தாவீதைக்கொல்ல முயலும் மன்னர் சவுல் தாவீதைக்கொல்ல முயலும் மன்னர் சவுல்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 56-1, கடவுளையே நம்பியிருப்போம்!

நமது அன்றாட வாழ்வில், நமது எதிரிகளாலும் பகைவர்களாலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகும்போதெல்லாம் நமது விடுதலை வேந்தனாகிய கடவுளை நோக்கி குரலெழுப்பி வேண்டுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 56-1, கடவுளையே நம்பியிருப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஆதரவளிக்கும் ஆண்டவர்!' என்ற தலைப்பில் 55-வது திருப்பாடலில் 16 முதல் 23 வரை உள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 56-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'பற்றுறுதியும் நம்பிக்கையும்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 13 இறைவார்த்தைக்காளைக் கொண்ட சிறியதொரு திருப்பாடல்தான். 'பெலிஸ்தியர் தாவீதைக் காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை அவர் பாடிய கழுவாய்ப்பாடல்' என்று அத்திருப்பாடல் துணைத் தலைப்பிடப்பட்டுள்ளதால், எந்தவொரு பின்னணியில் தாவீது இதனை எழுதினார் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மன்னர் சவுல், தாவீதை ஏன் வெறுத்தார் என்பதை நாம் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகத் தியானித்து வருகின்றோம். இந்தத் திருப்பாடலும் அதேபின்னணியில் அமைவதால் மீண்டும் ஒருமுறை அதனை நாம் நினைவுகூர வேண்டிய நிலையில் இருக்கிறோம். தாவீது கோலியாத்தை வென்ற பிறகு அவர் நகருக்குள் வருகின்றார். அப்போது பெண்கள் ஆடிப்பாடி அவரது வெற்றியைப் பாராட்டுகின்றனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத மன்னர் சவுல் தாவீதை தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றார். இரண்டுமுறை தாவீது மன்னர் சவுலிடமிருந்து தப்பி ஓடுகின்றார். முதல் முறை தப்பியோடியியதன் பின்னணியிலில்தான் இத்திருப்பாடல் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அறியவருகின்றோம். சரி, இப்போது என்ன நிகழ்கிறது என்பதைப் பார்ப்போம். அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றார். ஆனால், சவுலின் குறியிலிருந்து விலகினதால் சவுலின் ஈட்டி சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பியோடினார் (காண்க 1 சாமு 19 9-10). தப்பியோடிய தாவீது, இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு செய்த யாவற்றையும் கூறினார். பின்னர், அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர். அங்கும் மன்னர் சவுல் அவரைத் துரத்தி வர, அவர் அங்கிருந்தும் தப்பியோடி நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் வருகின்றார். தாவீது அகிமெலக்குடன் இருப்பதை சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் பார்த்துவிடுகிறான். இதை உணர்ந்துகொண்ட தாவீது, இனியும் இங்கிருந்தால் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்றெண்ணி அங்கிருந்து தப்பிச்சென்று, காத்தின் மன்னன் ஆக்கிசிடம் வருகின்றார். இவன் பெலிஸ்திய மன்னன். இங்குதான் அவருக்குப் பேரிடி காத்திருக்கின்றது. காரணம், பெலிஸ்தியரிகளின் படைத்தளபதி கோலியாத்தை சில மாதங்களுக்கு முன்புதானே தாவீத கொலைசெய்தார். அதுமட்டுமன்று, தாவீது காத்தின் மன்னன் ஆக்கிசிடம் வந்ததும் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதை இப்போது வாசிப்போம். பிறகு, தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார். ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்’ என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா” என்றனர். தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார். அப்பொழுது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், “இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள் என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தைக் காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா இவன் என் வீட்டினுள் நுழையலாமா” என்று சினமுற்றான். (1 சாமு 21:10-15). இப்படிப்பட்டதொரு இக்கட்டான சூழலிலும் நெருக்கடியான வேளையிலும் இந்தத் திருப்பாடலை பாடுகின்றார் தாவீது அரசர்.

ஆக, பேரச்சம் நிறைந்த சூழலில் எப்படி இறைநம்பிக்கையை தனது கேடயமாகப் பற்றிக்கொண்டு இறைவேண்டல் செய்கிறார் என்பதை ஒட்டுமொத்த திருப்பாடலும் நமக்கு எடுத்துரைக்கின்றது. இத்திருப்பாடல் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதற்பகுதியில் தாவீது, தனது எதிரிகள் பற்றியும், அதனால் தான் அடைந்திருக்கும் பேரச்சம் குறித்தும் கடவுளிடம் முறையிடுகின்றார். இரண்டாவதாக, தனது அடைக்கலப் பாறையாயாகிய கடவுளிடம் தனது ஆழமான இறைநம்பிக்கையை வெளிப்படுத்தி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இப்போது, முதற்பகுதியாக இத்திருப்பாடலின் முதல் ஏழு இறைவசனங்களை குறித்துத் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளை பக்தி நிறைந்த உள்ளமுடன் வாசிப்போம். “கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர். என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்; மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர். அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன். கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும் என் எதிரிகள் எந்நேரமும் என் சொற்களைப் புரட்டுகின்றனர்; அவர்கள் திட்டங்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தவே. அவர்கள் ஒன்றுகூடிப் பதுங்கி இருக்கின்றனர்; என் உயிரைப் போக்குவதற்காக என் காலடிச் சுவடுகளைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத் தப்பமுடியுமோ கடவுளே, சினம் கொண்டெழுந்து இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்” (வச 1-7)

