ஆக்குயிலாவில் புனித கதவினை திறக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆக்குயிலாவில் புனித கதவினை திறக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – புனித கதவு

1294ஆம் ஆண்டு ஆக்குயிலா மரியன்னைத் திருத்தலத்தில், திருத்தந்தை புனித ஐந்தாம் செலஸ்டீன் திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார். அவர் தலைமைப் பணி ஏற்றவுடனேயே அத்திருத்தலத்தின் புனிதக் கதவு வழியாக நுழைந்து ஆலயத்திற்குள் செல்பவர்களுக்கு நிறைபலன் உண்டு என்று அறிவித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பு நேயர்களே பாவ மன்னிப்பிற்கும் மனம் திரும்புதலுக்கும் அடையாளமாகக் கருதப்படுகின்றது யூபிலி ஆண்டில் திறக்கப்படும் புனித கதவு. இந்த புனித கதவு திறக்கும் வழிபாட்டு முறை எப்போதிருந்து ஆரம்பமானது என்பது குறித்தும் இப்புனித கதவு திறக்கும் வழிபாட்டில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.

யூபிலி ஆண்டில் திறக்கப்படும் புனித கதவின் வழியாகக் கடந்து சென்று, தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று நிறைபலன் அடைய மனித குலத்திற்கு வலியுறுத்தப்படுகின்றது. மனிதகுல மக்கள் மறுகிறிஸ்துவாக, மீட்கப்பட்டவர்களாக வாழ இப்புனித கதவு அழைப்புவிடுக்கின்றது. பல இலட்சக் கணக்கான மக்கள் கடந்து செல்லும் இப்புனிதக் கதவானது, கிறிஸ்துவையும் அவருடைய அளவில்லாத இரக்கத்தையும் நமக்கு எடுத்துரைக்கின்றது. பெரிய ஆலயம் அல்லது வீட்டிற்கு சிறிய கதவுகள் வைக்கப்படுகின்றன. இதன் வழியாக நுழைந்தால் மட்டுமே நாம் அந்த இடத்திற்குள் செல்ல முடியும். இந்த சிறிய நுழைவாயிலின் வழியாக நுழையும் ஒருவர் இறைவன் முன் தம்மைத் தாமேத் தாழ்த்திக்கொள்ளும் பண்பில் வளர்கின்றார். இயேசுவே புனித கதவு. அவர் வழியாக நுழைந்து இறைவனை அடைபவர் மட்டுமே நிலையான வாழ்வடைவார் இறைத்தந்தையின் இரக்கமுள்ள அரவணைப்பைப் பெறுவர். இதனைக் குறித்தே இயேசுவும் யோவான் நற்செய்தியில் “நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.” என்று எடுத்துரைக்கின்றார்.

யூபிலி ஆண்டில் மக்கள் மனம்திரும்பி வாழ்வதற்கான புதிய பாதையினை ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணம் இப்புனித கதவானது தொடக்கத்தில் திறக்கப்பட்டது. உரோமில் உள்ள தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவு மற்றும் உரோமில் உள்ள ஏனைய பேராலயங்களில் உள்ள புனிதக் கதவு வழியாக நுழைபவர் பாவமன்னிப்பு பெற்று பரிபூரண பலனையும் திருத்தந்தையின் செபக்கருத்துக்களுக்காக செபித்து இறைவனின் சிறப்பு ஆசீரையும் பெறுவர் என்பது இந்த யூபிலி நாள்களில் வலியுறுத்தப்படுகின்றது.           

