காஷ்மீர் புல்வெளியில் மேயும் ஆடுகள் காஷ்மீர் புல்வெளியில் மேயும் ஆடுகள்  (ANSA)

தடம் தந்த தகைமை - காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே

இஸ்ரயேலரில் இயேசு குறிப்பிடும் காணாமல் போனவர்கள் யார்? அந்த இனத்திற்குள்ளேயே அந்நியராக்கப்பட்ட அனைவரும் என்றப் புரிதல் வேண்டும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இயேசு கானானியப் பெண்ணிடம், “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார் (மத் 15, 24)

தீர் - செல்வச் செழிப்பு மிக்க ஒரு கடல் வாணிபத் தளம். இதனால் அங்கு கடவுள் நம்பிக்கை சரிந்தே இருந்தது. சீதோன் – மக்கபேயர் காலத்துப் போர்களில் யூதர்களுக்கு எதிராகச் செயல்பட்ட நகர்ப்புறம். சாயம், உலோகம், கண்ணாடி உற்பத்தியினால் ஓஹோ என வாழ்ந்தனர் மக்கள். இங்கும் கடவுள் கதியற்றவராகவே கருதப்பட்டார். ஆனால் இயேசு அத்தகு மனநிலை கொண்ட மக்கள் வாழிடம் சென்றார். அங்கிருந்து தம்மை நம்பி வந்திருக்கும் இஸ்ரயேலர் சார்பாகப் பேசுவதுபோல் பேசி இரக்க உணர்வை ஊற்றெடுக்கச் செய்த யுக்தி பாராட்டுதற்குரியது.

இஸ்ரயேலரில் இயேசு குறிப்பிடும் காணாமல் போனவர்கள் யார்? அந்த இனத்திற்குள்ளேயே அந்நியராக்கப்பட்ட அனைவரும் என்றப் புரிதல் வேண்டும். கலிலேயர், பெண்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளர்கள் போன்றோர் இஸ்ரயேலரின் ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அச்சமூகத்திலிருந்து தூக்கி வீசப்பட்டவர்கள். அவர்களுக்கான வாழ்வளிக்கும் செயல்களே இயேசுவின் பணிகளுள் முதன்மையாயிருந்தது. அவர்களை ஒன்றிணைப்பதிலும் இயேசு கவனம் செலுத்தினார்.

இறைவா! ஒன்றிணைக்கும் பணியில் நான் ஓரங்கட்டப்பட்டாலும் ஒதுங்கிடாமல் பணி தொடரும் மனவுறுதி தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2024, 13:45