பொதுக் காலம் 11-ஆம் ஞாயிறு : விருட்சமாகும் விதைகளாவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசே 17:22-24 II. 2 கொரி 5:6-10 III. மாற் 4:26-34 )
பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறையாட்சி என்பது என்ன, அது எப்படி கண்ணுக்குத் தெரியாமல் மிகவும் பிரமாண்டமாக வளர்ச்சியடைகிறது, அது எத்தனை வகையான மக்களைச் சென்றடைகிறது என்பது குறித்தெல்லாம் ஒரு சிறிய விதை வழியாக விளக்க முற்படுகிறது. பொதுவாக, மரங்களுக்கும் ஆயுள் உண்டு. பெரும்பாலான மரங்கள் 50 முதல் 200 ஆண்டுகள் வரை சாதரணமாக உயிர் வாழக் கூடியவை. ஆனால் ஒரு சில மரங்கள் இருக்கின்றன. அவை சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி இன்றைய காலம் வரை அனைத்து நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உலகின் உயரமான மரங்கள் அனைத்தையுமே செகோயா இனம் என்றுதான் அழைக்கின்றோம். இந்த மரங்கள் கிடுகிடுவென 380 அடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் அகலம் 26 அடி இருக்கும். இதன் ஆயுள் 2,200 ஆண்டுகள் இவற்றின் விதைகள் மட்டுமல்ல கிளை ஒடிந்து விழுந்தால் கூட அது இன்னொரு மரமாக முளைக்கும். ஒரு மரமே விழுந்தால் அங்கு ஒரு காடே உருவாகும். இயற்கையை மையமாக வைத்தே இறையாட்சியைக் குறித்து முதல் வாசகத்தில் இறைத்தந்தையும், மூன்றாம் வாசகத்தில் அவரது அன்புமகன் இயேசுவும் விளக்குகின்றனர். மனிதர்களின் வளர்ச்சியை விட மரங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கின்றது. மனிதர்களின் ஆயுள்காலத்தைவிட மரங்களின் ஆயுள்காலம் அதிகமாக இருக்கிறது. மனிதர்கள் சுயநலம் கொண்டவர்கள், ஆனால் மரங்கள் பொதுநலம் கொண்டவை. மனிதர்களின் உறவு சுருங்கியவை, ஆனால் மரங்களின் உறவு பெருகியவை. அதாவது, மனிதர்கள் ஒருகுறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்கிறார்கள், ஆனால் மரங்கள் எல்லை கடந்து வரும் எல்லாருக்கும் பயன்தருகின்றன. இப்படிப்பட்ட மரங்களைப் போல எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து வகையான மனிதருக்கும் பயன்தருவது இறையாட்சி என்பதை உணர்த்தவே இன்றைய உவமைகள் கையாளப்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்வோம்.
தானாக முளைத்து வளரும் விதை
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, தானாக முளைத்து வளரும் விதை குறித்து பேசுகின்றார் இயேசு. “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்கின்றார் இயேசு. இங்கே இயேசு இறையாட்சியைத் தானாக வளரும் விதைக்கு ஒப்பிடுகிறார். விதை என்பது உள்ளார்ந்த சக்தியைக் கொண்ட ஓர் இயற்கை விந்தை என்ற பொருளில் இயேசு இங்கே இப்படிக் கூறுகின்றார். விதை முளைத்து தானாகவே வளரத் தேவையான நிலத் தகுதிகள் எல்லாம் இயற்கையாகவே அதற்குக் கிடைக்கின்றன. இங்கே இறையாட்சி என்பது முழுக்க முழுக்க இறைவனின் செயல் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார். சீடர்களின் பணிகள் ஓரளவிற்குத் தேவை என்றாலும், அப்பணிகளையும் தாண்டி இறையாட்சி மக்களிடையே வளர்ச்சியும் எழுச்சியும் பெற முடியும் என்பதை இவ்வுவமையின் வாயிலாக எடுத்துரைக்கின்றார் இயேசு. எடுத்துக்காட்டாக கடவுளால் படைக்கப்பட்ட இந்த இயற்கையை மனிதரால் உருவாக்க முடியுமா? ஆனாலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து பராமரிப்பதிலும் மனிதரின் ஒத்துழைப்பைத்தான் இறைவன் எதிர்பார்கின்றார். ஆக, இறையாட்சி என்பது இறை-மனித கூட்டொருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கவேண்டும் என்பதை கடவுள் விரும்புகின்றார். கடவுள் தமது இறைவாக்கினர்களை அழைத்து, அவர்கள் வழியாகச் செயல்பட்டு இஸ்ரயேல் என்ற இனத்தின் வழியே தம்மை வெளிப்படுத்தினார் என்பதை விவிலிய வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் அதேவேளையில், இதையும் தாண்டி மற்ற எல்லா மக்களிடையேயும் மிக அமைதியாகவும் படிப்படியாகவும் இறையாட்சி செயல்பட்டுள்ளதை நாம் மறுப்பதற்கில்லை. ஆக, இறையாட்சி என்பது எவ்வித ஆராவாராமும் இல்லாமல் வளர்ந்து முழுமைபெறும் வலிமையைக் கொண்டது என்பதை இவ்வுவமையின் வழிநின்று எடுத்தியம்புகின்றார் இயேசு.
