திருத்தந்தையுடன் பாப்புவா நியூ கினி மக்கள் திருத்தந்தையுடன் பாப்புவா நியூ கினி மக்கள் 

பாப்புவா நியூ கினி திருஅவை பன்முகக் கலாச்சாரம் கொண்டது

பாப்புவா நியூ கினி நாட்டில் மறைப்பணியாளர்களின் வருகைக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளபோதிலும், இன்னும் சவால்கள் உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாப்புவா நியூ கினி நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது அங்கு பன்முகக் கலாச்சாரமும் உறுதியும் உடைய ஒரு திருஅவையைத் சந்திப்பார் என்றார் திரு இருதய மறைப்பணியாளர் சபையின் தலைவர், அருள்பணி Mario Abzalón Alvarado Tovar.  

விசுவாசத்தை மிக உறுதியான முறையில் கடைபிடிக்கும் ஒரு திருஅவையை திருத்தந்தை பாப்புவா நியு கினியில் சந்திப்பார் என்ற அருள்பணி Alvarado Tovar, மிகத்தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் பாப்புவா நியூ கினி திருஅவை, திருத்தந்தையின் பயணத்தை தங்கள் விசுவாச ஒன்றிணைந்து நடைபோடலுக்கான அங்கீகாரமாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஆசியா மற்றும் ஓசியானாவிற்கான தன் திருப்பயணத்தில் செப்டம்பர் 6 முதல் 9 வரை பாப்புவா நியூ கினியில் விசுவாசிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்பாராதவைகளின் நாடு என அழைக்கப்படும் பாப்புவா நியூ கினி திருஅவையில் பல இனங்கள், பல மொழிகள் மற்றும் பல நிற மக்களையும் சந்திப்பார் என மேலும் கூறினார் திருஇருதய துறவு சபையின் தலைவர்.

பாப்புவா நியூ கினி நாட்டில் மறைப்பணியாளர்களின் வருகைக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளபோதிலும், இன்னும் காலநிலை மாற்ற பாதிப்புக்கள், சமூகத்தின்மீது அக்கறையற்ற சுரங்கத்தொழில், சமூகத்தில் ஊடுருவும் ஏழ்மை என்ற சவால்களை மக்களுடன் இணைந்து எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார் அருள்பணி Alvarado Tovar.

இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் பாப்புவா நியூ கினியில் ஏழ்மையும், காலநிலை மாற்றமும் அதிகமாகக் காணப்பட்டு, காடுகள் அழிப்பும் சுரங்கத்தொழிலும் அதிகமாகியுள்ளதாகவும், இவைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தலத்திருஅவை எப்போதும் உடனிருப்பதாகவும் கூறினார் அருள்பணி Alvarado Tovar.

தலத்திருஅவையில் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக மகிழ்ச்சியை வெளியிட்ட அருள்பணி Alvarado Tovar, இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் விசுவாசிகள் திருத்தந்தையின் வருகைக்காக வெகு ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2024, 16:35