தேசிய நற்கருணை மாநாட்டில் ஆயர்கள் தேசிய நற்கருணை மாநாட்டில் ஆயர்கள் 

இயேசுவைப் பிறருடன் பகிர்ந்து கொள்வோம் - கர்தினால் தாக்லே

மறைப்பணி என்பது வெறும் வேலை அல்ல, மாறாக தன்னையேப் பிறருக்குக் கொடுப்பதற்கான ஒரு வழி

மெரினா ராஜ் - வத்திக்கான்

நற்கருணைத் திருவிருந்தில் இயேசுவின் உடலைத் தொட்டு உண்டு, சுவைத்து, அவரது இறைவார்த்தைக்கு செவிசாய்த்து மகிழும் நாம், அதனைக் கட்டாயம் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும்,  இயேசு கிறிஸ்துவின் பரிசைப் பெற்றுக்கொண்டவர்கள் ஒவ்வொருவரும் அவரை முழு ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் உலக வாழ்விற்காக அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய நற்கருணை மாநாட்டில் கலந்துகொண்டு திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரும், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

தேசிய நற்கருணை மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் திருத்தந்தையின் ஆசிரையும் வாழ்த்துக்களையும் எடுத்துரைத்து தனது மறையுரையைத் துவங்கிய கர்தினால் தாக்லே அவர்கள், மறைப்பணி மற்றும் பரிசு, இயேசுவின் பிரசன்னத்தை விட்டு விலகி இருத்தல்,  நற்கருணையின் மறைப்பணியாளர்கள் என்ற மூன்று தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கும் வார்த்தைகள் அவர் அனுப்பப்பட்டவர் என்ற உணர்வினை எப்போதும் உடையவராகக் காணப்பட்டார் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், பணிஆர்வம் எனும் ஆழமான உணர்வு கொண்டவராக இருந்தார் என்றும் எடுத்துரைத்தார்.

மறைப்பணி என்பது வெறும் வேலை அல்ல மாறாக தன்னையேப் பிறருக்குக் கொடுப்பதற்கான ஒரு வழி என்றும், இயேசு தன்னையேக் கையளித்ததன் வாயிலாக தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை நிறைவாக்கினார் என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.

இயேசுவோடு தங்க விரும்புபவர்கள் இயேசுவால் அவர் பணி செய்ய அனுப்பப்படுவார்கள், அவருடைய உடனிருப்பு நமக்கான அன்பின் பரிசு என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், நாம் பெற்றுகொண்ட இயேசுவை நமக்குள்ளே வைத்திருப்பது உண்மையான சீடத்துவமாகாது, மாறாக அதனைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2024, 13:38