மதமாற்ற தடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஊர்வலம் மதமாற்ற தடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஊர்வலம்  (AFP or licensors)

கடுமையான மதமாற்ற எதிர்ப்புச்சட்டத்தை முன்மொழியும் உத்திரபிரதேசம்

வட இந்திய மாநிலமான உத்திரபிரதேசம், மத மாற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கும் நோக்கில், மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூலை 29, இத்திங்களன்று, உத்தரபிரதேச மாநில அரசு, ஜாமீன் நிபந்தனைகளை கடுமையாக்குவது மற்றும் அதிகபட்ச சிறைத்தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து ஆயுள் தண்டனையாக அதிகரிப்பது உட்பட அதன் மதமாற்ற எதிர்ப்பு சட்டங்களில் பெரும் மாற்றங்களை முன்மொழிந்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மதமாற்றப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் மதமாற்றம் தடை சட்டம்  திருத்தப்பட வேண்டும்  என்று கூறியுள்ளதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

அரசின் இந்தச் சட்ட விதிகளை மீறும் நபருக்கு 20 ஆண்டுகள் அல்லது அவரது வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அச்சட்டத்திருத்தம் கூறுவதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்திக் குறிப்பு.

வலுக்கட்டாயம், தூண்டுதல்கள் அல்லது மோசடி முறைகள் வழியாக மதமாற்றம் செய்வதை இப்புதிய சட்டத்திருத்தம் குற்றமாக்குகிறது என்றும், இது எந்தவொரு கிறிஸ்தவ போதகரின் நடவடிக்கையையும் மதமாற்றத்திற்கான தூண்டுதலாகக் கருத அனுமதிக்கிறது என்றும் கூறுகிறது அச்செய்தி.

தற்போதைய இந்தப் புதிய சட்டத்திருத்தம், புகார் அளித்தவர் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராகப் புகார் அளிக்க அனுமதிக்கிறது என்றும், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் இரத்த உறவினர்களும் புகார் அளிக்கலாம் என வழிசெய்கிறது என்றும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.

இப்புதிய சட்டத்திருத்தத்தின்படி பெரிய எண்ணிக்கையிலான மக்களின் மத மாற்றம் தொடர்பான வழக்குகளில், சிறைத்தண்டனை 3 முதல் 10 ஆண்டுகளிலிருந்து 7 முதல் 14 ஆண்டுகளாகவும், அபராதம் 50,000 ரூபாயிலிருந்து 1,00,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாநிலத்தில் தற்போதுள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகளை எதிர்கொண்ட வாரணாசி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் வினீத் வின்சென்ட் பெரேரா அவர்கள், அரசால் முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்திருத்தம் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ளதாக யூகான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் தவறான புகாரைப் பதிவு செய்யலாம் என்ற அச்சத்தால் கிறிஸ்தவர் யாரும் தனது வீடு, பொது இடங்கள், பள்ளிகள் அல்லது கோவில் உட்பட எங்கும் பாதுகாப்பாக இல்லை என்ற தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார் அருள்பணியாளர் பெரைரா.

மேலும், மோதல் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஒரு கிறிஸ்தவரை யார் வேண்டுமானாலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் அடைக்கலாம், ஏனெனில் புகார் அளிக்க அனைவருக்கும் அரசு சுதந்திரம் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் பெரைரா.

அதேவேளையில், முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தங்கள் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்றும், அவை அரசியலமைப்பு நீதிமன்றங்களின் ஆய்வில் தள்ளுபடி செய்யப்படும் என்றும், நாட்டின் தலைநகரான புது தில்லியை தளமாகக் கொண்ட கத்தோலிக்கத் தலைவர் ஏ.சி.மைக்கேல் அவர்களும் தெரிவித்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2024, 14:21