ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்த இடம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்த இடம்  (ANSA)

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் பற்றி இந்திய ஆயர்கள் கவலை

கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த துன்பகரமான நேரத்தில், உயிரிழந்தவர்கள் இறைவனில் நிறையமைதியைக் காணவும், காயமுற்றோர் விரைவில் குணம்பெறவும் செபிப்பதாக இந்திய ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்திய தலைநகர் புது டெல்லிக்கு தென்கிழக்கேயுள்ள ஹத்ராஸ் என்னுமிடத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எண்ணற்ற மக்கள் உயிரிழந்தது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.

இம்மாதம் 2ஆம் தேதி ஹத்ராஸில் இடம்பெற்ற இந்து மத நிகழ்ச்சி ஒன்றை முடித்து திரும்பும்போது கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் வெளியிடும் இந்திய ஆயர் பேரவை, இந்த துன்பகரமான நேரத்தில் தங்கள் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடுவதாகவும், உயிரிழந்தவர்கள் இறைவனில் நிறையமைதியைக் காணவும், காயமுற்றோர் விரைவில் குணம்பெறவும் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்துமத போதகர் போலே பாபா அவர்களின் சொற்பொழிவைக் கேட்க காவல்துறையால அனுமதிக்கப்பட்ட எண்பதாயிரம் என்ற எண்ணிக்கையையும் தாண்டி இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிலையில், அக்கூட்ட  நிகழ்ச்சி முடிவில், வெப்பத்தாலும், திடீரென்று இடம்பெற்ற புழுதிப்புயலாலும் மக்கள் குறுகிய வாயில் வழியாக வேக வேகமாக வெளியேற முயன்றதால் இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளன என செய்தி நிறுவனங்கள் காரணம் கூறியிருக்க, காவல்துறையின் புலன் விசாரணை முடிவுகளோ, பக்தர்கள் பலர் போதகரின் காலடி மண்ணை எடுக்கச் சென்றபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் பெரும்பான்மையினோர் பெண்கள் எனவும் தெரிவிக்கிறது உத்திர பிரதேச மாநில பெருந்துயர் துடைப்பு மையம்.

ஏற்கனவே 2008ஆம் ஆண்டு இந்தியாவின் Jodhpur மலைக்கோவிலில் இடம்பெற்ற கூட்ட நெரிசலில் 224 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2024, 15:24