தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு போராட்டம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு போராட்டம்   (AFP or licensors)

இலங்கை ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு!

கடந்த 2019-ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான முழுமையான இழப்பீட்டை வரும் ஆகஸ்டு 30-ஆம் தேதிக்கு முன்னதாக வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள் வழங்குமாறு முன்னாள் அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஜூலை 15, இத்திங்களன்று நடந்த விசாரணையின் போது, ​​ ஏற்கனவே 5 கோடியே 80 இலட்சம் ரூபாயை இழப்பீடு அலுவலகத்திற்கு செலுத்திவிட்டதாகவும், நிலுவையில் உள்ள 4 கோடியே 20 இலட்சம்  ரூபாயை செலுத்த 6 ஆண்டுகள் அவகாசம் கோருவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சிறிசேனா அவர்கள் தெரிவித்தார் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

சிறிசேனவுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்றும், மேலும் முன்னாள் காவல்துறைத் தலைவர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெரும்பாலும் கத்தோலிக்கர்களுக்குத் தலா 7 கோடியே 50 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 உயிர்ப்பு ஞாயிறன்று 3 கத்தோலிக்கக் கோவில்கள் மற்றும் மூன்று சொகுசு தங்குமிடங்களில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் ​​270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தின்போது சிறிசேனா அவர்கள், இலங்கையின் அரசுத் தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.

இந்தத் தாக்குதல் அரசியலில் பெரும் புயலை கிளப்பியதால், இந்தக் குண்டுவெடிப்புக் குறித்து முன்னரே உளவுத்துறை அறிக்கைகள் கிடைத்தும்கூட, அரசுத் தலைவர் சிறிசேனாவும், அப்போதைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவும் இதனைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் தலைமையிலான கொழும்பு உயர்மறைமாவட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வரும் வேளை, இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கர்தினால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை மறைக்க அடுத்தடுத்த அரசுகள் முயற்சி செய்ததாகவும், குண்டுவெடிப்புகள் குறித்து அனைத்துலக விசாரணையை கோருவதாகவும் கூறியுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2024, 14:43