மனித கடத்தலை தடுத்து நிறுத்த உழைக்கும் தலித்தா கும் அமைப்பு மனித கடத்தலை தடுத்து நிறுத்த உழைக்கும் தலித்தா கும் அமைப்பு 

மனித கடத்தலுக்கு உள்ளாவோரில் மூன்றில் ஒருவர் பாலகர்

மனித கடத்தல் முறையால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கும் குழுக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது தற்போதைய அவசரத் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மனித கடத்தலுக்கு எதிராக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி சிறப்பிக்கப்படும் உலக தினத்தை முன்னிட்டு செய்தி வழங்கியுள்ள அருள்சகோதரி அவெலினோ, பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கும் குழுக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது தற்போதைய அவசரத் தேவை என்றார்.

துறவறத்தாரின் பன்னாட்டு அமைப்பால் நடத்தப்படும் தலித்தா கும் என்ற அமைப்பு, மனிதக்கடத்தலால் பாதிக்கப்படும் மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி அவெலினோ அவர்கள் உரைக்கையில், இவ்வாண்டிற்கான தலைப்பாக, மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் எந்த குழந்தையையும் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள் என்பது எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அடிமைத்தொழில் புரிய கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகள் குறித்தும் சில உதாரணங்களை எடுத்தியம்பிய தலித்தாகும் உறுப்பினர் அருள்சகோதரி அவெலினோ அவர்கள், இன்றைய உலகில் 5 வயதிற்கும் 17 வயதிற்கும் உட்பட்ட 15 கோடியே 20 இலட்சம் குழந்தைகள் பாலர் தொழிலாளர்களாக இருப்பதாகத் தெரிவித்தார்.

உலகில் மனித கடத்தலுக்கு உள்ளாகும் மக்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் என உரைக்கும் ஐ.நா. அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டும் இவ்வமைப்பு, இன்றைய நவீனகால அடிமை முறைகளுக்கு 5 கோடி பேர் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1 கோடியே 20 இலட்சம் பேர் சிறார் எனவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2024, 14:04