கடுகு விதை
இரண்டாவதாக கடுகு விதை பற்றி குறிப்பிடுகின்றார் இயேசு. “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” இது இயேசு கூறும் முதல் உவமையுடன் மிகவும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. சிறப்பாக, இந்த உவமையின் வழியாக, விதையின் மிகச் சிறிய தன்மையும் அதன் விளைவின் மிகப் பெரிய தன்மையும் இங்கே ஒப்பிடப்பட்டுள்ளன (காண்க. மத் 13:31-32; லூக் 13:18-19). இயேசு வழங்க வந்த இறையாட்சி என்பது, அவருடைய உயிர்ப்புக்குப் பிறகும் அனைத்துலகிலும் பரவ வேண்டும் என்ற செய்தியை நம் அனைவருக்கும் வழங்க விழைகிறார் புனித மாற்கு. அதேவேளையில் தொடக்ககால திருஅவையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட நற்செய்தி படிப்பினைகளை விரிவாக்கவும், அனைத்துலகிலும் நற்செய்திப் பணிகளை ஆற்றவும், நற்செய்தியாளர் மாற்கு கொண்டிருந்த ஆர்வமும் ஆதங்கமும் இங்கே வெளிப்படுகின்றன என்பது சில விவிலிய ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களாக ஒலிக்கின்றதன.
மாற்கு நற்செய்தியாளர் குறிப்பிடும் கடுகு விதை பாலஸ்தீனத்தில் பரந்து விரிந்ததொரு செடியாக மாறும் தன்மைகொண்டது. பல்வேறு பறவைகள் இத்தகைய செடிகளில் வந்து தங்குவதையும் நடைமுறையில் மக்கள் கண்டுள்ளனர். ஆனால், இங்கே மாற்கு குறிப்பிடும் வானத்துப் பறவைகள் பிற இனத்து மக்களைக் குறிப்பிடும் ஓர் உருவகச் சொல்லாக அமைந்துள்ளது. இதனைத்தான் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.' மேலும் தானியேல், எசேக்கியேல் போன்ற இறைவாக்கினார்களும் இதே கருத்துக்களைக் கூறியுள்ளனர் (காண்க. தானி 4:10-12, 21-27; எசே 17:22-24). குறிப்பாக, பாபிலோனிய அரசர் நெபுகத்னேசரின் இரண்டாம் கனவிற்கு விளக்கமளிக்கும் இறைவாக்கினர் தானியேல், கடவுளின் இறையாட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் அதற்கு எடுத்துக்காட்டாக அம்மன்னரையும் அடையாளப்படுத்துகின்றார். அப்பகுதியை இப்போது வாசிப்போம். "நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய் வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்திருந்தது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம். அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன. மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன. அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது. அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன. அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல; மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம். உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது. உமது ஆட்சி உலகின் எல்லைகள் வரை பரவியுள்ளது" இங்கே வேற்றினத்து அராசராகிய நெபுகத்னேசர் எல்லாருக்கும் தனது இறையாட்சியில் இடமுண்டு என்று கூறும் ஒப்பற்ற அரசராம் இயேசுவை அடையாளப்படுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
மேலும் கடுகு விதையானது மிகவும் சிறியது. அதைவிட சிறிய விதைகளும் உள்ளன. கடுகு விதை ஒரு உணவுத் தானியமல்ல. உணவுக்கு வாசனையைக் கொடுப்பதற்காக இதைச் சேர்ப்பர். இந்த விதைகள் ஐந்தடி உயரம் வளரும் தன்மை உடையது. காட்டுக்கடுகு விதையானது 10 அடியில் இருந்து 15 அடி வரை வளரும் தன்மையுடையது. கடுகு விதையானது கடுமையான வெப்ப பகுதியில் கூட வளரும் தன்மைகொண்டது. 8 இஞ்ச் மழை இருந்தாலே கடுகு செடிக்குப் போதுமானது. இமயமலையின் குளிரான பகுதியிலும் கடுகுச் செடி வளரும். அதுமட்டுமன்றி, கடுகு செடியானது எந்தச் சூழ்நிலையிலும் பிழைத்து நிற்கும் தன்மையுடையது. இதன் பின்னணியிலும் இயேசு கூறும் இறையாட்சி என்பது எந்தச் சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
