மறைநூல் அறிஞருக்கு பதில்மொழி தரும் இயேசு மறைநூல் அறிஞருக்கு பதில்மொழி தரும் இயேசு  

பொதுக் காலம், 10-ஆம் ஞாயிறு : தீய ஆவியை தூய ஆவியால் வெல்வோம்!

தீய ஆவிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு தூய ஆவிக்குரிய செயல்களை அணித்துக்கொள்வோம்.
பொதுக் காலம், 10-ஆம் ஞாயிறு : தீய ஆவியை தூய ஆவியால் வெல்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. தொநூ 3:9-15      II. 2 கொரி 4:13-5:1      III.  மாற் 3:20-35 )

குரு ஒருவர் தனது மாணவர்களுக்குப் படிப்பினைகள் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, “ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் நன்மை தீமை என்ற இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. இவை இரண்டும் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே வாழ்கின்றன” என்று கூறினார். அப்போது எழுந்த மாணவன் ஒருவன்,"குருவே, அப்படியென்றால் அந்தச் சண்டையின் இறுதியில் எந்த ஓநாய் வெற்றிபெறும்" என்று கேட்டான். உடனே குரு, "நீ எந்த ஓநாய்க்கு அதிகம் உணவூட்டி வளர்கிறாயோ அந்த ஓநாய்தான் வெற்றிபெறும் என்றார். பொதுக் காலம் ஆண்டின் பத்தாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் ஒவ்வொரு மனிதரிடத்திலும் விளங்கும் இருவேறு இயல்புகள் குறித்துப் பேசுகின்றன. ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் தீய ஆவிக்குரிய (சாத்தானுக்குரிய) இயல்புகளும், தூய ஆவிக்குரிய இயல்புகளும் காணப்படுகின்றன. தீய ஆவி தீமைக்குரியது, தூய ஆவி நன்மைக்குரியது. அப்படியென்றால், இவை இரண்டிற்குமிடையே எப்போதும் ஒரு போராட்டம் என்பது இருந்துகொண்டே இருக்கும். நாம் எந்த ஆவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமது ஆன்மிக வெற்றியும் தீர்மானிக்கப்படும். இன்றைய முதல் வாசகம் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கடவுளால்  படைக்கப்பட்ட நமது முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாவும் கடவுள் முன்னிலையில் மிகவும் மகிழ்ந்திருந்தனர். ஆனால், என்று அவர்கள் சாத்தானுக்கு அடிமைப்பட்டு கடவுளுக்கு எதிராகப் பாவம் புரிந்தனரோ அன்றே அவர்கள் தங்கள் தூயவராம் கடவுளிடமிருந்து விலகி தீய ஆவியாம் சாத்தானிடம் அடிமைபட்டுப் போயினர். அவர்கள் தங்கள் உள்ளத்தில் இருந்த கடவுளுக்குரிய இயல்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தீயவனாம் சாத்தானுக்குரிய இயல்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தனர், அதாவது, கடவுளால் விலக்கப்பட்ட கனி என்னும் பாவத்தின் இச்சையில் வீழ்ந்தனர்.

இரண்டாவதாக, பாவத்தினால் நமக்கு ஏற்படுவது பேரச்சம். மகிழ்ச்சியும், மன அமைதியும், மன நிறைவும் கொண்டிருக்கும் நமது வாழ்வில், கடவுளுக்கு எதிராக நாம் பாவம் புரியும்போது, அது பேரச்சத்தைக் கொண்டு வருகிறது. ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டபொழுது, “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்கிறான் மனிதன். மேலும் “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேள்வியெழுப்புகின்றார் கடவுள். இங்கே ஆடை என்பது மகிழ்ச்சியை குறிப்பதாகவும் நாம் பொருள்கொள்ளலாம். ஆக, பாவம் நம்மில் நுழையும்போது, கடவுள் நமக்கருளிய மகிழ்ச்சி, அமைதி, சுதந்திரம் ஆகிய மூன்றையும் இழப்பதுடன், இவற்றிற்கு எதிர்மாறாக இருக்கின்ற, துயரம், குழப்பம், அடிமைநிலை ஆகிய மூன்றையும் பெற்றுக்கொள்கின்றோம். இதை மனிதன் உணர்ந்திருக்கின்றானா என்பதை அறிந்துகொள்ளும் விதமாகவே, “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேள்வியெழுப்புகின்றார் கடவுள். மூன்றாவதாக, பாவம் நம் உள்ளத்தில் நுழையும்போது அதை மறைப்பதற்கான வழிகளையும் தேட முற்படுவோம். அதாவது, ‘நான் நல்லவன், நான் யோக்கியமானவன், என்மீது எந்தத் தவறும் இல்லை’ என்று எடுத்துக்காட்ட முயல்வோம். இதுவும் சாத்தானுக்குரிய இயல்புதான். ஒரு தவற்றை மறைக்க இன்னொரு தவற்றை செய்வது என்று கூறுவோமே அதுதான் இது. இதனையும் இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாகப் பார்க்கின்றோம். "நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். நாம் செய்த பாவத்திற்கு அடுத்தவரைக் குற்றம் சுமத்தும் செயல், நமது முதல்பெற்றோரின் வாழ்வில் தொடங்கி இன்றுவரைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.

