இந்தோனேசிய மதங்கள் பூமியைக் காக்க உறுதிமொழி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவிற்கு அடுத்த மாதம் திருத்தந்தை பிரான்சிஸ அவர்கள், திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, அங்குள்ள பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று ஒன்றுகூடி, "பூமி எங்கள் பொதுவான இல்லம்" என்ற கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆக.14, இப்புதனன்று, ஜகார்த்தாவில் உள்ள இந்து கோவிலில் மதப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர் என்றும், கத்தோலிக்கர், பெந்தக்கோஸ்து சபையினர், முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் பஹாய்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
மதத் தலைவர்களின் இந்தக் கூட்டறிக்கை, சிக்கனமான வாழ்க்கை முறையை உணர்ந்து, இயற்கையின் புனிதத்தை மதிப்பதன் வழியாகப் பூமியைப் பராமரிப்பதில் அவர்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது என்று உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
மேலும், தூய்மையான, நலமான, நிலையான சூழலை உருவாக்கி, பூர்வகுடி மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் உரிமைகள் நிறைவேற்றப்படுவதையும், பூமியின் நலன் சாத்தியமாக்கப்படுவதையும் உறுதி செய்வதாகவும் இந்த அறிவிப்பில் உறுதியளித்துள்ளதாகவும் எடுத்துரைக்கிறது அச்செய்திக்குறிப்பு.
இதுகுறித்துத் தனது கருத்தை யூகான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த அருள்பணியாளர் Yohanes Kristoforus அவர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மனிதாபிமான பிரச்சனைகள் என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் மேலும் பலரை அழைக்க விரும்புகிறோம் என்றும், இது திருஅவையால் எப்போதும் வலியுறுத்தப்பட்ட ஒன்றுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தோனேசிய ஆயர் பேரவையில் வலியுறுத்தப்பட்டபடி, திருத்தந்தையின் வருகையும் அவரது செய்திகளை ஆராய்ந்து செயல்படுத்துவதற்கான உறுதியான வடிவங்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைப் போலவே முக்கியமானது என்றும் கூறினார் அருள்பணியாளர் Kristoforus.
இந்தக் கூட்டத்தில் ஃபிரான்சிஸ்கன் சபையினரின் தலைவர் Massimo Fusarelli OFM அவர்கள் இத்தாலியிலிருந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்