காசா கத்தோலிக்க பள்ளிமீது தாக்குதல் குறித்து கண்டனம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காசா பகுதியிலுள்ள Holy Family கத்தோலிக்கப் பள்ளி இஸ்ராயேல் துருப்புக்களால் தாக்கப்பட்டது மற்றும் அதில் நான்கு பேர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை தலைமையகம்.
இஸ்ராயேல் துருப்புக்களுக்கும் ஹாமாஸ் குழுவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களால் பொதுமக்கள் பெருமளவில் இறந்து வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிடும் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை பிதாப்பிதாவின் இல்லம், காசா நகரின் திருக்குடும்ப பள்ளி இஸ்ராயேல் இராணுவத்தால் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவிக்கிறது.
இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனிய குழுவான ஹாமாசுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களில் தங்கள் உறைவிடங்களை இழந்த பாலஸ்தீனிய குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்துவந்த கத்தோலிக்கப் பள்ளியின் இரு அடித்தள வகுப்பறைகளை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பள்ளி தீவிரவாதிகள் தஞ்சம் புகும் இடமாகவும், ஹமாஸ் குழுவால் ஆயுதங்களைத் தயாரிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இத்தாக்குதலை நடத்திய இஸ்ராயேல் இராணுவம், பொதுமக்களின் உயிருக்கு பெருமளவில் இழப்பு ஏற்படாமல் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கிறது.
கத்தோலிக்கப் பள்ளியின் மீதான தாக்குதல் ஞாயிறன்று இடம்பெற்றிருக்க, சனிக்கிழமையன்று ஐ.நா. நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில் இஸ்ராயேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் அங்கு அடைக்கலம் தேடியிருந்த 16 பேர் இறந்ததுடன் 75 பேர் காயமுற்றனர்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காசாவில் போர் துவங்கியதிலிருந்து பாலஸ்தீனிய மக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு கட்டிடங்களில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்