இந்த ஏழு இறைவார்த்தைகளையும் நாம் மிகுந்த கவனமுடன் உற்றுநோக்கினால் அதிலுள்ள நான்கு நிலைகளை நம்மால் காண முடியும். இதில் முதல் இரண்டு வசனங்களிலும் தனது எதிரிகளைக் குறித்துப் பேசுகின்றார் தாவீது. மூன்று மற்றும் நான்காவது இறைவசனங்களில் கடவுள் துணையை வேண்டுகிறார். அடுத்து ஐந்து மற்றும் ஆறாவது இறைவசனங்களில் மீண்டும் தனது எதிரிகள் குறித்துப் பேசுகின்றார். இறுதியாக, ஏழாவது இறைவசனத்தில் மீண்டும் ஒருமுறை தனது எதிரிகளைக் குறித்துப் புலம்புகின்றார். ஆக, இங்கே தாவீதை குழப்பமும், கவலையும், அச்சமும்,  திகிலும் மாறி மாறிப் புரட்டி எடுக்கின்றன என்பதை நம்மால் காணமுடிகிறது. ஆனாலும் இந்த நெருக்கடியான வேளையில் அவர் ஆண்டவரின் துணையை மட்டுமே நம்பியவராக அவரில் முழுதும் சரணடைகின்றார். 'மனிதர் என்னை நசுக்குகின்றனர், சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர், கொடுமைப்படுத்துகின்றனர், என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர் பலர்' என்று அவர் கூறும் வார்த்தைகள் அவர் எந்தளவுக்கு எதிரிகளின் கரங்களில் சிக்கித்தவிக்கிறார் என்பதை நமக்கு எடுத்தியம்புகின்றன. இங்கே தாவீதை வதைப்போரை எதிரிகள் என்று நாம் கூற முடியுமா? காரணம், இந்த இரண்டு இறைவார்த்தைகளிலும் மனிதர், பகைவர் என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் தாவீது. 'மனிதர்' என்று சொல்லும்போது தாவீது மன்னர் சவுலை குறிப்பிட்டிருக்கலாம். ஏனென்றால், மன்னர் சவுல்மீது மிகவும் நன்மதிப்புக் கொண்டிருந்தார் தாவீது. அதனால்தான் அவரைக் கொல்வதற்கு இரண்டு முறை வாய்ப்புகள் கிடைத்தபோதும் கூட அதனைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளாமல் அவரைக் காப்பாற்றினார். அந்தக் காட்சியை இப்போது நம் கண்முன் கொணர்வோம். சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது; “இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான்” என்று தெரிவிக்கப்பட்டது. சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள் அவரிடம், “‘இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய்,’ என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!” என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது” என்றார். ஆதலின், தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு, சவுல் எழுந்து குகையை விட்டு தம் வழியே சென்றார் (காண்க 1 சாமு 24:1-7).

இன்றைய நம் உலகில், கிடைக்கும் வாய்ப்புகளை வசமாக்கிக்கொண்டு வாழ்வை வளமாக்கிக்கொள்ள விரும்புகின்றனர் பலர். நமது இந்தியச் சூழலில் நிகழும் அரசியலையே இதற்கொரு மாபெரும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். யார் காலைப் பிடித்து எப்படி ஆட்சிக்கட்டிலில் அமரலாம், யாரை எப்போது காலை வாரிவிடலாம், யாரை என்ன சொல்லி வசப்படுத்தலாம் அல்லது அச்சமூட்டலாம், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள எதையெல்லாம் சொல்லி மக்களைப் பிளவுபடுத்தலாம் என்பதெல்லாம் நமது இந்திய அரசியலில் நாம் நேரில் காணும் காட்சிகள். ஆனால் அன்று மன்னர் சவுல் இத்தனைத் தொல்லைகள் கொடுத்தும் கூட, தாவீது எப்படிப்பட்ட உயர்ந்த மனம் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் பாருங்கள். இதற்கு அடிப்படைக் காரணம், தான் அரசனாக வேண்டும் என்பதைவிட, தனது ஒப்பற்ற அரசராக விளங்கும் என்றுமுள்ள கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமுடையவராக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். இவ்வுலகம் தரும் வெற்று ஆசைகளுக்கும், பந்தாக்களுக்கும், பெயருக்கும் புகழுக்கும் தன்னை அடிமையாக்கிக்கொள்ளாது கடவுளுக்கு மட்டுமே தன்னை அடிமையாக்கிக்கொண்டார். தன்னை கடவுளுக்கும் மேலாகக் காட்டிக்கொள்ளும் இன்றைய வெற்றுவேட்டு அரசியல்வாதிகள் மத்தியில், கடவுளுக்கும் அவரின்  மக்களுக்கும் உண்மையுள்ள ஊழியனாக இருக்க விரும்பினார் தாவீது. அதனால்தான், "அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன். கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும்?" என்று கூறி கடவுளிடம் நம்பிக்கை கொள்கின்றார் தாவீது.

ஆகவே, நமது அன்றாட வாழ்வில், நமது எதிரிகளாலும் பகைவர்களாலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகும்போதெல்லாம் நமது விடுதலை வேந்தனாகிய கடவுளை நோக்கி குரலெழுப்பி வேண்டுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2024, 09:08