மேலும் இரு அருள்பணியாளர்கள் நிகரகுவாவிலிருந்து வெளியேற்றப்படல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கடந்த வாரம் நிகரகுவா நாட்டில் கைது செய்யப்பட்ட இரு அருள்பணியாளர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உரோம் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும் துறவியருக்கு எதிராக நிகரகுவா நாட்டில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளால் 2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 245 துறவறத்தார் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர்கள் Leonel Balmaceda, Denis Martínez ஆகிய இருவரும் உரோம் நகருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் உரோம் நகரில் தங்கியிருக்கும் ஆயர் Rolando Álvarez அவர்களால் நிர்வகிக்கப்படும் Estelí மற்றும் Matagalpa மறைமாவட்டங்களில் இருந்து இந்த இரு அருள்பணியாளர்களும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஆகஸ்ட் 15ஆம் தேதி நிகரகுவா காவல்துறையால் கைது செய்யப்பட்ட அருள்பணி Danny García அவர்கள் விடுவிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகரகுவா நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Waldemar Sommertag, மூன்று ஆயர்கள், 136 அருள்பணியாளர்கள், மூன்று திருத்தொண்டர்கள், 11 குருமடமாணவர்கள், மற்றும் 91 ஆண், பெண் துறவிகள் என 245 பேர் 2018ஆம் ஆண்டிலிருந்து நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயர்கள் Álvarez மற்றும் Silvio Báez, 14 அருள்பணியாளர்கள் உட்பட 19 ஆண் பெண் துறவறத்தாரை தேசத்துரோகிகள் என அறிவித்து, அவர்களின் குடியுரிமையை பறித்துள்ளது நிகரகுவா அரசு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்