இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் 

இலங்கையில் குடும்ப மதிப்பீடுகளை அழிக்கும் சட்டங்கள் வேண்டாம்

சமூகத்தின் அடிப்படைக் கூறாக குடும்பம் உள்ளதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளும்போது, குடும்பங்களின் அடிப்படையைத் தகர்த்தெறிய எப்படி அனுமதிக்க முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இலங்கை மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து கவலைப்படுவதை விடுத்து, மக்களுக்கு தீங்கு தரும் சட்ட மாற்றங்களில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித்.

சட்டத்தில் திருத்தங்களைக் கொணரும் அரசின் நோக்கங்கள் குறித்து கண்டனத்தை வெளியிட்ட கர்தினால், இத்தகைய சட்ட மாற்றங்களால் குடும்ப மதிப்பீடுகள் பெருமளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற அங்கத்தினர் Premnath Dolawatta அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே பாலின திருமண அனுமதி குறித்த பரிந்துரையும், கருக்கலைத்தலை பெண்களின் உரிமையாக அரசால் முன்வைக்கப்பட உள்ள பரிந்துரையும் குறித்து கவலையை வெளியிட்ட கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இத்தகையப் போக்குகள் குடும்ப மதிப்பீடுகளை அழிவுக்குக் கொண்டுவந்துவிடும் என தெரிவித்தார்.

இவ்விரு முயற்சிகளும் பாரம்பரிய குடும்ப கட்டமைப்புக்களை குறைத்து மதிப்பிடுவதுடன், திருமணம் மற்றும் குடும்ப வாழ்வை அழித்துவிடும் எனவும் கவலையை வெளியிட்டார் கர்தினால்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒன்றிப்பாக திருமணம் இருக்கவேண்டும் என்ற திருஅவையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், சமூகத்தின் அடிப்படைக் கூறாக குடும்பம் உள்ளது என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளும் வேளை, குடும்பங்களின் அடிப்படையைத் தகர்த்தெறிய நாம் எப்படி அனுமதிக்க முடியும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

தன்பாலின கவர்ச்சி குறித்த மனப்போக்குடையோரை திருஅவை புரிந்துகொள்ளும் அதேவேளை, ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அனுமதிப்பது தவறான ஒரு நடவடிக்கையாகிவிடும் என்பதையும் எடுத்துரைத்தார் கர்தினால்.

பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்கும் திருஅவை, கருவிலேயே குழந்தைகளைக் கொல்லும் உரிமையை வழங்குவதை எதிர்க்கிறது எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் இரஞ்சித்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2024, 13:59