பசுமையான வயல்வெளி பசுமையான வயல்வெளி  (AFP or licensors)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – 1. நிலத்திற்கு ஓய்வளித்தல்

மூன்று வகை தயாரிப்புக்களை அக்கால மக்கள் இந்த யூபிலி ஆண்டின் நினைவாக செய்தனர். 1. நிலத்தை ஓய்வாக வைத்திருப்பது. 2. நிலத்தை மீட்பது, 3. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பு நேயர்களே கடந்த வாரம்  யூபிலி ஆண்டு 2025 பற்றிய தகவல்களை நமது புதிய தொடர் வழியாக அறிந்துகொண்டோம். அதிலும் குறிப்பாக அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் விவிலியப் பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய நம் நிகழ்வில் இஸ்ரயேல் மக்களின் மூன்று வகையான யூபிலி தயாரிப்புக்களில் ஒன்றான நிலத்திற்கு ஓய்வளித்தல் பற்றிக் காணலாம்.

யோபேல் என்ற சொல் ஆட்டுக்கிடாயின் கொம்பினால் எழுப்பப்படும் ஒலியிலிருந்து வந்தது என்று நாம் கண்டோம். ஒரு சில வரலாற்று அறிஞர்கள் அதனை முழுமையாக ஏற்பதில்லை. மாறாக யோபெல் என்பதை எபிரேய வேர்ச் சொல்லான யாபல் அதாவது திருப்புதல், திருப்பியளித்தல், திரும்ப அனுப்புதல் என்னும் பொருள்படும் சொல்லாக வரையறுக்கின்றனர். இங்கு திரும்ப அனுப்புதல் என்ற வார்த்தையானது அடிமைத்தளத்திலிருக்கும் மக்களுக்கு விடுதலையளித்து திரும்ப அனுப்புதலை மட்டும் குறிக்கவில்லை. கிரேக்க வார்த்தையான அபேசிஸ் என்பதனையும் எடுத்துரைக்கவில்லை மாறாக இயேசுவால் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மன்னிப்பு என்ற வார்த்தையாகக் குறிக்கப்படுகின்றது. மக்கள் தங்களது வாழ்நாளில் செய்த குற்றங்களுக்கு இறைவனின் மன்னிப்பை நாடியும் அவரது இரக்கத்தை வேண்டியும் யூபிலிகள் கொண்டாடப்பட்டன.

பிற மொழியியல் முயற்சிகள் இந்த யோபேல் என்ற வார்த்தைக்கு பல்வேறு விளக்கங்களை வழங்கியுள்ளன, ஆனால் அதன் தொடக்கம் ஒரு சமயச் சடங்காகவே இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆண்டின் பத்தாம் மாதத்தில் திஷ்ரி என்னும் இலையுதிர்காலத்தில் அதாவது நமது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிப்பூர் என்னும் வழிபாடு அக்கால மக்களால் கொண்டாடப்பட்டது. மாதத்தின் பத்தாம் நாளில் குறிப்பிட்ட ஆண்டின் தொடக்கத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக ஆட்டுக்கிடாவின் கொம்பினால் ஒலியை எழுப்பினர்.  இந்த சமயச்சடங்கான ஒலி எழுப்புதலை முன்னிலைப்படுத்தியே அந்த முழக்கமானது யோபேல் என்று அழைக்கப்பட்டது.

எபிரேய மொழியின் வேர்ச்சொற்களைக் கொண்ட அம்மொழியின் மூத்த சகோதரி என்று அழைக்கப்படும் ஃபீனீசிய மொழியில் யோபல் என்ற வார்த்தையின் அடிப்படையான மூன்று மெய் எழுத்துக்கள், அதாவது, jbl, என்ற எழுத்துக்கள் "ஆடு" என்பதைக் குறிக்கின்றன. ஆட்டுக்கிடாயின் கொம்பிலிருந்து எழும்பும் ஒலியான யோபேல் மக்களுக்கு யூபிலியின் புனிதமான நேரத்தை எடுத்துரைக்கின்றது. வெறும் சடங்காக மட்டுமன்று யூபிலி ஆண்டு முழுவதும் மக்களின் இருப்பை ஆழமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாகவும் அவ்வொலி எழுப்பப்பட்டது.

