ஸ்டீரிசா தலத்திருஅவையின் பங்குத்தந்தை அருள்பணியாளர் கபிரியேலே ரோமானெல்லி. ஸ்டீரிசா தலத்திருஅவையின் பங்குத்தந்தை அருள்பணியாளர் கபிரியேலே ரோமானெல்லி. 

அமைதியின் அதிசயத்தை நோக்கி நம்மை நடத்திச்செல்லும் பேச்சுவார்த்தை

குண்டுவெடிப்பின் சத்தம் இன்னும் கேட்பது மிகுந்த துயரத்தை தந்தாலும், போர் நிறுத்தம் மற்றும் பிணையக்கைதிகளை விடுவிப்பதன் வழியாக போர் முடிவிற்கு வந்தால் அது அமைதிக்கான முதல் படியாக இருக்கும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையானது நம்பிக்கை மற்றும் அமைதியின் அதிசயத்தை நோக்கி நம்மை நடத்திச் செல்லும் என்று அனைவரும் நம்புவதாகவும், காசாவில் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனைவரும் செபத்துடன் கூடிய நம்பிக்கையுடன், அமைதியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார் அருள்பணியாளர் கபிரியேலே ரோமானெல்லி.

அண்மையில் காசாவின் ஸ்டீரிசாவில் நடைபெற்ற விண்ணேற்பு அன்னை பெருவிழா சிறப்பு நிகழ்வுகள் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு கூறினார் ஸ்டீரிசா தலத்திருஅவையின் பங்குத்தந்தை அருள்பணியாளர் கபிரியேலே ரொமானெல்லி.

கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற போர்நிறுத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் கெய்ரோ பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடர உள்ளதாக தெரிவித்த அருள்பணியாளர் ரோமானெல்லி அவர்கள், வலி, சோர்வு, துன்பம் இருந்தபோதிலும் அன்னை மரியின் விண்ணேற்பு பெருவிழாவானது மிகுந்த சிறப்புடன்  கொண்டாடப்பட்டது என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தைகளுக்கான பலன்கள் மற்றும் அதன் வெளிச்சங்களை வரும் வாரத்தின் தொடக்கத்தில் காண முடியும் என்று கூறிய அருள்தந்தை ரோமானெல்லி அவர்கள், குண்டுவெடிப்பின் சத்தம் இன்னும் கேட்பது மிகுந்த துயரத்தை தந்தாலும், போர் நிறுத்தம் மற்றும் பிணயக்கைதிகளை விடுவிப்பதன் வழியாக போர் முடிவிற்கு வந்தால் அது அமைதிக்கான முதல் படியாக இருக்கும் என்றும் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவதுபோல, துன்புறும் மக்களின் கவலைகளையும் துயரங்களையும் அன்னை மரியாவிடம் ஒப்படைத்து செபிக்கவேண்டும் என்று கூறிய அருள்பணியாளர் ரோமானெல்லி அவர்கள், முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அனைவரும் தகுந்த முறையில் அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடினர் என்று தெரிவித்தார்.

உள்ளூர் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர் ஆகிய அனைவரும் செபமாலை செபித்து திருப்பலியில் தகுந்த முறையில் பங்குபெற்று அன்னை மரியிடமும் மிக்கேல் அதிதூதரிடமும் சிறப்பாக  அமைதிக்கான தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்தார்கள் என்றும், எடுத்துரைத்தார் அருள்பணியாளர் ரோமானெல்லி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2024, 11:47