ஆசிய நாடுகளில் குறையும் மதச் சுதந்திரம்!
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
2023-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக மதச் சுதந்திர அறிக்கையை ஜூன் 27, இவ்வியாழனன்று வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அவர்கள், இன்று உலகெங்கிலும் உள்ள ஒரு சில அரசுகள் தனிநபர்களைக் குறிவைத்தும், வழிபாட்டுத் தலங்களை மூடியும், ஒரு சில சமூக மக்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தும், மக்களின் மத நம்பிக்கைகளின் காரணமாக அவர்களை சிறைபடுத்தியும் துன்புறுத்துவதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கையின்படி, மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மைச் சமூகங்கள் மீது திணிக்கப்படும் மதமாற்றத் தடைச் சட்டங்கள், வெறுப்புப் பேச்சுக்கள், மக்களின் இல்லங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்படுவது போன்றவை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பிளிங்கன் அவர்கள், உணவின் அடிப்படையில் இசுலாம் சமயத்தவர் கொல்லப்படுவது மற்றும், கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் தாக்குவது உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்களும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் பிளிங்கன்.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ள இவ்வறிக்கை, இனக் குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறைகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், ஏறக்குறைய 250 வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், 60,000-க்கும் அதிகமானோர் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வறிக்கை குறித்து ஆசியா செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அருள்பணியாளர் பாபு ஜோசப் அவர்கள், இவ்வறிக்கை இந்தியாவின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது என்றும், கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்பட்ட மதமாற்றம் பற்றிய தவறான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதைத் தெளிவுபடுத்துகிறது என்றும் கூறினார்.
மேலும் இவ்வறிக்கை, ஆசிய நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்காள தேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் மதச் சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் குறித்தும் கவலை தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்