மூன்று வகை தயாரிப்புக்களை அக்கால மக்கள் இந்த சிறப்பு ஆண்டின் நினைவாக செய்தனர். 1. நிலத்தை ஓய்வாக வைத்திருப்பது. 2. நிலத்தை மீட்பது, 3. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது. அதில் நிலத்திற்கு ஓய்வளித்தல் பற்றி நாம் காணலாம்.

ஓய்வு, ஓய்வுநாள் என்பதற்கு எபிரெய மொழியில், “ஓய்வு எடுப்பது; வழக்கமாக செய்யும் செயல்களைச் செய்யாமல் நிறுத்தி வைப்பது” என்று அர்த்தம். யூத வாரத்தின் ஏழாவது நாள் அதாவது வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறைந்த நேரம் முதல் சனிக்கிழமை மாலை சூரியன் மறையும் வரை ஓய்வு நாளை அனுசரிக்க மக்கள் வலியுறுத்தப்பட்டனர். இஸ்ரயேலரின் சில திழுவிழா நாள்களும் இந்த ஓய்வுநாட்களாகவே இருந்தன. ஆலயத்தில் செய்யப்பட்ட குருத்துவப்பணிகளைத் தவிர, ஓய்வுநாளில் வேறெந்த வேலையையும் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடக்க கால இஸ்ரயேல் மக்களின் 7-ஆம் மற்றும் 50-ஆம் ஆண்டுகள் ஓய்வு  ஆண்டுகளாக அழைக்கப்பட்டன. இவ்வாண்டுகளில் மக்கள் பயன்படுத்தி வந்த நிலம் பயிர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது. இந்த யூபிலி ஆண்டில் தன்னிடம் வாங்கியக் கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று மக்கள் தங்கள் உடன் சகோதரர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஓய்வுநாள் பற்றிய திருச்சட்ட விதிமுறைகள் மிகவும் நியாயமான முறையில் கடைபிடிக்கப்பட்டு வந்தன. ஆனால், காலப்போக்கில் மதத்தலைவர்கள் வேறுபல விதிமுறைகளையும் அதனோடு சேர்த்ததால் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவற்றைக் கடைப்பிடிப்பது சற்றுக்கடினமாக இருந்தது.

ஓய்வுநாள் பற்றிய திருவிவிலிய வார்த்தைகள்

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு என்று விடுதலைப்பயண நூலும், (வி.ப 20:8) ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள். என்று லேவியர் நூலும், (லேவி 25:4) இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்” என்றார். ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ? என்ற பகுதியில் நற்செய்தியாளர் லூக்காவும், (லூ 13:14-16)  உண்பது, குடிப்பது, மற்றும் திருவிழா, அமாவாசை, ஓய்வு நாள் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறித்து எவரும் உங்களைக் குறைகூற வேண்டியதில்லை. என்று கொலோசேயருக்கு எழுதிய திருமடலில் தூய பவுலும், (கொலோ 2:16) தங்களது நூல்களில் ஓய்வுநாளைக்குறித்து எடுத்துரைக்கின்றனர்.

நாளொன்றிற்கு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 24 மணி நேரத்தில் மனிதர்களாகிய நாம், 23,040 தடவை காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கின்றோம். அதாவது 438 கன அடி காற்றை உள்ளிழுக்கின்றோம். 3.5 பவுண்டு எடை உள்ள உணவை உட்கொள்கின்றோம். 10 குவளை நீரை அருந்துகின்றோம். குறைந்தது 4,800 சொற்களைப் பேசுகின்றோம். உடலின் 750 தசைகளை அசைக்கின்றோம். நமது இதயம் 1,03,689 முறை துடிக்கின்றது. நகங்கள் 0.000046 அங்குலம் வளருகிறது. மூளையில் உள்ள கோடிக்கணக்கான செல்களில் 70 இலட்சம் செல்களைப் பயன்படுத்துகின்றோம். ஆக இவ்வளவு அணுக்கள் வேலை செய்யும் நமது உடலானது ஓய்ந்திருப்பது மிக அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வெறுமையாக இருந்த இவ்வுலகை இயற்கையின் எழில்மிகு வண்ணங்களாகப் படைத்த இறைவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தது போல மனிதர்களாகிய நாமும் ஓய்ந்திருக்க வேண்டும் என்றும், அந்த நாளை இறைவனுக்குரிய நாளாக அர்ப்பணித்து இறைப்புகழ் பாட வலியுறுத்தப்பட்டனர். பத்துக்கட்டளைகளில், “ஓய்வுநாளைத் தூயதாக அனுசரிப்பாயாக என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

