திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 –தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவில்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையில் யூபிலி ஆண்டு என்ற தலைப்பின் கீழ் உரோமில் உள்ள பெருங்கோவில்கள் மற்றும் பேராலயங்கள் பற்றியும் அங்குள்ள புனிதக் கதவு பற்றியும் அறிந்து கொண்டிருக்கும் நாம் உலகில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் தாய் ஆலயமாகத் திகழும் தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவில் பற்றியும் அங்குள்ள புனிதக் கதவு பற்றியும் இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.
ஆலயங்களுள் சிறந்த ஆலயமாக அகில உலகில் இருக்கக்கூடிய ஆலயங்களுக்குள் எல்லாம் சிறந்த ஆலயமாக விளங்கக்கூடிய தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலானது உரோமில் உள்ள நான்கு பெருங்கோவில்களுள் ஒன்றாகும். பெருங்கோவிலின் நுழைவாயிலில், தாயும் தலைமையுமான ஆலயம் என்ற வகையில் இலத்தீன் மொழியில் 'mater et caput' என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. 1309ஆம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் கிளமண்ட் பிரான்ஸ் நாட்டிலுள்ள அவிஞ்ஞோன் நகருக்கு மாற்றும் வரை இவ்வாலயம் இருந்த இடமே திருத்தந்தையரின் தலைமையகமாக இருந்து வந்தது. தொடக்கத்தில் பிளாசியோ இலாத்தரானோ (Plausio Laterano) என்ற ஆளுநருக்கு சொந்தமானதாக இருந்த இந்த இடமானது, பின்னர் நீரோ மன்னனுக்குச் சொந்தமானதாக மாறியது. கி.பி.65ல் நீரோ மன்னனுக்கெதிராக அவரது ஆட்சிக்கவிழ்ப்பிற்காக, பிளாசியோ இலாத்தரானோ மேற்கொண்ட செயலில் தோல்வியுற்றதால் மன்னரால் மரணதண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். அவரது சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டதால், அவருக்குச் சொந்தமான இலாத்தரன் பெருங்கோவில் இருக்கும் இடமும் நீரோ மன்னனுக்குச் சொந்தமானது.
அதன்பின் கி.பி.313ஆம் ஆண்டில் மன்னன் கான்ஸ்டாண்டைன் கிறிஸ்தவ மக்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்க விரும்பி இவ்விடத்தில் அவர்களுக்கான ஆலயம் ஒன்றைக் கட்ட விரும்பினார். 90 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் கொண்டு கான்ஸ்டன்டைன் மன்னரால் கட்டப்பட்ட அவ்வாலயமானது கி.பி.318 ஆம் ஆண்டில் திருத்தந்தை சில்வேஸ்தரால் திருநிலைப்படுத்தப்பட்டு 'இயேசு மீட்பராலயம்' என அழைக்கப்பட்டது. பின்னர் 9ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை 3ஆம் சேர்ஜோ அவர்கள் இவ்வாலயத்தை 'திருமுழுக்கு யோவான் ஆலயம் என்றும், 12ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை 2ஆம் லூசியோ நற்செய்தியாளர் யோவான் ஆலயம் என்ற பெயரையும் வழங்கினார். அதனால் இப்பேராலயத்திற்கு இயேசு மீட்டர் ஆலயம், திருமுழுக்கு யோவான் ஆலயம், நற்செய்தியாளர் யோவான் ஆலயம் என மூன்று பெயர்களுண்டு. 14ஆம் நூற்றாண்டு வரை திருத்தந்தையின் தலைமையகம் இவ்விடத்தில் இருந்து வந்த காரணத்தால் இப்பேராலயத்தில் ஐந்து திருச்சங்கங்கள் (ecumenical councils) நடைபெற்றன. உரோம் மறைமாவட்டத்தின் ஆயரும், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவருமாகிய திருத்தந்தைக்குரிய பேராலயமாக அமைந்திருப்பதால், உலகிலுள்ள ஆலயங்களுக்கு எல்லாம் தூய யோவான் இலாத்தரன் பேராலயம், தாய் ஆலயமாகக் கருதப்பட்டு வருகிறது.
