கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் 

திருத்தந்தையின் பயணம் சமூக மாற்றம் குறித்த உரையாடலைத் தூண்டுகிறது

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளில் சிங்கப்பூர் அதன் முதல் திருத்தந்தையின் வருகைக்கு தயாராகி வரும் நிலையில், நம்பிக்கைக்கும் பொதுக்கொள்கைக்கும் இடையிலான தொடர்பு பற்றிய உரையாடல் தீவிரமடைந்து வருகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கத்தோலிக்கச் செய்தி  (Catholic News) உடனான உரையாடலில், அதன் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் (Alex Yam) அவர்கள், சிங்கப்பூரில் உள்ள சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்குத் திருத்தந்தையின் படிப்பினைகள் எவ்வாறு வழிகாட்டுகின்றன என்பது பற்றிய தனது உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

திருத்தந்தையின் வருகையையொட்டி, சமூக நீதி, குடும்ப விழுமியங்கள் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் பற்றிய விவாதங்களும் இடம்பெற்றுவரும் வேளை, தனது அரசியல் பணியில் மத விழுமியங்களை ஒருங்கிணைக்கும் சிறந்த மனிதராக நன்கு அறியப்பட்டவரான யாம் அவர்கள், ஒவ்வொரு தனிநபரின் மனித மாண்பையும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் இவ்வுரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்கர்களாகிய நாம், ஒவ்வொரு நபரின் மனித மாண்பையும் நிலைநிறுத்த அழைக்கப்படுகிறோம் என்றும், அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகள், கண்ணோட்டம் அல்லது பாலியல் நோக்குநிலை (sexual orientation) எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் கடவுளின் சாயலிலும் உருவிலும் உருவாக்கப்பட்டுள்ளோம் என்றும் யாம் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அப்போஸ்தலிக்க அறிவுரைகளான ‘நற்செய்தியின் மகிழ்வு’ (The Joy of the Gospel), ‘அன்பின் மகிழ்வு’ (The Joy of Love)  ஆகியவற்றில் திருஅவையின் நிலைப்பாட்டை குறிப்பிட்ட யாம் அவர்கள், திருமணம் மற்றும் மனித பாலுணர்வின் புனிதத்தன்மை என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாரம்பரிய கத்தோலிக்கப் படிப்பினைகளை நிலைநிறுத்திய ஒரு பகுதி என்று பெருமையுடன்  குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்களை வலுப்படுத்தும், நலமான உறவுகளை மேம்படுத்தும் மற்றும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவை வழங்கும் கொள்கைகளின் அவசியத்தையும் இந்நேர்காணலில் வலியுறுத்திக் கூறியுள்ளார் யாம்.

மேலும் மனித விழுமியங்கள், ஒன்றிப்பு, பன்முகத்தன்மைக்கான மரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் கல்வி அணுகுமுறைக்குத் திருத்தந்தையின் ஒப்புதலையும், அறிவார்ந்த, உணர்வு மற்றும் ஆன்மிக வளர்ச்சியை வளர்க்கும் ஒரு முழுமையான அமைப்புக்காக அவர் வாதிட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார் யாம்.  

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் மிகவும் சமத்துவமான சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட 'ஏழைகளுக்கான விருப்பத்தேர்வு'  என்ற முன்னுரிமைக்கான தலத்திருஅவையின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டியுள்ளார் யாம்.

திருத்தந்தையின் மேய்ப்புப்பணி அணுகுமுறை விசுவாசிகளாகிய நமக்கு சமூக அநீதிகளைத் தீர்ப்பதற்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்காக வாதிடுவதற்கும், கிறிஸ்துவை நம் வாழ்வின், நமது சமூகத்தின் மற்றும் நமது நாட்டின் மையமாகக் கொண்டு உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் சவால் விடுகிறது என்று கூறியுள்ளார் யாம்.

ஒரு கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினராக, சமூக சவால்களைச் சமாளிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களுடன் நாள்தோறும் ஒத்துழைப்பதன் வழியாகத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் யாம்.

அனைவருக்கும் நீதியும் இரக்கமும் நிறைந்த உலகத்தை உருவாக்குவதில் துடிப்பான, நற்செய்தி அறிவிக்கும் மற்றும் மறைபோதகத் திருஅவையாக நாம் பயணிக்கும்போது, ​​ஒன்றிணைந்த நிலையில், இறைநம்பிக்கையால் நாம் வழிநடத்தப்படுவோம் என்பது எனது நம்பிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார் யாம்.

வரும் செப்டம்பர் 11 முதல் 13 வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், உள்ளூர் கத்தோலிக்கச் சமூகத்தால் மட்டுமல்ல, பரந்த சமுதாயத்தாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது அச்செய்தித்தாள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2024, 13:03