1.நிலத்தை ஓய்வாக வைத்திருத்தல்

விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் நிலத்தை ஓய்வாக வைத்திருப்பது வலியுறுத்தப்பட்டது. லேவியர் நூல் 25 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது போல, யூபிலி ஆண்டில் நிலத்தில் எந்தவிதமான பயிரினையும் பயிரிடாமல் ஓய்வாக வைத்திருந்தனர். இந்த முயற்சி நடைமுறைக்கு மாறானதாகவும் செயல்படுத்த  சற்றுக் கடினமானதாகவும் இருந்தது. ஏனெனில் ஓராண்டு முழுவதும் நிலத்தில் எதுவும் பயிரிடாமல் விளைச்சல் காணாமல் இருப்பது சவாலான விடயமாக இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டுகளில் தாங்கள் உழைத்து சேர்த்த பயிர்களை வைத்து உயிர் வாழ்ந்து, யூபிலி ஆண்டில் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். அக்கால மக்கள் இக்கால மக்களைப்போல் அல்ல அவர்களின் தேவை குறைவாகவும். எளிமையான சிக்கனமான வாழ்க்கையாகவும் இருந்தது. பொருளாதார அடிப்படையில் பல்வேறு சிக்கல்கள் அக்கால மக்களுக்கு இருந்தாலும் அதனை தீர்க்கும் வழிவகைகளைப் பெற்றிருந்தனர். யூபிலி ஆண்டு என்பது அவர்களின் விருப்பமான கொண்டாட்டமாக, கனவின் அடையாளமாக, வழக்கமான வாழ்க்கை முறையை விட வித்தியாசமான வாழ்க்கை முறையை வாழும் ஒரு விழாவாகக் கருதப்பட்டது.    

பூமிக்கு அல்லது நிலத்திற்கு ஓய்வளித்தல் என்பது மனிதன் நிலத்தைப் பண்படுத்தி எந்தவிதமான விளைச்சலையும் செய்யாமல் இருப்பது. நிலம் இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கொடை, பரிசு என்பதை மக்களுக்கு உணர்த்த இம்முறை பயன்பட்டது. ஓராண்டு அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பயிரிடாமல் நிலத்தை விட்டுவைத்து அடுத்த முறை விளைச்சலுக்குப் பயன்படுத்தும்போது அதிகளவிலான அறுவடையைப் பெற முடியும் என்பதும் ஒரு காரணமாகக் கருதப்பட்டது. மனிதன் நிலத்தைப் பயிரிடவில்லை என்பதால் நிலம் எதையும் விளைவிக்காமல் இருப்பதில்லை மாறாக சிறிய அளவில், தனது பலனை மனிதனுக்கு அளித்துக் கொண்டிருக்கும். ஆக இயற்கையின் சுழற்சிகள் மனிதனின் உழைப்பை மட்டும் நம்பியிருப்பதில்லை. படைத்தவரைச் சார்ந்துள்ளது என்பதனையும் இந்த யூபிலி ஆண்டு நினைவுபடுத்துகின்றது.

