வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு   (ANSA)

வங்கதேசத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த அன்பு கொண்டவர், மேலும் ரோஹிங்கியாக்கள் மீது தனது அக்கறையையும் நெருக்கத்தையும் காட்டிவருவதுடன், எங்களுக்காக இறைவேண்டல் செய்து வருகிறார் : டாக்கா பேராயர் பெஜாய் என். டி'குரூஸ், OMI

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வேளை, இறப்பு எண்னிக்கை அதிகரித்துள்ளது என்றும், மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளார் அந்நாட்டின் டாக்கா பேராயர் பெஜாய் என். டி'குரூஸ், OMI.

வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நீண்டதொரு நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த பேராயர் டி'குரூஸ் அவர்கள், ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோரின் தொடர்ச்சியான துன்பங்களைப் பற்றியும், அவர்களின் துயர நிலையிலும் திருத்தந்தை அவர்களுக்கு வழங்கிவரும் ஆதரவு குறித்தும் விவரித்துள்ளார்.

வங்கதேச மக்களுக்கான எதார்தத்தைப் பற்றி இந்நேர்காணலில் விவரித்துள்ள பேராயர், குறிப்பாக, பேரழிவுகரமான வெள்ளம் தனது நாட்டை எவ்வாறு முடக்கியது என்பது குறித்தும், வரும் செப்டம்பர் மாதம் 2 முதல் 13 வரை திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்தும் தனது கருத்துக்களை வழங்கியுள்ளார்.

மாபெரும் அழிவுகள், மக்களின் தேவைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பேராயர் டி'குரூஸ் அவர்கள் எடுத்துரைத்துள்ள அதேவேளை,  2017-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருத்தூதுப் பயணத்தின் போது, முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட வங்கதேசத்திற்கும், மியான்மாருக்கும் தனது நெருக்கத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதையும் நினைவிற்குக் கொணர்ந்துள்ளார்.

குறிப்பாக, ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் உடனான சந்திப்பின் போது டாக்காவில் திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள், அம்மக்கள் சந்திக்கும் மாபெரும் சவால்களை எடுத்துக்காட்டியதை நினைவில் கொண்டவராகத் தனது சிந்தனைகளை வத்திக்கான் செய்திகளுடன் பகிர்ந்துகொண்டார் பேராயர் டி'குரூஸ்.

மேலும் அம்மக்களுக்காக எழுப்பப்படும் முறையீடுகள், வேண்டுகோள்கள் மற்றும் வறுமையிலும் துன்பத்திலும் வாடும் சிறுபான்மையினருக்கு எவ்வாறு உதவுவது, அவர்களின் அவலத்தைப் போக்க எம்மாதிரியான முயற்சிகள் எடுப்பது என்பது பற்றியும்  இந்நேர்காணலில் எடுத்துக்காட்டியுள்ளார் பேராயர் டி'குரூஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2024, 13:00