விவிலியத் தேடல்: திருப்பாடல் 55-1, தூய நட்பைப் பேணுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'நமது நேர்மை நிலைபெறட்டும்!' என்ற தலைப்பில் 54-வது திருப்பாடலில் 4 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 55-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'காட்டிக் கொடுக்கப்பட்டவரின் மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 23 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைப்பை வாசிக்கும்போதே, தாவீது ஏதோவொரு ஆபத்தான சூழலில் இருந்துள்ளதையும், அப்போது அவர் தமது எதிரிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. தனது மகன் அப்சலோம் விளைவித்த கலகத்தின்போதும், அவருடைய நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான அகிதோபல் அவரைக் காட்டிக்கொடுக்க முனைந்தபோதும் தாவீது இந்தத் திருப்பாடலை எழுதினார் என்பதும், பல விளக்கவுரையாளர்களின் யூகமாக அமைந்துள்ளது. குறிப்பாக, இங்கு இறையியல் அறிஞர்கள் சிலர், தாவீதின் துயரங்களை இயேசுவின் துயரங்களுடன் அதாவது, அவரது பாடுகளுடன் ஒப்பிட்டுக்காட்டுகின்றனர். அவ்வாறே தாவீதைக் காட்டிக்கொடுக்க முற்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அகிதோபலின் மரணத்தை, இயேசுவைக் காட்டிக்கொடுத்து பின்னர் அந்தத் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட யூதாசின் மரணத்தோடும் ஒப்பிட்டுக்காட்டுகின்றனர். இதுகுறித்து புதிய ஏற்பாட்டில் குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், தாவீதுக்கு ஏற்பட்ட சூழல் அதனை ஏற்க வைக்கின்றது.
இந்த மொத்த திருப்பாடலையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, கடவுளிடம் தனது கையறுநிலை குறித்து விளக்கி அவரின் பேருதவியைக் கேட்டு இறைவேண்டல் செய்கின்றார் தாவீது (வச. 1-8). இரண்டாவது, தனது எதிரிகளின் பெரும் அக்கிரமங்களையும் துரோகங்களையும் குறித்துக் கடவுளிடம் முறையிடுகின்றார் (வச. 9-15). மூன்றாவது, கடவுள் தகுந்த நேரத்தில் தனக்காக உதவிபுரிவார் என்று உறுதியாக நம்புகிறார் (வச. 16-23). இப்போது இத்திருப்பாடலில் 1 முதல் 8 வரை உள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். முதலில் அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளுக்கு செவிமடுப்போம். “கடவுளே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்; நான் முறையிடும் வேளையில் உம்மை மறைத்துக் கொள்ளாதேயும். என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும்; என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன. என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்; ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்; சினமுற்று என்னைப் பகைக்கின்றனர். கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது; சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது. அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன; திகில் என்னைக் கவ்விக்கொண்டது. நான் சொல்கின்றேன்; ‛புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே! இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!” (வச.1-8)
தாவீதின் இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும்போது நமது இதயங்களையே முள்ளால் குத்துவதுபோன்று ஒரு வலியை நமக்குத் தருகிறது அல்லவா? அப்படியென்றால், நம் தாவீது அரசருக்கு எப்படி இருந்திருக்கும்? அவரது வார்த்தைகளை மீண்டுமாகக் கூர்ந்து கவனியுங்கள். என்னே வேதனை தரும் வார்த்தைகள்! குறிப்பாக, "என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன. என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்" என்று அவர் கூறும் வார்த்தைகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. ஒரு மாபெரும் அரசருக்கே இந்தக் கதியா? அதுவும், தான் பெற்று வளர்த்த சொந்த மகனே அவருக்கு எதிராக எழுகிறானா என்ற கேள்விகள் நம் உள்ளத்தில் எழலாம். ஆனால் இவை எல்லாவற்றிலும் கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருப்பார் என்று தாவீது முழுமையாக நம்பினார். அதேவேளையில், அப்சலோமும் அவரது எதிரிகளும் அவருக்கு ஏற்படுத்திய இரணங்களும் வலிகளும் தன்னைவிட்டு எப்படியாவது நீங்க வேண்டும் என்பதே தாவீதின் உடனடித் தேவையாக இருந்தது. காரணம், அந்தளவுக்கு அவைகள் தாங்கமுடியாதவைகளாக இருந்தன என்பதுதான். பொதுவாக, ஓர் அரசரின் வாழ்வில், காட்டிக்கொடுத்தல், பழிவாங்குதல், வஞ்சகம், பழிதீர்த்தல், பொய் புரட்டு, அரியணையைக் கைப்பற்றுதல் ஆகியவை நிகழக்கூடியவைதான். ஆனால் இவைகள் தனது சொந்த பந்தங்களால் நிகழும்போது, அவைகள் தாங்கவொண்ணா துயரங்களைத் தருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.
