நேர்காணல் – அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா வாழ்த்துச் செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பறப்பது பறவையின் இலக்கு என்றால் சிறகுகள் பிரிவது தோல்வி அல்ல, தொடக்கம். அவ்வகையில் மண்ணில் இறைவனின் திருஉளத்தை நிறைவேற்ற இயேசுவின் தாயாக உதிக்கப் பிறப்பெடுத்த அன்னை மரியா, இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் நம் அனைவருக்கும் தாயாக மாறி விண்ணகப் பிறப்பெடுத்து மண்ணிலிருந்து பிரிந்து விண்ணிற்கு உயர்ந்து செல்வதும் தொடக்கமே. விண்ணை நோக்கி உயரே சென்று நம் மத்தியில் இன்று விண்ணேற்பு அரசியாக பரலோக அன்னையாகக் காட்சியளிக்கின்றார். அடிமைத்தனத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாளை நம் இந்திய மக்கள் சுதந்திர நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்வுலக வாழ்விலிருந்து மீண்டு விண்ணக வாழ்வை அடையும் வழியைக் காட்டுபவர் அன்னை மரியா என்ற வகையில் கத்தோலிக்கர்களாகிய நாம் விண்ணேற்பு அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இத்தகைய சிறப்பு மிக்க நாளில் அன்னையின் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துச்செய்தியினை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் தஞ்சாவூர் மறைமாவட்டத்திற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆயராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஆயர் சகாயராஜ் தம்புராஜ்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆயராக திருநிலைப்படுத்தப்பட உள்ள அருள்பணி சகாயராஜ் தம்புராஜ் அவர்கள், 1969ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் நாள் திருச்சி மறைமாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் பிறந்தவர். சென்னை பூவிருந்தவல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்ற இவர் 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார். ஆங்கிலத்தில் இளங்கலை, முதுகலை, தத்துவஇயலில் முனைவர் பட்டம் போன்றவற்றைப் பெற்ற ஆயர் அவர்கள், பங்குத்தந்தை, மறைமாவட்ட குருக்கள் செனட்டின் செயலர், மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குநர் மற்றும் மறைமாவட்ட ஆணையங்களின் ஒருங்கிணைப்பாளர் சென்னை, திருச்சிராப்பள்ளி குருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் என பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர். சிறந்த பேச்சாளர், எடுக்கும் முயற்சிகளில் திறமையாக செயலாற்றி அதனை நன்முறையில் முடிக்கும் ஆற்றல் பெற்றவர். நிர்வாகம், தலைமைத்துவம், விடாமுயற்சி, உத்வேகம், ஏழை எளியோர் மட்டில் ஆர்வம், சமூக விழிப்புணர்வு, அயராது மக்கள் பணியாற்றும் மனம், திறம்பட ஆலயப்பணி நிறைவேற்றும் திறம் என பல்வேறு நற்குணங்களைத் தன்னகத்தேக் கொண்டவர். புதிய ஆயர் அவர்களை அன்னை மரியின் விண்ணேற்பு பெருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்