திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - தூய மேரி மேஜர் பேராலய புனித கதவு
மெரினா ராஜ் – வத்திக்கான்
உரோம் தூய மேரி மேஜர் பேராலயம் உரோமில் இருக்கக்கூடிய நான்கு பெரிய பேராலயங்களுல் ஒன்றாக திருத்தந்தையின் பேராலயமாக விளங்குகின்றது. இக்கோவில் எழுப்பப்பட்ட வரலாறானது ஒரு சிறு நிகழ்வுடன் ஒப்பிடப்படுகின்றது. 358 ஆம் ஆண்டு உரோம் நகரிலே ஜான் பத்ரிசியூ என்னும் ஒரு பெரும் செல்வந்தர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். மிகவும் வசதி படைத்தவர்களான அவர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லை. எனவே தங்களது வாழ்நாள்களுக்குப் பின் தங்களது உடைமைகளை யாருக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்ற தங்களது கேள்வியை அன்னை மரியாவிடம் தெரிவித்தனர். அன்னை மரியா ஆகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் நள்ளிரவில் அத்தம்பதியரின் கனவில் தோன்றி எஸ்குயிலின் மலைக்குன்றில் பனி பொழியப்பட்டிருக்கும் இடத்தில் தனக்காக ஓர் ஆலயம் எழுப்பக் கேட்டுக்கொண்டார். அன்னை மரியா கனவில் கூறிய படியே எஸ்குயிலின் என்னும் உரோம் நகர் மலைக்குன்றை நோக்கிச் சென்றனர் அத்தம்பதியர். ஆகஸ்ட் மாத கோடை வெயிலிலும் அந்த மலைக்குன்றின்மீது அன்னை மரியா கூறியபடியே பனி பொழியப்பட்டிருப்பதைக் கண்டு வியப்புற்றனர்.
அதே நேரத்தில் அப்போதைய திருத்தந்தையான தூய லீபேரியஸ் என்பவருக்கும் அன்னை மரியா கனவில் தோன்றி பனி பொழியப்பட்டுள்ள இடத்தில் தனக்காக ஆலயம் கட்ட அழைப்பு விடுத்தார். அதன்படி எஸ்குயிலின் மலையில் பனி பொழியப்பட்டிருப்பதைக் கண்டு அங்கு அன்னை மரியாவிற்கான ஆலயம் ஒன்றை எழுப்பப்பணித்தார் திருத்தந்தை. ஜான் பத்ரீசியூ ஆலயக் கட்டுமானத்திற்கான பொருள்செலவுகளுக்குப் பொறுப்பெற்க, ஆலயமானது 358 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 360 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. அதன்பின் சில வருடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பழைய ஆலயமானது சிதிலமடைந்தது.
இப்பேராலயத்தில் உள்ள புனிதக் கதவானது 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டது. பொலோஞ்னா நகர் சிற்பியான லூயிஜி என்சோ மத்தேயி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இப்புனித கதவில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. புனித கதவின் நடுப்பகுதில் உயிர்த்த இயேசு அன்னை மரியாவிற்குக் காட்சியளிக்கும் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் இருக்கும் உயிர்த்த இயேசுவின் முகமானது இத்தாலியின் தூரின் நகரில் வைக்கப்பட்டிருக்கும் திருத்துகிலில் பதியப்பட்ட உருவம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் உள்ள அன்னை மரியாவின் உருவம் உரோம் நகர் பாதுகாவலியான சாலூஸ் போப்போலி ரோமானோ படத்தில் உள்ளது போல வரையப்பட்டுள்ளது. அன்னை மரியாவின் உருவத்திற்குக் கீழே 431 ஆம் ஆண்டு நடைபெற்ற எபேசு சங்கமானது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலை அடையாளப்படுத்தும் தூண்களைச் சுற்றித் திருத்தந்தையும் கர்தினால்களும் ஆயர்களும் கூடி அன்னை மரியா, “கடவுளின் தாய்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டது வடிக்கப்பட்டுள்ளது. இயேசு இரு ஆள்கள் அல்ல, கடவுளும் மனிதருமானவர், ஒரே ஆள். அத்தகையவருக்குத் தாயான அன்னை மரியா கடவுளின் தாய் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிக்கையிடப்பட்டது. எனவே அதனை அடையாளப்படுத்தும் வகையில் மாதர் தேய், கடவுளின் தாய் என்று இலத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.
வலப்புறம் உள்ள உயிர்த்த இயேசுவின் திரு உருவத்தின் கீழே இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்றவர்களின் உருவங்களும், அச்சங்கத்தில் அறிக்கையிடப்பட்ட மரியா “திருஅவையின் தாய்” என்ற வரிகள் மாதர் எக்லேசியே என்று இலத்தீன் மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன. புனிதக் கதவின் மேல்புறத்தில் இடப்பக்கம் அன்னை மரியாவிற்கு கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை கூறிய நிகழ்வும், வலப்பக்கத்தில் அன்னை மரியா மற்றும் சீடர்கள்மேல் தூய ஆவி இறங்கி வந்த நிகழ்வும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
புனிதக் கதவின் கீழ்ப்புறத்தில் திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களின் விருதுவாக்கான எல்லாம் உமக்காக totus tuus என்னும் வரிகள் இலத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் அப்போதைய கர்தினாலான கார்லோ ஃபூர்னோ என்பவரின் விருதுவாக்கான ஆர்தரே எத் லூசேரெ Ardere et lucere அதாவது எழுந்து பிரகாசி என்பது திருக்கல்லறையின் விருதுவாக்கான Deus lo vult கடவுள் விரும்புகின்றார் என்பது பொறிக்கப்பட்டுள்ளது.
புனித கதவுகளின் மேன்மையை உணர்வோம். யூபிலி ஆண்டில் இப்புனிதக்கதவுகளின் வழியே கடந்து சென்று, நமது பழைய பாவ இயல்புகளிலிருந்து புதிய வாழ்விற்கு கடந்து செல்ல நாம் அழைக்கப்படுகின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்