சரி எதற்காக அவரது மகன் அப்சலோமிற்கு இப்படியொரு தீய எண்ணம் எழுந்தது என்பதை நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது. பொதுவாக, ஓர் அரசர் தனக்குப் பின் தனது மகனையோ அல்லது உறவுகளையோதான் ஆட்சி அரியணைக்குத் தேர்வு செய்வார். ஒருவேளை இந்த வாய்ப்பு தனக்குள் கிட்டாமல் சாலமோனுக்கு கிடைக்கலாம் என்று அவன் எண்ணியிருக்கலாம். இதன் காரணமாக, பழம் பழுப்பதற்கு முன்பே சுவைத்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் இந்த ஆட்சி அதிகாரத்திற்குக் கைப்பற்ற முனைந்திருக்கலாம். இங்கே நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிமான விடயம் என்னவென்றால், அவன் எப்படி சூழ்ச்சி செய்தான் என்பதுதான். "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்று வள்ளலார் கூறுவாரே, அது நமக்கு நினைவிருக்கிறதா? அது அப்சலோமுக்கு அப்படியே பொருந்தும். அப்சலோம் இரண்டு ஏமாற்று காரியங்களை செய்கிறான் முதலாவது, தனது தந்தையைவிட தான் மக்களுக்கு நன்றாக நீதி வழங்க முடியும் என்கின்றான். இதன் வழியாக அவன் மக்களின் மனங்களைக் கொள்ளைகொள்ள விரும்பினான். அப்பகுதியை இப்போது வாசிப்போம். அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான். அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்புக் கேட்க வந்தால், அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, “நீ எந்நகரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்பான். அவன், “உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குலத்தினின்றும் வருகிறேன்” என்று பதில் சொல்லுவான். அப்போது அப்சலோம், “உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால், அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை. நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால், வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதி வழங்குவேன்” என்பான். யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனைத் தழுவி முத்தமிடுவான். அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டான். (காண்க 2 சாமு 15:1-6)
இரண்டாவதாக, ஆட்சி அரியணையை கைப்பற்றுவதற்காகத் தன் தந்தை தாவீதுக்கு எதிராக அவன் செய்யும் சூழ்ச்சி! ஏறக்குறைய எல்லா சதிவலைகளையும் பிண்ணியபிறகு தனது தந்தையிடம் சென்று பொய்யொன்றைச் சொல்லுகின்றான். அப்பகுதியையும் இப்போது வாசிப்போம். நான்கு ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம்,” நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும். உமது அடியான், சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்தபோது, ‘ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன்’ என்று ஒரு நேர்ச்சை செய்தேன்” என்றான். “நலமாய்ச் சென்று வா” என்று அரசர் அவனிடம் கூற, அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான். பின் அப்சலோம் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் “நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் ‘அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார்’ என்று முழங்குங்கள்” என்று சொல்லியனுப்பினான். எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர்; வஞ்சகமின்றி, இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமுடன் சென்றனர். அப்சலோம் பலி செலுத்தியபோது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது. (வச.7-12).
இதையெல்லாம் அறிந்தபிறகுதான் இனியும் இங்கே இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சியவராக, தாவீது தனது படைப்பரிவாரங்களுடன் காட்டிற்குத் தப்பிச்செல்கின்றார். தாவீதின் மனதைக் காயப்படுத்திய இன்னொரு நிகழ்வு அகிதோபலுடைய துரோகம். காரணம், தாவீதுக்கு உற்ற நண்பராக அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்வதான் இந்த அகிதோபல். 'அந்நாள்களில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காகக் கருதப்பட்டது. இவ்வாறுதான், தாவீதும் அப்சலோமும் அகிதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்' (16:23) என்ற இறைவார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அப்படிப்பட்ட அகிதோபல் தாவீதுக்கு எதிராகக் கட்சி மாறி அப்சலோமுடன் இணைந்துகொள்கின்றார். அதுமட்டுமன்றி, தனது உற்ற நண்பராகிய தாவீதுக்கு எதிராகவும் அவரது கை ஓங்குகின்றது. அவர் கூறும் வார்த்தையாய்ப் பாருங்கள் அப்போது அதன் சாராம்சம் நமக்குப் புரியும். அகிதோபல் அப்சலோமை நோக்கி, “நான் பன்னீராயிரம் ஆள்களைத் தேர்வு செய்து இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின்தொடர்வேன். அவர் களைத்துச் சோர்ந்த வேளையில் அவர்மேல் பாய்ந்து அவரை அச்சுறுத்துவேன். அவரோடிருக்கும் மக்கள் அனைவரும் தப்பி ஓடுவர்; அரசரை மட்டும் நான் வெட்டி வீழ்த்துவேன். மக்கள் அனைவரையும் உன்னிடம் திருப்பிக் கொணர்வேன். நீ தேடும் ஒரு மனிதனைத் தவிர அனைவரையும் அழைத்து வருவேன்" (17:1-3). இதுதான் துரோகத்தின் உச்சம்! இதையெல்லாம் அறிந்துதான் தாவீது புழுவாய்த் துடிக்கிறார். “சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது. அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன; திகில் என்னைக் கவ்விக்கொண்டது. நான் சொல்கின்றேன்; ‛புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே! இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே!” என்று தாவீது கூறும் வார்த்தைகள் அவர் அனுபவித்த துரோகத்தின் வலிகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஆகவே, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனநிலையைக் களைவோம், நமது நட்பிலும் உறவிலும் உண்மைத்தன்மையுடன் இருக்கக் கற்றுக்கொள்வோம். இறைவனில் நமது நம்பிக்கையை நங்கூரமாகப் பதிக்கும்போது இவை நமக்கு சாத்தியம் என்பதையும் உணர்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்