ஈராக் தலத்திருஅவைத் தலைவர்கள் ஈராக் தலத்திருஅவைத் தலைவர்கள்  (AFP or licensors)

மத்திய கிழக்கின் அமைதிக்கான வழி இரு நாடுகள் என்ற கொள்கையே

கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள் : இஸ்ராயேல், பாலஸ்தீனம் என இரு நாடுகள் அருகருகே அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழ முடியும் என்பதே மத்திய கிழக்கு அமைதி தீர்வு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஈராக்கின் பாக்தாத் நகரில் தங்கள் ஆண்டு ஆயர் மன்றக் கூட்டத்தை நிறைவுசெய்த கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள், காசா போரால் அதைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு,  அப்பகுதியின் நீடித்த அமைதிக்கான ஒரே வழி இரு நாடுகள் என்ற கொள்கையே எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

காசாவில் இடம்பெறும் போர் மத்தியகிழக்குப் பகுதி முழுமைக்கும் பரந்து விரியும் ஆபத்து உள்ளதை சுட்டிக்காட்டும் கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள், இஸ்ராயேல், பாலஸ்தீனம் என இரு நாடுகள் அருகருகே அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழ முடியும் என்பதே தீர்வாக இருக்க இயலும் என தெரிவித்தனர்.

கல்தேய முதுபெரும் தந்தை, கர்தினால் ரபேல் சாக்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆயர்மன்றக் கூட்டத்தில், மத்தியகிழக்கு முழுவதும், குறிப்பாக புனித பூமியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டது.

அனைத்து விதமான வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவிப்பதோடு, போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி நடவடிக்கைகளை அனைத்துலக சமுதாயம் ஊக்குவிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ளனர் கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள்.

மத்தியக்கிழக்குப் பகுதியின், குறிப்பாக ஈராக்கின் கிறிஸ்தவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இப்பகுதியைவிட்டு வேறு இடங்களில் குடியேற முயலும் நிலை குறித்தும் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2024, 14:32