வழிபாட்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்   (ANSA)

பிலிப்பீன்ஸில் மணமுறிவு முயற்சி – ஆயர்கள் எதிர்ப்பு

பிலிப்பீன்ஸில் மணமுறிவை சட்டபூர்வமாக்குவது என்பது குடும்ப மதிப்பீடுகளை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என தங்கள் எதிர்ப்பை வெளியிடும் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டில் மணமுறிவை சட்டபூர்வமாக்குவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

உலகிலேயே மணமுறிவுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்காத நாடுகளாக வத்திக்கானும் பிலிப்பீன்ஸும் மட்டுமே இருந்துவரும் நிலையில், பிலிப்பீன்ஸில் மணமுறிவை சட்டபூர்வமாக்குவது என்பது குடும்ப மதிப்பீடுகளைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

மணமுறிவு பற்றி பிலிப்பீன்ஸ் சமுதாயத்தில் இடம்பெற்றுவரும் வாதங்கள் குறித்து எச்சரிக்கையை தங்கள் அண்மை அறிக்கையில் தெரிவித்துள்ள ஆயர்கள், அதன் விளைவுகள் குறித்தும் ஆபத்துக்கள் குறித்தும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

‘குடும்பத்தின் மீது கட்டப்பட்ட நாடு, திருமணத்தின் மீது கட்டப்பட்ட குடும்பம்,’ என்ற தலைப்பில் பிலிப்பீன்ஸ் ஆயர்களால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, திருமணத்தின் புனிதத்துவம் குறித்தும், மணமுறிவு என்பது சமூகத்தில் ஏற்படுத்தவுள்ள தீய விளைவுகள் குறித்தும் விவரிக்கிறது.

நாட்டின் அடித்தளமாக குடும்பம் இருப்பதாக பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசியலமைப்பிலேயே கூறப்பட்டுள்ள நிலையில், மணமுறிவை நோக்கி எடுக்கப்பட்டுவரும் எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பையே குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும் என ஆயர்கள் மேலும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

மணமுறிவு என்பது குழந்தைகளில் ஏற்படுத்தும் பாதிப்பு, உறவினர்கள் மற்றும் நண்பர் வட்டாரத்தின் நிலை, குடும்பங்களின் நலவாழ்வு, நன்னெறி கட்டுமான அமைப்பு போன்றவை குறித்தும் விவாதங்கள் இடம்பெற வேண்டும் எனக் கேட்டுள்ளனர் ஆயர்கள்.

பக்க சார்பற்ற வகையிலும், முழு தகவல்களைப் பெற்றதாகவும் எந்த ஒரு கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற வேண்டும் என அழைப்புவிடுக்கும் ஆயர்கள், சமூகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு முடிவையும் சட்டமன்ற அங்கத்தினர்கள் எடுக்கமாட்டார்கள் என்ற தங்கள் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2024, 13:01