அன்னை மரியா, அமைதியின் முன்மாதிரி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று, எருசலேமின் ஒலிவ மலையில் புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா திருப்பலியை சிறப்பித்த புனித பூமியின் காவலரான, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன் அவர்கள், மத்திய கிழக்கில் அமைதிக்கான கொடையைக் கேட்குமாறு அச்சபையினரை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பத்து மாதங்களாகப் புனித பூமியில் நீடித்து வரும் போர்ச்சூழல்களைத் தனது மறையுரையில் பிரதிபலித்த அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், அமைதியையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இறைவேண்டல் செய்தார்.
முதல் வாசகத்திலிருந்து தனது சிந்தனைகளை வழங்கிய அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், எவ்வாறு பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதனை விழுங்கக் காத்திருந்ததோ, அவ்வாறே, பயங்கரமான போர்களும், வன்முறைகளும், அழிவு சக்திகளும், அமைதி என்னும் பிறந்த குழந்தையை விழுங்கத் தயாராக உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
அன்னை கன்னி மரியா திருஅவையின் உருவம் என்பது குறித்துப் பல்வேறு விளக்கங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்வதாகக் கூறிய அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், அரக்கப் பாம்பின் அனைத்து உருவங்களிலும் அது அழைக்கப்பட்ட அனைத்து பெயர்களிலும் தீமையை காண்கிறோம் என்று விளக்கினார்.
பெண்ணுக்கும் அரக்கப் பாம்பிற்கும் இடையிலான போராட்டத்தில், கடவுளால் விரும்பப்பட்ட அந்தப் புதிய உலகின் பிறப்பை நாசப்படுத்த தீயவன் செய்யும் தொடர்ச்சியான முயற்சியின் விளக்கத்தைத் தவிர வேறில்லை என்று கூறிய அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், வன்முறை, போர், சந்தை, கலாச்சார காலனித்துவம், மக்களைப் பண்டமாக்குதல் ஆகியவற்றால் அடிமைப்படுத்தப்படாத மனிதகுலத்தின் பிறப்பைத்தான் அந்தக் குழந்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்றும் விவரித்தார்.
அன்னை மரியா, ஆன்மா மற்றும் உடலுடன் விண்ணேற்படைந்தார் என்று கூறிய அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், அரக்கப் பாம்பு என்னும் தீமையாளன் விளைவிக்கும் மோதல்கள் மற்றும் போர்களால் நாம் கீழ்நோக்கி இழுத்துச்செல்லப்படாமல், கடவுளை நோக்கியும் புதிய எருசலேமை நோக்கியும் நாம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், அங்கு அனைத்து மக்களுக்கும், மொழிகளுக்கும் மற்றும் கலாச்சாரங்களும் இடமுள்ளது என்றும் கூறினார்.
இதன் அர்த்தத்தில், அன்னை மரியா ஒரு முன்னறிவிப்பாளர் என்றும், அவர் தன் வாழ்நாள் முழுவதும் இறைத்தந்தையின் விருப்பப்படியே வாழ்ந்தார் என்றும் குறிப்பிட்ட அவர், வானதூதரின் அறிவிப்பின்போது மரியா கடவுளை நம்பியதுபோலவே, சிலுவை அடியில் நின்றபோதும், தேவையற்ற தீமை, துன்பம் அல்லது அநியாய மரணத்தின் அவதூறுகளால் மூழ்கடிக்கப்படாமல் இருந்தார் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்