முதல் புனித கதவு

1300 ஆம் ஆண்டு, முதல் யூபிலி ஆண்டானது கொண்டாடப்பட்டது. அப்போதைய  திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸ் அவர்கள் முதல் புனித கதவினைத் திறந்து வைத்தார். ஆக்குயிலாவில் உள்ள கோல்லேமாஜ்ஜோ திருத்தலத்தில் உள்ள இடதுபக்கக் கதவே இப்புனிதக் கதவாகும். இப்புனிதக் கதவிற்கு ஒரு வரலாறு உண்டும் 1294ஆம் ஆண்டு இந்த ஆக்குயிலா மரியன்னை திருத்தலத்தில் திருத்தந்தை புனித ஐந்தாம் செலஸ்டீன் திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார். அவர் தலைமைப்பணி ஏற்றவுடனேயே அத்திருத்தலத்தின் புனித கதவு வழியாக நுழைந்து ஆலயத்திற்குள் செல்பவர்களுக்கு நிறைபலன் உண்டு என்று அறிவித்தார். அது தொடர்பாக Inter sanctorum solemnia எனப்படும் "மன்னிப்பு அறிக்கை" ஒன்றினையும் மக்களுக்காக வெளியிட்டார். இதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஆக்குயிலா நகரில், ஆகஸ்ட் 28, 29 ஆகிய நாள்களில் செலஸ்டின் மன்னிப்பு என்ற பெயரில் வழிபாட்டு நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் 28ம் நாள் தொடங்கும் திருப்புகழ்மாலை வழிபாட்டிலிருந்து ஆகஸ்ட் 29ம்  நாள் வரை இப்புனிதக் கதவு வழியாக நுழைந்து ஆலயத்திற்குள் செல்பவர்கள் நிறைபேறு பலன்கள் பெறுகின்றனர். இப்பலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு திருவருளடையாளம் பெற்று, திருப்பலியில் பங்குகொண்டு, திருத்தந்தையின் கருத்துக்களுக்காக மக்கள் செபிக்கவேண்டும்.

தூய பேதுரு பெருங்கோவில் புனித கதவு

தூய பேதுரு பெருங்கோவிலில் இருக்கும் புனித கதவு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது. திருத்தந்தை ஆறாம் சிக்ஸ்துஸ் டெல்லா ரோவேரோ என்பவரால் 1475 ஆம் ஆண்டு யூபிலிக்காக புனிதக் கதவு உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த புனிதக் கதவானது திறக்கப்பட்டது. யூபிலி ஆண்டிற்கு முந்தின மாதம் இந்த கதவு திறக்கப்படும். கதவினை மூடி கட்டப்பட்ட சுவரானது ஆடம்பரமான வழிபாட்டுடன் திருத்தந்தை அவர்களால் மூன்று முறை சுத்தியலினால் தட்டப்பட்டு திறக்கப்படும். இந்த புனித கதவின் வழியாக நுழையும் மக்கள் பாவமன்னிப்பு பெற்று திருப்பலியில் பங்கேற்று திருத்தந்தையின் செபக் கருத்துக்களுக்காக செபிக்க வேண்டும். அப்போது அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் பரிபூரண பலன் பெறுகின்றனர். தொடக்கத்தில் பேதுரு பெருங்கோவிலில் மட்டுமே புனிதக் கதவு திறக்கும் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உரோமில் உள்ள நான்கு பெரிய ஆலயங்களான தூய பேதுரு பெருங்கோவில், மேரி மேஜர் பேராலயம், தூய இலாத்தரன் பேராலயம், தூய பவுல் பேராலயம் ஆகிய நான்கு ஆலயங்களிலும் புனிதக் கதவு திறக்கும் முறையானது ஆரம்பமானது.       

