நல்ல சமாரியர் நல்ல சமாரியர் 

தடம் தந்த தகைமை - நீரும் போய் அப்படியே செய்யும்

தன் சமயம், தன் இனம், தன் குலம் சார்ந்தவரே அடுத்தவர் என்ற கோட்டையைத் தகர்த்து எவர், எங்கே, எந்நேரத்தில் உதவிக்காக ஏங்குகிறாரோ அவரே எனக்கு அடுத்தவர் என்றவர் இயேசு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எனக்கு அடுத்திருப்பவர் யார்? என திருச்சட்ட அறிஞர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு நல்ல சமாரியர் பற்றி எடுத்துரைத்த இயேசு, நீரும் போய் அப்படியே செய்யும் என கூறினார் (லூக் 10, 29-37).

மிகப் பரந்த உலகில் மிகச் சுருங்கிய உறவுகளோடு வாழ்வது சூம்பிப்போன இதயத்தின் அடையாளம். இஸ்ரயேலர் தங்களுக்குள் தனித்து வாழ்தலை ஒரு தனித்தன்மையாகக் கொண்டிருந்தனர். அது எதுவெனில், பெண், பணம், பொருள், உறவாடல் என எல்லாம் தங்களுக்குள் மட்டும் வைத்ததோடு பிற இனத்தாரைக் காழ்ப்புணர்வோடும் கயமை மனதோடும் பார்த்தனர். எதுவாயினும் நாம், நமக்குள் என்ற குறுவுணர்வில் காலம் கழித்தனர். இங்கே, திருச்சட்ட அறிஞரின் கேள்வி இதையொட்டியதே.

இஸ்ரயேலரின் புரிதல் மற்றும் மரபின்படி ‘அடுத்திருப்பவர்’ என்றால் தங்கள் இனத்தாராகிய இஸ்ரயேலரே. மிகவும் அடுத்தவர் என்றால் நெருங்கிய உறவினர் என்றக் கருத்தியல் கொண்டிருந்தனர். ஆனால் இயேசுவின் நல்ல சமாரியர் உவமை ஒரு புதுப் பார்வையைப் புகுத்தியது. தன் சமயம், தன் இனம், தன் குலம் சார்ந்தவரே அடுத்தவர் என்ற

கோட்டையைத் தகர்த்து எவர், எங்கே, எந்நேரத்தில் உதவிக்காக ஏங்குகிறாரோ அவரே எனக்கு அடுத்தவர் என்ற ஆழ்ந்த சிந்தனை பூமிக்குள் ஏற்றப்பட்டப் புதிய இரத்தம். தேவையில் உழலும் ஒவ்வொருவரும் வேற்று உருவில் வாடும் இயேசு.

இறைவா! அடுத்திருப்பவர் யாராயினும் அருவருக்காமல் பணிவிடை செய்யும் பரந்த பார்வை தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2024, 12:50