உரிமை கேட்கும் கென்ய இளையோருடன் ஆயர்களின் ஒருமைப்பாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கென்யா நாட்டில் வேலை வாய்ப்பின்மைகளாலும், கல்வி வசதிகளின்மையாலும், அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளாலும், இருண்ட வருங்காலத்தாலும் துயருறும் இளையோரின் பக்கத்தில் தாங்கள் நின்று அவர்களுக்கு ஆறுதலை வழங்க ஆவல் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அண்மை சில நாட்களாக அரசிற்கு எதிரான இளையோரின் போராட்டங்கள் இடம்பெறுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர முயலும் கென்ய இளையோரின் ஏக்கங்களைப் புரிந்துகொள்வதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் காவல்துறைக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளது மற்றும் எண்ணற்றோர் காயமடைந்துள்ளது மிகுந்த வேதனை தரும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் வன்முறை நடவடிக்கைகள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பதை எடுத்துரைக்கும் ஆயர்கள், இளையோரின் நியாயமான ஏக்கங்களோடு தாங்களும் இணைந்து பயணம் செய்ய ஆவல் கொள்வதாக மேலும் கூறியுள்ளனர்.
இளையோரின் நம்பிக்கைகளே தங்களின் நம்பிக்கைகள் எனக்கூறும் கென்ய ஆயர்கள், அனைவரும் ஒன்றிணைந்து, ஒவ்வொருவருக்குமான இறைத்திட்டத்திற்கு இயைந்த வகையில் முன்னோக்கி நடைபோடுவோம் என விண்ணப்பித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்