புனித கதவு உருவாக்கப்பட்ட வரலாறு

புதிய புனித கதவு உருவாக்குவதற்கான போட்டி ஒன்று திருப்பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு நாட்டிலிருந்து ஏராளமான கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். கன்சோர்டி என்னும் கலைஞர் வெற்றி பெற்றார். புனித கதவினை ஒன்பது மாதங்களில் சிறப்பாக நிறைவு செய்தார். 3.60 மீட்டர் உயரமும் 2.15 மீட்டர் அகலமும் கொண்ட இப்புனிதக் கதவினை உருவாக்கிய விகோ கன்சோர்டி, வெண்கலவேலைப்பாடுடன் 16 விவிலிய நிகழ்ச்சிகளை அக்கதவில் வடித்தார். முதலாவதில், வானதூதர்கள் விண்ணக வாயிலின் அருகே நிற்கின்றனர். இரண்டாவதில் ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாம் ஏவாள் பாவம் செய்து வெளியேற்றப்படுகின்றனர். மூன்றாவதில் அன்னை மரியா இறைவனின் திருவுளத்திற்குத் தன்னையே அர்ப்பணித்து ஆம் என்று பதில் அளிக்கின்றார். நான்காவதில் கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவிற்கு வாழ்த்து கூறுகின்றார். ஐந்தாவதில் இயேசு திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு பெறுகின்றார். ஆறாவதில் காணாமல் போன ஆடு உவமையும், ஏழாவதில் இரக்கமுள்ள தந்தையின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. எட்டாவதில் முடக்குவாதமுற்றவன் குணமாதல் பகுதியும், ஒன்பதாவதில் பாவியான பெண் இயேசுவால் மன்னிக்கப்படும் நிகழ்வும் சித்தரிக்கப்பட்டுள்ளது. பத்தாவதில் பாவ மன்னிப்பு பெறுதல் வலியுறுத்தப்பட்டுள்ளது. பதினொன்றாவதில் பேதுரு இயேசுவை மறுதலித்தல் பகுதியும், பன்னிரண்டாவது இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வும், பதின்மூன்றாவது, உயிர்த்த தோமையாருக்கு காட்சியளித்தல் பகுதியும் இடம்பெற்றுள்ளது. பதினான்காவதில் உயிர்த்த இயேசு பிற சீடர்களுக்குக் காட்சியளித்தல் பகுதியும் பதினைந்தாவதில் சவுலின் மனமாற்றமும் பதினாறாவது திருத்தந்தையால் புனித கதவு திறக்கப்படும் நிகழ்ச்சியும் வடிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய சடங்குகளின் சிறப்பியல்பு கூறுகள்

1500 ஆம் ஆண்டின் ஜூபிலி முதல் 1950 ஆம் ஆண்டு வரை, புனித கதவு தொடர்பான சடங்குகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தன. இந்த சடங்குகள் சுவர், சுத்தியல், கரணை, செங்கற்கள், நாணயங்கள், புனித நீர், மரக்கதவு என சில குறிப்பிட்ட கூறுகளால் வகைப்படுத்தப்பட்டன.

சுவர்

1500 முதல் 1975 ஆம் ஆண்டு வரை உரோமில் உள்ள நான்கு பெரிய ஆலயங்களில் உள்ள புனிதக் கதவுகள் யூபிலி ஆண்டின் நிறைவில் வெளிப்புறமாக ஒரு சுவர் கட்டப்பட்டு மூடப்பட்டது. எனவே அடுத்த யூபிலி ஆண்டில் அதனை திறக்கும் நோக்கத்தில் அந்த சுவரானது இடிக்கப்பட்டது. ஏற்கனவே பணியாளர்களால் சுவரின் எல்லா பக்கங்களும் இடிக்கப்பட்டு கீழே விழும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாளன்று சில திருவழிபாட்டு சடங்குகள் செய்து அந்த கதவினை சுற்றிக் கட்டப்பட்ட சுவரினை திருத்தந்தை அவர்கள் இடிப்பார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான பாவச்சுவர் இடிக்கப்பட்டு மன்னிப்பு என்னும் கதவு திறக்கப்பட்டது என்பதன் அடையாளமாக இச்செயல்முறை நடைபெறுகின்றது. இந்த திருவழிபாட்டு நிகழ்வின்போது அதாவது 1974 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முந்தின நாள் அன்று புனித கதவு திறக்கப்பட்ட நேரத்தில் திருத்தந்தை தூய ஆறாம் பவுல் அவர்கள் மேல், சுவரின் இடிந்த பாகங்கள் சில விழுந்தன.

