தடம் தந்த தகைமை - பகைவரிடமும் அன்பு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள் (மத் 5:44&45) என்கிறார் இயேசு.
யூதர்களின் பார்வையில் யார் அடுத்திருப்பவர்? தம் இனம் சார்ந்தவர். யார் பகைவர்? தம் இனம் சாராப் பிறஇனத்தவர். இப்பழமைவாதச் சிந்தனையைப் புறந்தள்ளி “பகைவரிடம் அன்பு கூருங்கள். துன்புறுத்துவோருக்காக வேண்டுங்கள்” என்ற இயேசுவின் புதுப்பார்வை
அன்றைய நடைமுறைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டது. அது நகைப்பிற்குரியதாகப் பார்க்கப்பட்டது. அதோடு அன்றாட வாழ்வில் சாத்தியமா எனும் கேள்வியும் முளைத்தது.
அன்பும், அறமும், இரக்கமும், ஈதலும் எல்லைகளைக் கடந்து பயணிக்க வேண்டிய நன்மதிப்பீடுகள். அவை குடும்பம், இனம், மொழி, சட்டம் என்ற கூடுகளுக்குள் அடைபட்டுக் கிடப்பதை இயேசு கண்ணுற்றார். இந்நன்மதிப்பீடுகள் நிறைந்த அணுகுமுறைகளைச் சிறைப்படுத்தும்போது கடவுள் ஒடுக்கப்படுகிறார். நல்லவர் – தீயவர், வேண்டியவர் - வேண்டாதவர், ஆண் – பெண், அழகானவர் – அழகற்றவர், திறனுள்ளவர் - திறனற்றவர் என இயற்கை ஒருபோதும் பார்ப்பதில்லை. அந்த இயற்கையைப் படைத்த இறைமனமும் அவ்வாறே. அன்பும் பரிவும் மூளையிலிருந்து வருவதல்ல, அவை இதயத்திலிருந்து ஊற்றெடுப்பவை.
இறைவா! நீர் தந்த எல்லாக் கொடைகளிலும் அன்பே சிறந்தது. பகைப்பவருக்கும் அதைப் பரிசாக்கும் பரந்த உள்ளம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்