தடம் தந்த தகைமை - எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கும் இவ்வாறே செய்தார்கள் (லூக் 6:26) என்று கூறினார் இயேசு.
நம்முள் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் நான் என்ன சொன்னாலும் எல்லாரும் என்னைப் பாராட்ட வேண்டும். நான் எதைச் செய்தாலும் எல்லாரும் என்னைப் புகழ வேண்டும். நான் எப்படி வாழ்ந்தாலும் எல்லாரும் என்னை உயர்த்திச் சொல்ல வேண்டும் என்ற புகழ் விரும்பிகள்.
இப்பார்வை கொண்ட எவராயிருந்தாலும் அவர் ஒரு மனநோயாளியே. சட்டத்தாலும் சமயத்தாலும் மக்களை இட்டுமிதித்த சமயவாதிகளைப் புகழ்ந்தால்தான் வாழ்வு கிடைக்கும் என்ற போலி மனிதருக்கு இயேசுவின் இச்சொல் கசப்பும் கடுப்பும் நிறைந்தது.
தத்துவமேதை திரு ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு யாரும் தனது காலில் விழுந்து வணங்குவது பிடிக்காது. அது தெரிந்தும் ஒருவர் ஒரு சிபாரிசுக் கடிதத்திற்காக அவரது காலில் விழ, அதிர்ச்சியடைந்தார். அடுத்த நொடியில் தனது காலில் விழுந்தவரின் பாதத்தில் விழுந்து எழுந்து சொன்னார் 'கணக்கு சரியாப் போச்சு'.
நல்லவரைப் போல வாழ்வதல்ல வாழ்க்கை, நல்லவராக வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த நல்ல வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள்: 1. நல்ல மனச்சான்று 2. போலித்தனமில்லாப் பேச்சு. பொய் சொல்லிப் புகழ் பெறுவதினும் உண்மை சொல்லி இகழ் ஏற்பதே மேல்.
இறைவா! வீணாகப் புகழாமலும், தகுதியின்றி புகழ் பெறாமலும் வாழ எனக்குக் கற்றுத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்