நிகரகுவாவில் மத கொண்டாட்டம் நிகரகுவாவில் மத கொண்டாட்டம்  (AFP or licensors)

கோவில் காணிக்கைகளுக்கும் நிகரகுவாவில் வரி

நிகரகுவாவில் விசுவாசிகள் திருஅவைக்கு வழங்கும் காணிக்கை, நன்கொடைகள் என அனைத்தும் இனிமேல் 10 முதல் 30 விழுக்காடு வரை வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

விசுவாசிகளிடம் இருந்து பெறப்படும் காணிக்கைகளுக்கும்கூட கோவில்களும் மத நிறுவனங்களும் வரி கட்டவேண்டும் என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நிகரகுவா பாராளுமன்றம்.

மத நிறுவங்களுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை நீக்கியதுடன், மதக்காரணங்களுக்காக மட்டுமே என்றாலும்கூட எந்த ஒரு நடவடிக்கைக்கும் சொத்துக்கும் வருமான வரி கட்டியேயாக வேண்டும் என்ற வரி சீர்திருத்தத்தைக் கொணர்ந்துள்ளது நிரகுவா தேசிய அவை.

நிகரகுவா நாட்டின்  தனியார் செய்திகளின்படி, இலாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு வரி விதிப்பதுபோல் அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்கும் வரி விதிக்கப்படுவதாக புதிய வரி சீரமைப்புத் திட்டத்தின் வழி தெரிய வருகிறது.

விசுவாசிகள் திருஅவைக்கு வழங்கும் காணிக்கைப் பணம், காணிக்கைப் பொருட்கள், உதவிகள், நன்கொடைகள் என அனைத்தும் இனிமேல் 10 முதல் 30 விழுக்காடு வரை வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களிடையே கல்வி, சமூக மற்றும் ஏனைய உதவிப்பணிகளை ஆற்றிவரும் தலத்திருஅவையின் சேவை, தற்போதைய வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படும் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பல்வேறு கத்தோலிக்க அருள்பணியாளர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ள நிகரகுவா அரசு, 1500 அரசுசாரா அமைப்புக்களையும் தடைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான அமைப்பு, அரசின் செயல், மத உரிமைகளையும் சமூக சுதந்திரத்தையும் மீறுவதாக உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2024, 14:53