இறுதித் தீர்ப்பு
மூன்றாவதாக, இறுதித் தீர்ப்புக் குறித்து இயேசு பேசுகிறார். அதாவது, விளைச்சலுக்கேற்ற பயன் கிடைத்துள்ளதா என்பதை அறிந்துகொள்வது. அதனால்தான், "பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று இந்த உவமையின் இறுதியில் கூறுகின்றார் இயேசு. மேலும் ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், "பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன். ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்" என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைத்தந்தை உரைப்பதையும் பார்க்கின்றோம். ஆக. இறையாட்சியை தங்களது வாழ்வாலும் சொல்லாலும் அறிவிக்கும் பணிக்கு அழைக்கப்பட்ட தனது சீடர்களும் நேரிய உள்ளமுடன் விளங்கிட வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் அவர் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிக் கூறுகின்றார்.
இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் இயேசுவின் இறையாட்சியில் விதைக்கப்பட்ட விதைகளாக இருக்கின்றோம். இயேசுவைப் போல நாமும் விருட்சமாகி வீரியமுடன் பயனளிக்க அழைக்கப்படுகிறோம். அதாவது, இயேசுவிடம் விளங்கிய இறையாட்சிக்கான கொள்கைகளையும் விழுமியங்களையும் நமது வாழ்வில் சுமந்து அவற்றை வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம். ஒருவேளை, இறையாட்சியை அறிவிக்கும் நமது கடமைகளில் செழித்து வளர்ந்து பலன்தராத செடிகளாகவும் மரங்களாகவும் இருப்போமேயானால் அதற்குரிய தண்டனைகளும் நமக்குக் கிடைக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. கிறிஸ்தவர்கள், இறைபணியாளர்கள் என்ற பெயர்களைத் தாங்கிக்கொண்டு பயன்தராத செடிகளாக வாழ்வோமேயானால் நமது இறுதித்தீர்ப்பு நாளிலே அதற்குரிய தண்டனையை நாம் பெறுவது உறுதி என்பது நமது நினைவில் நிறுத்தப்பட வேண்டும். இதனடிப்படையில்தான், "நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம். ஏனெனில், நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் நமக்கு அறிவுறுத்துகின்றார். இறுதியாக கவிஞர் அப்துல் ரகுமானின் கவிதை வரிகளுடன் நமது இன்றைய ஞாயிறு மறையுரையை நிறைவு செய்வோம்.
"நீ சிறிய விதைதான்,
ஆனால் உனக்குள் ஒளிந்திருக்கின்றது பிரமாண்டமான மரம்.
பாறைகளைப் பிளந்துசெல்லும் சக்தி உன் வேர்களுக்கு உண்டு.
உன் உயரம் கண்ணுக்குத் தெரியும் அடிமரத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை.
ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஆணிவேரிலிருந்து ஆரம்பிக்கிறது.
உன் வேர்களுக்குப் பூமியும் எல்லை இல்லை.
உன் வேர்கள் மர்ம இருள்களின் ஆழங்களிலிருந்து நீர் அருந்தட்டும்.
உன் கிளைகள் நட்சத்திரங்களை நோக்கி கிளை விரிக்கட்டும்.."
ஆகவே, இயேசுவின் இறையாட்சியைப் பரப்புரை செய்யும் நமது பணியில், எல்லா மக்களுக்கும் பயன்தரும் செடிகளாக, மரங்களாகச் செழித்து வளர்வோம். இந்த அருளுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்