வெனிசுவேலா திருஅவை வெனிசுவேலா திருஅவை  (Copyright: Aid to the Church in Need)

தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு வெனிசுவேலா ஆயர்கள் விண்ணப்பம்

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கவோ, பாராமுகமாக இருப்பதற்கோ வரும் சோதனைகளை தவிர்த்து, சுதந்திரமாக, பொறுப்புணர்வுடன் அனைவரும் வாக்களிக்க விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நம்பிக்கையுடன்கூடிய வருங்காலத்தை உருவாக்கவும், வளர்ச்சி, நீதி, அமைதி, விடுதலை ஆகியவைகளை உள்ளடக்கிய நாட்டைக் கட்டியெழுப்பவும் தேர்தல் வழியாக கிடைக்கவிருக்கும் வாய்ப்பை எவரும் தவறவிட்டுவிடக் கூடாது என அழைப்பு விடுத்துள்ளனர் வெனிசுவேலா ஆயர்கள்.

வெனிசுவேலா நாட்டில் இம்மாதம் 28ஆம் தேதி இடம்பெறவுள்ள தேர்தல் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ள ஆயர்கள், தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கவோ அது குறித்து பாராமுகமாக இருப்பதற்கோ வரும் சோதனைகளை தவிர்த்து, சுதந்திரமாக, பொறுப்புணர்வுடன் அனைவரும் தேர்தலில் பங்கேற்கவேண்டும் என அனைத்து மக்களையும் விண்ணப்பித்துள்ளனர்.

வெனிசுவேலா நாடு சந்தித்துவரும் நெருக்கடிகளையும், சவால்களையும்  குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், அண்மைக் காலங்களில் கல்வி, உணவு, நல ஆதரவு, பொது மக்கள் சேவைகள், குடிமக்களின் பங்கேற்பு, தேசிய அரசியலைப்பில் கூறப்பட்டிருக்கும் நீதியும் விடுதலையும் போன்றவைகளின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெனிசுவேலா ஆயர் பேரவையால் 18 கருத்துக்களுடன் விரிவாக வெளியிடப்பட்டுள்ள நீண்ட அறிக்கை, பெரும் நெருக்கடிகளை மக்கள் சந்தித்துவந்தாலும், மக்களாட்சியை மீண்டும் உயிரூட்டமுடையதாக மாற்றுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளதால், அதனை பயன்படுத்தி பொறுப்புடன் செயல்படவேண்டிய தேவை உள்ளது என்பதையும் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய அரசின் கடமைகளாக, மனித உரிமைகள் மதிப்பு, வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் புதிய பொருளாதார திட்டத்தை வகுத்தல், பொதுமக்களுக்குரிய சேவைகளுக்கான தரத்தை உயர்த்தல், கல்விக்கொள்கையை புதிதாக வடிவமைத்தல், நலஆதரவுப் பணிகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகுத்தல், ஏழ்மையையும் இலஞ்ச ஊழலையும் எதிர்த்துப் போராடல், பேச்சுரிமையை மதித்தல் போன்றவைகளை தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2024, 11:49