ஓய்வுநாளைக் கடைபிடிக்காதோருக்கு கடவுளின் தீர்ப்பு  

தோரா நூல் குறிப்பிடும் கட்டளைகளின்படி சாபாத் எனும் ஓய்வானது நிலத்திற்கு அளிக்கப்படவேண்டும். இஸ்ரயேல் மக்கள் தோராக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமலோ, நிலத்திற்கு ஓய்வளிக்க அனுமதிக்கவில்லை என்றாலோ, அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மக்கள் நம்பினர். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற மக்கள் காத்திருப்பது போல நிலமும் தனது விடுதலைக்காக ஓய்விற்காகக் காத்திருக்கின்றது என்று நம்பினர்.  ஆண்டவரின் யூபிலி ஆண்டைக் கடைபிடிக்காமல் வாழும் மக்கள் மேல் கடவுள் ஏழு விதமான சாபங்களைத் தருவதாக லேவியர் நூல் எடுத்துரைக்கின்றது. மக்கள் கடவுளின் பேச்சைக் கேட்காது, ஓய்வுநாளை அனுசரிக்காது வாழ்ந்தால் அவர்கள் மீது திகிலையும் என்புருக்கி நோயையும் கடவுள் வரப்பண்ணுகின்றார். மேலும் மக்கள் வாழும் பகுதிகளில் காட்டுவிலங்குகள் நுழைந்து மக்களைத்தாக்கும் நிலை ஏற்படும். கொள்ளை நோயினால் மக்கள் மடிய நேரிடும். எவ்வளவு உண்டாலும் நிறைவடையாதவாறு அதீத பசியினால் மக்கள் ஆட்கொள்ளப்படுவர். உடல் சோர்வினால் துன்புற்று பெலனிழந்து போவர். எதிரிகளின் வாளுக்கு ஆளாகி நாட்டிலிருந்து துரத்தப்படுவர். இத்தகைய சாபங்களைக் கடவுள், தனது குரலுக்கு செவிசாய்க்காத மக்களுக்கு தண்டணைகளாக ஏழு மடங்காகக் கொடுக்க இருக்கின்றார்.

கொடையாகப்பெற்ற நிலம்

பண்டைய இஸ்ரயேலர் தாங்கள் வைத்திருக்கும் நிலத்தை ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கு அதன் உரிமையாளராகியக் கடவுளிடம் கையளித்து திரும்பப் பெற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. கடவுள் தான் நாம் வாழ்கின்ற இந்த பூமியின் சொந்தக்காரார் உரிமையாளர். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவரது குத்தகைக்காரர்கள் என்று எண்ணினர். அனைத்தும் கடவுளிடமிருந்து வருகிறது, நிலம் கூட கடவுளுக்குச் சொந்தமானது என்பதை விவிலியம் நமக்கு எடுத்துரைக்கின்றது. எகிப்தில் இருந்து வெளியேறிய மக்களுக்கு பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தைக் கொடுப்பதாக வாக்களித்தார். அந்த நிலத்தை அவர்கள் பராமரித்து பயிரிட்டு வாழ வலியுறுத்தினார். யூபிலி ஆண்டில் அதை மீண்டும் நினைவுபடுத்தி நாம் அனைவரும் ஒன்றுமில்லாதவர்கள். நம்மிடம் உள்ள அனைத்தும் கடவுளிடமிருந்து நமக்குக் கொடையாகக் கிடைக்கப்பெற்றது என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணரவும், அவர்களுக்கும் அவர்களது வழித்தோன்றல்களுக்கும் அதனை எடுத்துரைக்கும் விதமாகவும் யூபிலி ஆண்டில் மக்கள் செயல்பட்டனர். கொடையாகப் பெற்ற நிலத்தை கடவுளுக்கு அர்ப்பணித்து திரும்பப் பெற்று மகிழ்ந்தனர். இத்தகைய செயல்களினால் தங்களது விளைச்சலையும் அறுவடையையும் முன்பை விட பன்மடங்கு அதிகரித்தனர். மகிழ்வுடன் தங்களது வாழ்வை வாழ்ந்தனர்.

இக்கால இஸ்ரயேல் மக்களாகிய நம்மிடம் இறைவன் இந்த யூபிலி ஆண்டில் நிலத்திற்கு மட்டும் ஓய்வளிக்க வலியுறுத்தவில்லை. நமது உடலாகிய நிலத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழவும் வலியுறுத்துகின்றார். நமது உடலும் உள்ளமும் இறைவனை நினைத்து அவரை மகிழ்வுடன் போற்றிப் புகழ்ந்து வாழ வலியுறுத்துகின்றார் அதன்படி நாமும் செயல்படுவோம் படைத்த இறைவன் பதம் நம்மை அர்ப்பணித்து நம்மையே இந்த யூபிலி விழாவிற்காக ஆயத்தமாக்குவோம்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2024, 09:52