வெளித்தோற்றம் அல்லது முகப்பு
இவ்வாலயத்தின் வெளித்தோற்றமானது திருத்தந்தை 3ஆம் கிளமன்ட் அவர்களின் கட்டளையின்பேரில் 1732 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. ஆலயத்தின் முகப்பில் முதல் யூபிலி ஆண்டைக் கொண்டாடக் காரணமான திருத்தந்தை எட்டாம் போனிபாசின் விருதுவாக்கு மற்றும் இலச்சினை வடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நுழைவாயில்களுள்ள இந்த பேராலயத்தின் முகப்பில் மேல்பகுதியில் சிறப்பு நாள்களில் திருத்தந்தை ஆசீர் வழங்குவதற்காகப் பயன்படுத்தும் சாளரம் (பலகணியும்) காணப்படுகின்றது. ஆலயத்தின் வெளிப்புற உச்சியில் ஏழு மீட்டர் உயரமுள்ள பதினைந்து பெரிய சிற்பங்கள் உள்ளன. நடுவில் மீட்பராம் இயேசு சிலுவையுடன் நிற்பது போலவும், அருகில் திருமுழுக்கு யோவான், நற்செய்தியாளர் யோவான் மற்றும் திருஅவையின் மறைஅறிஞர்கள்ளும் 12 பேரும் நிற்பது போல வடிக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் இடது பக்கத்தில் கான்ஸ்டாண்டைன் மன்னனின் சிலையானது காணப்படுகின்றது. தொடக்கத்தில் இச்சிலையானது தற்போதையக் குடியரசின் ஜனாதிபதி மாளிகை இருக்கும் குயிரினாலே(Quirinale) குன்றில் அமைந்திருந்தது என்றும் அங்கிருந்து இவ்வாலயத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்றும் தெரியவருகின்றது. இச்சிலையை சுற்றியுள்ள வெண்கலக் கதவானது உரோமையின் யூலியா கூரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மிகப்பழமையான கதவாகும். ஆலயத்தின் முகப்பு உள்ள பெரிய வளாகத்தின் சுவரின் திருமுழுக்கு யோவானின் பிறப்பு, அவரது நற்செய்தி முழக்கம், நற்செய்திப்பணி ஏரோது அரசனுக்கு எதிராக அவர் பேசியது. இறுதியாக தலை வெட்டுண்டு இறந்து போதல் ஆகிய வாழ்க்கை நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
தூய யோவான் இலாத்தரன் புனித கதவு
ஆலயத்தின் உள்புறமாக வலது புறத்தில் உள்ளது இப்பேராலயத்துக்கான புனித கதவு உள்ளது. இப்புனித கதவு 1423 ஆம் ஆண்டு திருத்தந்தை 5 ஆம் மார்ட்டீன் என்பவரால் முதலில் திறக்கப்பட்டது. அதன்பின் ஃப்லோரியானோ பொதினீ என்பவரால் உருவாக்கப்பட்ட இப்போதைய புனித கதவானது முழுவதும் வெண்கலத்தால் ஆனது. உரோமில் உள்ள ஏனைய பெருங்கோவில்களின் புனித கதவுகள் திறக்கப்பட்டதைப் போலவே 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் இவ்வாலயத்திலுள்ள புனித கதவும் திறக்கப்பட்டது. புனிதக் கதவின் கீழே திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் விருதுவாக்கும் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மேலே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருஉருவமும், அதன் கீழே அன்னை மரியா பாலன் இயேசுவை தாங்கிய அன்னை மரியாவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்தில் அன்னை மரியா தனது வலது கரத்தை உயர்த்தி மூன்று விரல்களை மேல் நோக்கிக் காட்டுவது போலவும் மற்றொரு கையில் குழந்தை இயேசுவை அணைத்து இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இயேசு நேற்றும் இன்றும் என்றும் என்ற வரிகள் இலத்தீன் மொழியில் வடிக்கப்பட்டுள்ளன. சிலுவையில் அறையப்பட்ட இயேசு இறந்த நிலையில் காணப்படுகின்றார்.
