ஆப்ரிக்க கடன் குறைக்கப்பட மதத்தலைவர்கள் விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நம்பிக்கையின் யூபிலி ஆண்டாக 2025ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட உள்ள வேளையில், ஆப்ரிக்கக் கண்டத்தின் கடன் சுமை குறைக்கப்பட வேண்டும் என பன்னாட்டு அமைப்புக்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் ஆப்ரிக்க இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள்.
உலகில் G20 மற்றும் G7 என்ற முன்னேறிய நாடுகளின் அமைப்புகளுக்கும், ஐ.நா. நிறுவனத்திற்கும், IMF மற்றும் உலக வங்கி என்ற நிதி அமைப்புகளுக்கும் தங்கள் விண்ணப்பத்தை விடுத்துள்ள ஆப்ரிக்கத் தலைவர்கள், வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டியை ஆப்ரிக்க நாடுகள் வழங்கிக்கொண்டிருப்பதால், நல ஆதரவு, கல்வி மற்றும் சமூகப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரிக்காவின் 13 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் ருவாண்டாவின் கிகாலியில் கூடி விவாதித்ததன் முடிவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தில், ஏழை நாடுகளின் வளர்ச்சியை அனுமதிக்கும் வகையில் உலக பொருளாதர அமைப்பு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என கேட்டுள்ளனர்.
தங்கள் மக்களுக்கான தேவைகளை கவனிப்பதா அல்லது கடனுக்கான வட்டியை வழங்கிக் கொண்டிருப்பதா என்ற துயரம் தரும் முடிவுகளை எடுக்க முடியாமல் ஏழை ஆப்ரிக்க நாடுகள் திணறிக்கொண்டிருப்பதாகக் கூறும் மதத்தலைவர்கள், தங்கள் கடன் தொடர்புடையவைகளில் இந்த ஆண்டு மட்டும் ஆப்ரிக்கா ஒன்பதாயிரம் கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளதாகவும், நல ஆதரவு, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புத் தொடர்புடையவைகளில் ஆப்ரிக்கா செலவிட்ட தொகை இதில் மூன்றில் இரண்டு பங்கே, அதாவது ஆறாயிரம் கோடி டாலர்களே எனவும் கூறியுள்ளனர்.
2000மாம் யூபிலி ஆண்டின்போது உலக மதத்தலைவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்ததையொட்டி பணக்கார நாடுகள் ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன் தொகையிலிருந்து 13 ஆயிரம் கோடி கடனை நீக்கி நிவாரணம் அளித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆப்ரிக்க மதத்தலைவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்