வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன  (ANSA)

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரழப்பு 200

கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது : யூகான் செய்தி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தென்னிந்தியாவின் கேரளாவிலுள்ள வயநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஜூலை 30, இச்செவ்வாய் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 பேர் வரை உயிரிழந்ததாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

மேலும், இந்நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 195 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், வயநாடு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் வேளை, மேலும் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல மாநில அரசு தடை விதித்துள்ளது என்றும் அரசின் செய்திக் குறிப்பு உரைத்துள்ளது.

முண்டகைப் பகுதியில் ஏறக்குறைய 50 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்,  மீட்பு குழுவினரால் இன்னும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அப்பகுதியில் பணியாற்றிவரும் அருள்பணியாளர் சுனில் ஆபிரகாம் அவர்கள், ஜூலை 30, இச்செவ்வாயன்று, யூகான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 2 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறியுள்ள வயநாடு மேப்பாடி புனித யோசேப்பு திருத்தல அருள்பணியாளர் ஆபிரகாம் அவர்கள், இறந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாடு, ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் இருந்து புலம்பெயர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது என்றும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் கவலையுடன் தெரிவித்துள்ளார் அருள்பணி ஆபிரகாம்.

இவ்வேளையில், இரண்டு கோவில்கள் மற்றும் இரண்டு பள்ளிகளை தற்காலிக முகாம்களாக மாற்ற மாநில அரசுக்குத் தாங்கள் அனுமதி அளித்துள்ளதாகவும், மீட்புப்பணிகளில் ஈடுபட அரசின் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகவும், கோழிக்கோடு மறைமாவட்டத்தின் சமூகப் பணி இயக்குநரான அருள்பணி ஆல்ஃபிரட் வடகெத்துண்டில் அவர்களும் யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

வயநாடு கேரளாவின் மிகக் குறைந்த நகரமயமாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும். அதன் மக்கள்தொகையில் 3.86 விழுக்காட்டினர் மட்டுமே நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா போன்ற அழகிய குக்கிராமங்களில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை நண்பகல் வரையுள்ள குறிப்பின்படி, இதுவரை ஏறத்தாழ 1000 பேர் மலையடிவார கிராமங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 225 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2024, 14:07