திருத்தந்தையை வரவேற்கத் தயாராகும் பாப்புவா நியூ கினி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாப்புவா நியூ கினியின் கடலோர நகரமான வனிமோவில் உள்ள மறைபரப்பு சபை அருள்பணியாளர் மார்ட்டின் பிராடோ அவர்கள், திருத்தந்தையின் பயணத்திட்டத்தில் உள்ளூர் கிறிஸ்தவச் சமூகம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்நகரத்தை அடைவது மக்களுக்குக் கடினமாக இருந்தபோதிலும், திருத்தந்தையின் வருகை அவர்களுக்கு நிறைவான மகிழ்வை அளிப்பதாகவும் கூறினார்.
வனிமோவில் இருந்து இம்மக்கள் வாழும் பகுதிகளுக்கு வரவும் அல்லது திரும்பவும் ஒரே வழி விமானம் அல்லது படகு மட்டுமே சாத்தியம் என்று தெரிவித்த அருள்பணியாளர் பிராடோ, மேலும் பலத்த மழையைத் தொடர்ந்து ஆற்றைக் கடப்பது கூட கடினமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, இந்தக் காட்டில் வாழும் எல்லாக் குடும்பங்களுக்கும் திருமுழுக்குக் கொடுக்கவும், சிலுவையின் அடையாளத்தை அவர்களுக்குக் கற்பிக்கவும், மற்றும் முதல் முறையாக நற்செய்தியைப் அறிவிக்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று பெருமிதத்துடன் கூறிய அருள்பணியாளர் பிராடோ அவர்கள், அம்மக்கள் கடவுளுக்காகவும், ஆன்மிக வாழ்விற்காகவும் உண்மையிலேயே தாகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
திருத்தந்தையின் வருகையை முன்னிட்டு, உரைகள், பாடல்கள் மற்றும் சில நடனங்கள் என பாப்புவா மக்கள் மிகவும் விரும்பும் விடயங்களை நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம் என்று தெரிவித்த அருள்பணியாளர் பிராடோ அவர்கள், அதுமட்டுமின்றி, பாவ அறிக்கை செய்ய நாங்கள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் அனைத்துப் பங்குத் தளங்களிலிருந்தும் நடைப்பயணமாகவும், வாகனங்களிலும் அதிகமானோர் வந்து கலந்துகொண்டனர் என்றும், அது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றும் உரைத்தார்.
இவ்வாண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பாப்புவா நியூ கினிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 8-ஆம் தேதி வனிமோவுக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றவுள்ளார்.
பாப்புவா நியூ கினியின் வடமேற்கில் அமைந்துள்ள வனிமோ என்னும் இந்த நகரம் சண்டான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 11,200. ஏராளமான கத்தோலிக்கர்கள் உட்பட சுற்றியுள்ள காடுகளில் உள்ள தொலைதூர குடியிருப்புகளில் அதிகமானோர் வாழ்கின்றனர். (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்