'இயேசுவும் பெயல்செபூலும்' என்ற தலைப்பில்தான் இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்துள்ளது. ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே, இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதால் (காண்க. மத் 12:22-32; லூக் 11:14-23; 12:10)  இதன் முக்கியத்துவத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. "எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும், “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்ததற்கு இயேசு பதிலளிக்கும் விதம் நம்மைச் சற்று ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றது. அதற்கு முன்னதாக யார் இந்த பெயல்செபூல் என்பதை அறிந்துகொள்வோம். பண்டைய கானான் மற்றும் பெனிக்கே நாட்டில் வணங்கப்பட்ட உயர்ந்த கடவுளின் பெயர்தான் பாகால். நீதிபதிகள் காலத்தில் யூத மத வாழ்வில் பாகால் வழிபாட்டு முறை ஊடுருவியது (காண்க. நீதி 3:7). பின்னர் ஆகாபின் ஆட்சியின் போது இஸ்ரேலில் இது பரவலாகக் காணப்பட்டது (காண்க 1 அர 16:31-33) மேலும் இது யூதாவையும் பாதித்தது (காண்க. 2 குறி 28:1-2). பாகால் என்ற வார்த்தையின் அர்த்தம் "இறைவன்"; பன்மை பாலிம். பொதுவாக, பாகால் ஓர் உற்பத்தி செய்யும் கடவுளாக இருந்தது. அதனால் பூமியில் பயிர்களை உற்பத்தி செய்யவும், மக்கள் மற்றும் குழந்தைகளை உருவாக்கவும் முடியும் என்று நம்பப்பட்டது. வெவ்வேறு பகுதிகள் பாகாலை வெவ்வேறு வழிகளில் வழிபட்டன. பாகால் வழிபாடு சிற்றின்பத்தில் வேரூன்றியது மற்றும் கோயில்களில் சடங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டது. சில வேளைகளில், பாகாலைத் திருப்திப்படுத்த மனித பலியும் தேவைப்பட்டது. பொதுவாக, பலி செய்பவரின் முதல் குழந்தை (எரேமியா 19:5) பலியாகக் கொடுக்கப்பட்டது..

இங்கே இடம்பெறும் பெயல்செபூப் அல்லது பெயல்செபூல் எனப்படும் புறவினத்துத் தெய்வத்தைத்தான் இயேசுவோடு ஒப்பிட்டுப் பேசுகின்றது பரிசேயக்கூட்டம். இதைத் தொடர்ந்துதான் இயேசு, தன்னைப் பெயல்செபூலோடு ஒப்பிட்டுப் பேசுபவர்களுக்குப் பதிலடிக் கொடுக்கின்றார். நாம் காணும் இந்த நிகழ்ச்சி இயேசு பிறந்து வளர்ந்த ஊராகிய நாசரேத்தில்தான் நடைபெறுகிறது. 'இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்' என்றுதான் இன்றைய நற்செய்தித் தொடங்குகிறது. ஆக, இயேசுவைப் பற்றி அம்மக்கள் கேள்விப்பட்டிருந்திருக்க வேண்டும். அதனாலேயே இந்தக் கூட்டம் அவரைச் சூழத்தொடங்குகிறது. அதுமட்டுமன்றி, எப்படியாவது நாம் நோய்நீங்கி நலம்பெற வேண்டும் என்ற ஆசையினாலேயே அவர்கள் இயேசுவைத் தேடிவருகின்றனர். மேலும் இந்த நெருக்கடியான வேளையில் இயேசுவுக்கு உணவு உண்ணக்கூட நேரமில்லை. ஊருக்கு வந்தவர் வீட்டிற்கு வராமல் எங்கே போனார் என்று அவரது உறவினர்கள் தேடியிருந்திருக்கலாம், அல்லது அவரைக் குறித்து விசாரித்திருந்திருக்கலாம். அந்நேரத்தில் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறியவரும்போது அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று அறிந்தே அவருடைய உறவினர், அவரைப் பிடித்துக்கொண்டு போவதற்கு வருகிறார்கள். இந்தச் சந்தர்பத்திற்காகவே காத்துக்கொண்டிருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். இங்கே மதிமயங்கிவிட்டார் என்பது, அவர் ஆற்றிவருகின்ற வல்ல செயல்களையும் அதனால் கூடுகின்ற கூட்டத்தையும் பார்த்து ஒருவேளை இந்த வார்த்தையை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். மேலும் இந்த வல்ல செயல்கள் வழியாகத் தற்பெருமையும் தற்புகழ்ச்சியும் கொண்டு, சாப்பிடுவதைக் கூட விட்டுவிட்டு இப்படி செய்கிறார் என்ற தவறான அர்த்தத்தில் கூட அவர்கள் இந்த வார்த்தையைப் கூறியிருக்கலாம். ஆகவே, இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மறைநூல் அறிஞர், இயேசுவை பெயல்செபூலுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். இவர்களின் இந்தப் பேச்சுக்குப் பொறாமையும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர் பின்னால் போனது பெரும்கூட்டம்!