சுத்தியல்

1499 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்பு வரை திருத்தந்தையர்கள் புனித கதவினை மூன்று முறை சுத்தியல் கொண்டு அடித்து திறந்தனர். புனித கதவினை திறக்க பயன்பட்ட அச்சுத்தியல்கள் அதன்பின் மதிப்புப் பெற்றவைகளாக மாறின. 1525 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட சுத்தியல், 1575 ஆம் ஆண்டில் தங்கத்தாலான வெள்ளி முலாம் பூசப்பட்ட கைப்பிடி கொண்டதாக மாறியது.

கரணை

புனித கதவினை செங்கற்கள் கொண்டு எழுப்பப்பட்ட சுவராக கட்ட அதில் சிமெண்ட் கலவை பூச பயன்பட்டது கரணை. 1525 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட இந்த கரணையினை இறுதியாக 1950 ஆம் ஆண்டு யூபிலியின் நிறைவில் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் பயன்படுத்தினார்.

செங்கற்கள்

புனித கதவை மூடும் சடங்கில் சில செங்கற்களின் பயன்பாடு 1500 ஆம் ஆண்டு யூபிலியிருந்தே இருந்து வருகின்றது. யூபிலி ஆண்டின் நிறைவில் சுவர் முழுதாக உருவாக்கப்பட்டு அதன் இறுதி இரண்டு செங்கற்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்டு சுவராக எழுப்பப்படுகின்றது.

நாணயங்கள்

மேலும் புனித கதவின் சுவரில் சில தங்க வெள்ளி நாணயங்களைச் சேர்க்கும் வழக்கம் 1500 ஆம் ஆண்டின் இருந்து செய்யப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் நாணயங்கள் வெறுமனே சுண்ணாம்பினால் சுவரில் பதிக்கப்பட்டன. அதன்பின் 1575 ஆம் ஆண்டிலிருந்து அவை ஓர் உலோகப் பெட்டியில் சேர்க்கப்பட்டன. இந்த உலோகப்பெட்டியானது அதன்பின் சுவற்றினுள் வைக்கப்பட்டு சுவராக எழுப்படுகின்றது. இந்தப் பயன்பாடு இன்றும் நடைமுறையில் உள்ளது.

புனித நீர்

புனித நீரின் பயன்பாடு 1525 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகின்றது. புனித கதவை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் கற்கள் மற்றும் செங்கற்களை ஆசீர்வதிக்க பயன்பட்ட நீர் புனிதக் கதவைத் திறப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

மரத்தாலான புனித கதவு

தூய பேதுரு பெருங்கோவிலில் இருந்த மரக்கதவானது 1748 ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் அவர்களால் திறக்கப்பட்டது. அதன்பின் 1949 அன்று, புனித கதவானது திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்களால் வெண்கலக் கதவாக மாற்றப்பட்டது.

நானே வாயில் என்ற இயேசுவின் வார்த்தைகளை ஆதாரமாகக் கொண்டு. இந்த புனித கதவு வழிபாடானது நடைபெறுகின்றது. திருயாத்திரையாக வரும் மக்கள் புனித கதவுகளின் வழியாக நுழைவது என்பது உலக வாழ்க்கையை விட்டுவிட்டு கடவுளின் பிரசன்னத்திற்குள் நுழைவதை எடுத்துரைக்கின்றது. இறைவனை நோக்கிச்செல்லும் பாதை, தூய பாதையாக, தெளிவான பாதையாக இருக்க வேண்டும் என்பதனையும் இது வலியுறுத்துகின்றது. பாவத்திலிருந்து நிலையான வாழ்க்கைக்கும், அருள் நிறைந்த வாழ்க்கைக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அழைக்கப்படுகின்றான். யூபிலி ஆண்டிற்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நம் உள்ளமென்னும் கதவுகளை இறைவனின் வருகைக்காக திறந்து வைப்போம். நமது பழைய பாவ இயல்புகளைக் களைந்து, புனித வாழ்க்கைக்குள் நுழைய முயல்வோம். இறைவனின் பிரசன்னத்தால் இறையாசீர் பெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2024, 12:21