோர்தான் எல்லோரையும் ஒன்றுபடுத்தும் நோக்கமுடன் உழைப்பர். அவ்வுயர் நோக்கத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் கையளிக்க முன்வருவர்.
இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை
இவ்வுலகின் வரலாற்றில் போற்றப்படும் தியாகங்கள் எல்லாமே இரத்தம் சிந்துதலால் ஏற்பட்ட தியாகங்கள்தாம். இயேசு நம்மோடு ஏற்படுத்திய உடன்படிக்கை இரத்தத்தினாலான உடன்படிக்கை. இன்றைய முதல்வாசகத்தில், கடவுள் கூறிய வார்த்தைகளையும் விதிமுறைகளையும் மோசே மக்களிடம் எடுத்துரைக்கும்போது, அவர்கள் அனைவரும் ஒரே குரலாக; "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்று விடையளிக்கின்றனர் என்பதைப் பார்க்கின்றோம். மேலும் நல்லுறவு பலிகளாக ஆண்டவருக்குப் படைக்கப்பட்ட விலங்குகளின் இரத்தத்தின் ஒருபாதியை எடுத்து கலங்களில் விட்டு வைக்கிறார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளிக்கின்றார். மீண்டுமாக உடன்படிக்கையின் ஏட்டையெடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசிக்கிறார். அவர்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்" என்கின்றனர். இங்கே இரண்டு விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கடவுள் கூறிய அனைத்தையும் செயல்படுத்துவதாக இரண்டு முறை வாக்களிக்கின்றனர். இரண்டாவதாக, பலிபீடத்தின்மீது தெளிக்கப்படும் இரத்தம் இயேசு சிந்திய புனிதமிகு இரத்தத்தின் அடையாளமாகவும், அந்தப் பலிபீடம் இயேசு திருச்சிலுவையில் தனது இன்னுயிரைக் கையளித்த கல்வாரியையும் அடையாளப்படுத்துகிறது. இறுதியாக "இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்கின்றார் மோசே. எனவே, பழைய ஏற்பாட்டில் நல்லுறவுப் பலிகளாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விலங்குகளின் இரத்தத்தின் வழியாக இஸ்ரயேல் மக்களுடன் உடன்படிக்கை செய்துகொள்ளும் இறைத்தந்தை, புதிய ஏற்பாட்டில் தனது மகன் இயேசுவை கல்வாரியில் பலியாக்கிதன் வழியாக இவ்வுலகின் மக்கள் அனைவருடனும் இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கையை செய்துகொள்கிறார். இதன் காரணமாகவே, அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்" என்கிறார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுக்கிறார். அனைவரும் அதிலிருந்து பருகுகின்றனர். அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்” என்கிறார். ஆக, இங்கே இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கையின் அடையாளமாக அமைகின்றன.
மேலும், "அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே" என்று கூறும் புனித பவுலடியார், "அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது" என்று இயேசுவின் இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கைக் குறித்து மிகவும் அருமையாகத் தெளிவுபடுத்துகின்றார்.
இங்கே, "இயேசுவின் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது" என்று கூறும் வார்த்தைகளின் பொருளை என்ன? முந்திய உடன்படிக்கை என்பது கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட பழைய உடன்படிக்கைகளையும் அதை அவர்கள் தங்கள் கீழ்ப்படித்தலற்ற பாவச் செயல்களால் மீறியதையும் குறிப்பிடுகின்றது. அதனால்தால்தான் அம்மக்களுடன் கடவுள் மீண்டும் புதியதொரு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். இந்தப் புதிய உடன்படிக்கை என்பது தனது மகன் இயேசுக் கிறிஸ்து வழியாக மனுகுலத்துடன் அவர் ஏற்படுத்திய இரத்தத்தினாலான உடன்படிக்கை. இதனைத்தான், இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர் என்று வாசிக்கின்றோம் ஆக, இயேசு நம்முடன் ஏற்படுத்திய இரத்தத்தினாலான இந்தப் புதிய உடன்படிக்கை என்பது என்றும் அழியாதது, நிலையானது மற்றும் நமக்கு நிலைவாழ்வை அருளக்கூடியது.
நமக்கான இயேசுவின் அழைப்பு
இவ்வுலகில் நிகழ்ந்த அத்தனை புனிதமிகு தியாக மரணங்களும் தூய அன்பின் அடையாளங்களாக அமைகின்றன. அதேவேளையில், அவை இம்மானுடச் சமுதாயத்திற்குப் பல்வேறு அறைகூவல்களை விடுத்துள்ளன. அதாவது. அவர்களின் தற்கையளிப்புகள் அனைத்தும் அவர்களுடன் மட்டுமே அடங்கிப்போய்விடக்கூடாது. அது அவர்களின் நீட்சியாக நம்மில் தொடரப்பட வேண்டும். அவ்வாறு தொடரப்பட்டதால்தான் இன்றைய உலகம் பல்வேறு மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கண்டிருக்கின்றது. மகாத்மா காந்தியின் மரணம் மதவேறுபாடுகளுக்கு சாவுமணியடிக்கக் கோரியது, பெரியாரின் மரணம் சாதிய வேற்றுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியது, ஆபிராம் லிங்கனின் மரணம் அடிமைத்தளைகளை வேரறுக்கத் தூண்டியது, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலாவின் மரணம் இன வேற்றுமைகளை இல்லாதொழிக்க வேண்டியது. இவர்களின் தியாக மரணங்கள் எழுப்பிய வேண்டுகோள்கள் எல்லாமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று கூறமுடியாது. காரணம் அவர்கள் அழித்தொழிக்கப் போராடிய அனைத்து வேறுபாடுகளும் பல்வேறு வடிவங்களில் இன்னும் நம்மிடையே தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் காட்டிய வேறுபாடுகள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட நாமும் அவர்களது நீட்சிகளாகத் தொடர வேண்டும்.
மேலே நாம் கேட்ட அத்தனை தலைவர்களும் ஏதோவொரு விதத்தில் இயேசுவின் இறையாட்சிக் கொள்கைக்காக உழைத்து உயிர்விட்டவர்கள்தாம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இதனைத்தான் பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” (காண்க லூக் 22:19) என்று இயேசு கூறிதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா நற்செய்தியாளர். இங்கே, "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்பது, நமதாண்டவர் இயேசு எந்த இலட்சியத்திற்காக வேள்வித்தீயில் தியாக மரணமேற்றாரோ அவற்றை நமது அன்றாடச் செயல்களில் நாம் வாழ்வாக்க வேண்டும் என்பதன் அர்த்தத்தில்தான் இவ்வாறு உரைக்கின்றார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதேவேளையில், இயேசுவின் இறையாட்சிக் கொள்கைகளை நாம் வாழ்வாக்க முயலும்போது, சவால்களையும், சங்கடங்களையும், இன்னல்களையும், இடையூறுகளையும், அவமானங்களையும், அவமதிப்புகளையும், தியாக மரணங்களையும் கண்டிப்பாக ஏறக்கவேண்டியிருக்கும். உண்மையான சீடத்துவப் பணியில் இவை யாவும் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. ஆனால் இவைகள்தாம் நம் கிறிஸ்தவ வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கின்றன. “உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்” (காண்க யோவா 15:18), என்றும், "உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது" (16:2) என்றும் கூறும் இயேசு, "ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" (மத் 10:28) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார். ஆகவே, இப்பெருவிழா குறித்துக்காட்டும் இயேசுவின் தியாகமிகு தூய்மையான அன்பை, நமது அன்றாட வாழ்வில் வாழ்வாக்க முயல்வோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்