போரால் இடம்பெயர்ந்துள்ள சூடான் மக்கள் போரால் இடம்பெயர்ந்துள்ள சூடான் மக்கள்   (AFP or licensors)

சூடானின் அமைதி முயற்சிகளுக்கு உலக கிறிஸ்தவ அமைப்பு வரவேற்பு!

நீதி, அமைதி மற்றும் அனைத்து மக்களின் மனித மாண்பைக் காக்கப் போராடுவதில் உலக கிறிஸ்தவ அமைப்பு உறுதியாக உள்ளது : முனைவர் ஜெர்ரி பிள்ளை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

WCC எனப்படும் உலக கிறிஸ்தவ அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜெர்ரி பிள்ளை அவர்கள், சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கிடையே இடம்பெற்றுவரும் அமைதி பேச்சுவார்த்தைகளில் சாதகமான முன்னேற்றங்களை வரவேற்றுள்ளார்.

போர் நிறுத்த முயற்சிகள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முனைவர் ஜெர்ரி பிள்ளை அவர்கள், போர்நிறுத்தத்திற்கான அழைப்பு மற்றும் மோதல் கட்சிகளிடையே உரையாடலை ஊக்குவிப்பது, சூடானில் நிலவிவரும் மோதலையும் நெருக்கடியையும் தணிப்பதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறித்து உலக கிறிஸ்தவ அமைப்பு பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ள பிள்ளை அவர்கள், மேலும் இது அர்த்தமுள்ள மற்றும் நீடித்த அமைதி முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று அவ்வமைப்பு நம்புவதாகவும் உரைத்துள்ளார்.

வன்முறை மற்றும் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இந்த முயற்சிகளின் சாத்தியம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள பிள்ளை அவர்கள், தகவல் தொடர்புக்கான திறந்த வழிகளைப் பேணுதல் மற்றும் மோதல் தரப்பினரிடையே நம்பிக்கையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

உலக கிறிஸ்தவ அமைப்பு, அதன் கிறிஸ்தவ சபைகள் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான பிற அமைப்புகள் வழியாக இந்த முயற்சிகளை ஆதரிக்கிறது என்றும், இதனால் அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளில் இவ்வமைப்பு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பிள்ளை.

மேலும் அமைதிக்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும் சூடான் மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும் அனைத்துத் தரப்பினரையும் உலக கிறிஸ்தவ அமைப்பு விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ள பிள்ளை அவர்கள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கும் அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி, அமைதி மற்றும் அனைத்து மக்களின் மனித மாண்பைக் காக்கப் போராடுவதில் உலக கிறிஸ்தவ அமைப்பு உறுதியாக உள்ளது என்றும், இந்த நேர்மறையான முன்னேற்றங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவற்றை நிலைநிறுத்துவதற்கும் ஐ.நா மற்றும் பிற துணைவர்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார் பிள்ளை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2024, 13:08