மணிப்பூர் கலவர பாதிப்புகள் மணிப்பூர் கலவர பாதிப்புகள்  

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகட்டும் திட்டம்

அருள்பணியாளர் தேசியப் பேரவையின் மண்டல நிர்வாகிகள் தற்போது அதாவது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 வரை இரண்டு மாத நிதி திரட்டும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தங்கள் மறைமாவட்ட பகுதி முழுவதும் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர் : Catholic Connect

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்திய மறைமாவட்ட அருள்பணியாளர் பேரவை (CDPI) மணிப்பூரில் அண்மைய வகுப்புவாத மற்றும் இனக் கலவரங்களால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில் வீட்டுமனை மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது என்று கூறியுள்ளது உலகளாவிய கத்தோலிக்க திருஅவைக்கான சமூக வலைப்பின்னல் தளம் (Catholic Connect).

இது அருள்பணியாளர் பேரவை 2024 தேசிய கவுன்சில் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு வீடும் ஏறத்தாழ 4 இலட்சம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறது இந்த வலைப்பின்னல் தளம்.

இந்த்த திட்டம் அதிகாரப்பூர்வமாக இந்த மாதம் தொடங்கப்பட்டது என்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக அருள்பணியாளர் பேரவை அதிக நிதி திரட்ட முயல்கிறது என்றும் உரைக்கிறது இவ்வலைப்பின்னல் தளம்.

மனிதாபிமான முயற்சிக்கு நிதியளிப்பதற்காக அருள்பணியாளர் தேசியப் பேரவை, ‘மணிப்பூருக்கு குறைந்தபட்சம் ரூ. 500'  என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும், இதன்படி மறைமாவட்ட அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ரூ. 500 வழங்கிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது இவ்வலைப்பின்னல் தளம்.

"ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம் முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்" (காண்க 2 கொரி 9:7) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளால் உந்தப்பட்டு இத்தகையதொரு முடிவை அருள்பணியாளர் பேரவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது இவ்வலைப்பின்னல் தளம்.

அருள்பணியாளர் பேரவையின் மண்டல நிர்வாகிகள் தற்போது அதாவது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 வரை இரண்டு மாத நிதி திரட்டும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தங்கள் மறைமாவட்ட பகுதி முழுவதும் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது இவ்வலைப்பின்னல் தளம்.

மேலும் சேகரிக்கப்பட்ட நிதி இம்பால் உயர்மறைமாவட்டத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அருள்பணியாளர் தேசியப் பேரவையின் தலைவர்கள் அதன் பரிமாற்றத்தை மேற்பார்வையிடுவார்கள் என்றும் இவ்வலைப்பின்னல் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2024, 13:07