ஐரோப்பிய JRS பணியாளர்கள் ஐரோப்பிய JRS பணியாளர்கள்  (JRS Europa)

பிரிட்டனில் வன்முறைகள் களையப்பட JRS விண்ணப்பம்

ஏற்கனவே தங்கள் சொந்த நாட்டின் வன்முறைகளுக்கு பயந்து அடைக்கலம் தேடி வந்திருக்கும் மக்களை மீண்டும் வன்முறையால் அச்சுறுத்துவது தடுக்கப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அண்மை நாட்களில் பிரிட்டனின் பல நகர்களில் சிறுபான்மை இனத்தவரும், அடைக்கலம் தேடி வந்துள்ளோரும், வழிபாட்டு தலங்களும் வன்முறை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் JRS என்ற கத்தோலிக்க உதவி அமைப்பின் பிரிட்டன் நிர்வாகி Sarah Teather.

அகதிகளுக்கான பணிகளுக்கென இயேசுசபையினரால் நடத்தப்படும் JRS அமைப்பின் பிரிட்டன் தலைமை நிர்வாகி Teather அவர்கள் உரைக்கையில், அண்மையில் பிரிட்டானிய பதின்ம வயது இளைஞரால்  மூன்று இளம்பெண்கள் கத்தியால் குத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அகதிகளும், அடைக்கலம் தேடுவோரும் அச்சத்திலேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய இன அடிப்படையிலான தாக்குதல்களையும் விரோதமனப்பான்மைகளையும் களைவதில் மொத்த சமூகத்தின் அர்ப்பணமும் ஈடுபாடும் முக்கியத்தும் நிறைந்தவை எனவும் எடுத்துரைத்தார் அவர்.

அடைக்கலம் தேடி வந்துள்ள மக்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பதில் அரசின் பொறுப்பையும் சுட்டிக்காட்டிய இப்பிறரன்பு அமைப்பின் பிரிட்டன் நிர்வாகி, ஏற்கனவே தங்கள் சொந்த நாட்டின் வன்முறைகளுக்கு பயந்து அடைக்கலம் தேடி வந்திருக்கும் மக்களை மீண்டும் வன்முறையால் அச்சுறுத்துவதை தடுக்கவேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2024, 14:39