தமிழக ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு பொன்விழா!
அண்மையில் (26.05.2024) தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு பொன்விழா நிகழ்வுகளில் 18 மறைமாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் இயக்க உறுப்பினர்கள் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இளைஞர் பணிக்குழுவின் தலைவர் மேதகு ஆயர் நசரேன் சூசை, தூத்துக்குடி மேனாள் ஆயர் யுவான் அம்புரோஸ் ஆகிய இருவரும் அன்றைய நாள் முழுவதும் அனைத்து நிகழ்வுகளிலும் உடனிருந்து இளைஞர்களை உற்சாகப்படுத்தியது இளைஞர் பணிக்குழுவிற்கு புதிய ஆற்றலை அளித்துள்ளது.
மே 26, ஞாயிறு அன்று திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ் திருமண மண்டபத்தில் இளைஞர் பணிக்குழுவின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நிறைவு கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றவேளையில், அதன் மூன்றாவது அமர்வில் திருச்சி மாறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய ராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் நீதிநாதன் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் யுவான் அம்புரோஸ், இளைஞர் பணிக்குழுவின் தலைவர் மேதகு ஆயர் நசரேன் சூசை, இளைஞர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி. மார்ட்டின் ஜோசப், மேனாள் செயலர் அருள்பணி. இராபர்ட் சைமன் மற்றும் அனைத்து மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுக்களின் செயலர்கள் இணைந்து திருப்பலியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு இறையாசீர் பெற்றுத்தந்தனர்.
இளைஞர் பணிக்குழுவைத் தன் சமூகப் பங்களிப்பில் உச்சத்தைத் தொடச்செய்த பேரருட்பணி பாக்கியநாதன் அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட “பேரருட்பணி. பாக்கியநாதன் இளைஞர் நல நிதி”, இளைஞர்களின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில், தமிழ்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் ஒயிலாட்டம், கோலாட்டம், பறை, விழிப்புணர்வு பாடல்கள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
ஐம்பது ஆண்டுகளில் கத்தோலிக்க இளைஞர் இயக்கங்களில் வளர்ந்த இளைஞர்கள், இளம் மாணாக்கர்களில் சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பாராட்டும் விதமாக ‘நம்பிக்கை தூதுவர்’ விருது 50 சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்