புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மணிலா தலத்திருஅவை
மெரினா ராஜ் – வத்திக்கான்
கயேமி புயலால் பிலிப்பீன்ஸின் மணிலா பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலத்திருஅவையானது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான புதிய நிதி சேகரிப்புத் திட்டம் ஒன்றினைத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பேராயர் ஜோஸ் அட்வின்குலா.
பிலிப்பீன்ஸின் தலைநகரான மணிலாவில் அண்மையில் ஏற்பட்ட புயலின் பாதிப்பினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, நாடு ஒரு மனிதாபிமான பேரழிவைச் சந்தித்து வரும் நிலையில், தலத்திரு அவையின் நிவாரணப்பணிகள் பற்றி ஆசிய செய்திகளுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் மணிலா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஜோஸ் அட்வின்குலா.
ஜூலை 27 சனிக்கிழமை மற்றும் 28 ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகளில் பங்கேற்க வரும் மக்கள், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஏராளமான காணிக்கைகள் வழங்க வேண்டும் என்றும், "புயலால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகள், பசியால் வாடுபவர்கள் மற்றும் உதவி தேவைப்படும் மக்கள் அனைவரிடமும் தொடர்ந்து இரக்கத்துடன் இருங்கள்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் அட்வின்குலா.
தலத்திருஅவையின் பங்குத்தளங்களில் உள்ள இறைமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நன்கொடைகள் 2024 ஆம் ஆண்டு வரும் ஆகஸ்ட் 7 ஆம் நாளுக்குப் பின், மணிலா உயர் மறைமாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு புயலினால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கமுள்ள செயல்பாடுகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் அட்வின்குலா.
நாடு முழுவதும் ஏறக்குறைய 300 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பொழிந்து நகரமே முழ்கிய நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, பன்னாட்டு விமானப் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவுகளினால் இதுவரை ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் இறந்துள்ளனர். 6,00,000 அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்