தற்போதுள்ள பெருங்கோவிலானது திருத்தந்தை 10ம் இன்னசன்ட் அவர்களின் தூண்டுதலால் பிரான்சிஸ் பொரோமினி என்பவரால் 1642ஆம் ஆண்டில் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டது. பரோக் கலை வடிவில் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இப்பேராலயமானது 130 மீட்டர் நீளமும் 54 மீட்டர் அகலமும் 20 மீட்டர் உயரமும் கொண்டது. ஆலயத்தின் உள்புறம் 12 திருத்தூதர்களின் திருஉருவச்சிலை வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தூதர்கள் மறைசாட்சியாக இறப்பதற்குக் காரணமான பொருள்கள் ஆயுதங்களும் உடன் வடிக்கப்பட்டுள்ளன. வலப்புறம் ஆறும் இடப்புறம் ஆறுமாக வைக்கப்பட்டுள்ள திருத்தூதர்களின் உருவச்சிலையின் மேலே, வட்ட வடிவில் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இயேசுவின் வாழ்க்கை வரலாறும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இறைவாக்கினர்கள் மற்றும் திருத்தூதர்கள் உருவச்சிலை
வாளால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட திருத்தூதர் சீமோன், ஈட்டியுடன் திருத்தூதர் ததேயு, தோலுடனும் கத்தியுடனும் காணப்படும் திருத்தூதர் பர்த்தலோமேயு, நற்செய்தி நூலுடன் காட்சியளிக்கும் திருத்தூதரும் நற்செய்தியாளருமான மத்தேயு, புத்தகத்துடனும் தடியுடனும் காணப்படும் சிறிய யாகப்பர், நெருப்பைக் கக்கும் கொடிய விலங்கை (dragon) வெற்றிகொள்ளும் சிலுவையுடன் திருத்தூதர் பிலிப்பு, நற்செய்தியுடனும் கழுகுடனும் தோன்றும் நற்செய்தியாளர் யோவான், தான் மரணித்த சிலுவையோடு தோன்றும் திருத்தூதர் அந்திரேயா, சிலுவை மற்றும் புறாவோடு தோன்றும் தோமையார், தடியோடு காணப்படும் திருத்தூதர் பெரிய யாகப்பர், விண்ணகத்தின் திறவுகோலுடன் காணப்படும் திருத்தூதர் பேதுரு, வாளுடனும் புத்தகத்துடனும் தோன்றும் திருத்தூதர் பவுல் ஆகியோரின் திரு உருவச்சிலைகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளான ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்படும் காட்சி, ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வு, நோவா காலத்து வெள்ளப் பெருக்கு, யோசேப்பு தனது சகோதரர்களால் விற்கப்படும் காட்சி, இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடத்தல் போன்றவைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இறைவாக்கினர் யோனாவும் அவரை அடையாளப்படுத்தும் திமிங்கிலம், இறைவாக்கினர் நாகூம், ஒபாதியா, மிக்கா, யோவேல், ஆமோஸ், ஓசேயா, தானியேல், பாருக், எசாயா, எசேக்கியேல், எரேமியா ஆகியோர் காணப்படுகின்றனர். இயேசு திருமுழுக்கு பெறுதல், கைது செய்யப்படுதல், சிலுவையை சுமந்து செல்லுதல், சிலுவையின் பாரத்தால் கீழே விழுதல், சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடுதல், உயிர்த்தெழுதல், உயிர்த்த இயேசு தந்தைக் கடவுளை நோக்கிச் செல்லுதல் போன்றவையும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்