இறையடியார் Laureana Franco இறையடியார் Laureana Franco 

Laureana Franco அவர்களை புனிதராக அறிவிப்பதற்கான முதல்படிகள்

Pasig மறைமாவட்டத்தில் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியராகச் செயல்பட்ட Laureana Franco, மறைமாவட்டப் பணிகளுக்கும் ஏழைகளுக்கும் என தன்னை அர்ப்பணித்தவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மனிலாவில் மறைமாவட்டப் பணிகளுக்கும் ஏழைகளுக்கு உதவவும் என தன்னை அர்ப்பணித்து செயலாற்றி 2011ஆம் ஆண்டு இறந்த பொதுநிலைப் பெண்மணி Laureana “Ka Luring” Franco அவர்களை புனிதராக அறிவிப்பதற்கான மறைமாவட்ட அளவிலான முதன்மைப் படிகள் துவக்கப்பட்டுள்ளன.

தன் வாழ்வை மறைமாவட்டத்திற்கும் ஏழைகளுக்கும் அர்ப்பணித்து 2002ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் கையிலிருந்து அன்னை தெரேசா விருதைப் பெற்ற Laureana Franco அவர்கள் 2011ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார்.

இவரின் புனிதர் பட்ட நிலைகளுக்கான முதல் படியை துவக்கி வைத்த Pasig மறைமாவட்ட ஆயர் Mylo Hubert Vergara அவர்கள், திருஅவைப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்த Laureana Francoவின் அனைத்து எழுத்துக்களையும் ஆராயும் குழுவையும் நியமித்தார்.

அருளாளர் பட்டத்திற்கான படிகளைத் துவக்கி வைத்த நிகழ்ச்சியில் இந்த இறையடியார் குறித்த பல்வேறு சான்றுகள் அவருடன் தொடர்புடையவர்களால் வழங்கப்பட்டன.

Pasig மறைமாவட்டத்தில் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியராகச் செயல்பட்ட Laureana Franco அவர்களின் வீரத்துவ பண்புகள் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட, இவர் திருஅவையில் அருளாளராகவும் புனிதராகவும் அறிவிக்கப்பட அனைவரின் செபத்திற்கும் அழைப்புவிடுத்தார் ஆயர் Vergara.

திருஅவையால் இறையடியாராக அறிவிக்கப்பட்டுள்ள இவர், 1936ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி ஒரு பக்தியுள்ள குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்தார். திருஅவைப் பணிகளுக்கும் ஏழைகளுக்கும் என தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த இவர் தன் 75ஆம் வயதில் 2011ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2024, 14:48