இது ஒருபுறம் இருக்கட்டும். மறுபுறம் இயேசு கொடுக்கின்ற விளக்கத்தை பார்க்கும்போது நாம் பலவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது. குறிப்பாக, தூய ஆவிக்கும் தீய ஆவிக்கும் இடையேயான வேறுபாட்டை மிக நன்றாகவே அறிந்துணர்ந்துகொள்ள முடிகிறது. இப்போது இயேசு கூறும் விளக்கத்திற்குச் செவிமடுப்போம். "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு." என்கின்றார் இயேசு. எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் இடையேதான் பிளவும் பிரிவும் இருக்க முடியும். தீமை தீமையை எதிர்க்க முடியாது, நன்மை நன்மையை எதிர்க்க முடியாது. ஒரு நல்லவன் இன்னொரு நல்லவனை எதிர்க்கமாட்டான். ஒரு தீமையாளன் இன்னொரு தீமையாளனை எதிர்க்க மாட்டான். இதுதான் இயல்பு. “நான் இறைமகன். எனக்கு எதிரானவன் சாத்தான்” என்றும், “நானும் சாத்தானும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியாது” என்றும் எல்லோரையும் அழைத்து தெளிவுபடுத்துகிறார் இயேசு. இங்கே பெயல்செபூலைத்தான் சாத்தானுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். இதற்கோர் எடுத்துக்காட்டாக அரசையும் வீட்டையும் சுட்டிக்காட்டுகிறார். ஒருவேளை அத்தகைய நிலை ஏற்படுமேயானால் அங்கே பேரழிவுதான் நிகழும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். "முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்." என்ற எடுத்துக்காட்டில்,  தன்னை வலியவனாகக் காட்டிக்கொள்ளும் இயேசு, ஒருபோதும் சாத்தானால் தன்னை வெல்ல முடியாது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

மேலும் "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால், மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” என்று இறுதியாக இயேசு கூறும் வார்த்தைகள் நாம் ஒருபோதும் தூய ஆவிக்கு எதிராகச் செயல்படக்கூடாது என்று நம்மை எச்சரிக்கின்றன. காரணம், தூய ஆவியும் தீய ஆவியும் வெவ்வேறு. அவைகள் இரண்டும் ஒரே உறைக்குள் இருக்க முடியாத வாள்கள். அதாவது, நன்மையும் தீமையும் இணைந்திருக்க முடியாது. இங்கே மறைநூல் அறிஞர் தன்னை பெயல்செபூலுடன் ஒப்பிட்டுப் பேசியது, தூய ஆவிக்கு எதிரானதாகக் கருத்தியதாலேயே இயேசு இவ்வாறு கடுமையாகப் பதில் கொடுக்கின்றார். மேலும் தன்னிடம் நம்பிக்கைகொள்ளாத யூதரிடம், "சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில், அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை" (யோவா 8:44-45) என்று யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவதையும் பார்க்கின்றோம். இதிலிருந்து சாத்தானின் செயல்கள் என்னவென்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். ஆக, கடவுளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் அனைவரும் தீய ஆவிக்குரியவர்கள். இத்தகைய செயல்பாடுகளைக் கொண்டவர்கள் தூய ஆவியாரைப் பழித்துரைக்கும்போது அவர்கள் மன்னிப்புப் பெறமுடியாத அளவிற்குத் தீராதப் பாவத்திற்குக்குள் விழுவார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே, தீய ஆவிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு தூய ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்வோம். தூய ஆவியின் துணைகொண்டே தீய ஆவியை வெல்ல முடியும் என்பதையும் நம் மனதில் நிறுத்துவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2024, 12:37