இறைஇரக்க அனுபவத்தை ஆழமாக்குவதற்கான முக்கியமான வாய்ப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
நாம் வாழ்கின்ற சவாலான காலத்தில் கடவுளின் கருணையைப் புரிந்து கொள்வதற்கும், இறைஇரக்க அனுபவத்தை ஆழமாக்குவதற்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாக ஆசிய அப்போஸ்தலிக்க இறைஇரக்கக் கூட்டம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஆயர் Ruperto Santos.
வரும் அக்டோபர் 14 முதல் 19 வரை பிலிப்பீன்ஸில் உள்ள செபுவில் நடைபெற உள்ள ஐந்தாவது ஆசிய அப்போஸ்தலிக்க இறைஇரக்கக் கூட்டத்தில் பங்குபெற உலக அப்போஸ்தலிக்க இறைஇரக்க கூட்டமைப்பானது இறைமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதுகுறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் அந்திபோலோ மறைமாவட்ட ஆயரும் உலக அப்போஸ்தலிக்க இறைஇரக்கக் கூட்டத்தின் இயக்குநருமான ஆயர் Ruperto Santos.
செபு உயர்மறைமாவட்டத்தால் நடத்தப்படும், இரக்கத்திற்கான 5வது ஆசிய அப்போஸ்தலிக்கக் கூட்டத்தின் நிகழ்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், இறைமக்கள் அனைவரும், இறைவனின் அருளை நிறைவாகப் பெற ஒன்றிணைய வேண்டும் என்றும், மக்களின் இருப்பும் பங்கேற்பும் இக்கூட்டத்திற்கு மிகப்பெரிய பெருமையைக் கொண்டு வந்து சேர்க்கும் என்றும் வெரித்தாஸ் வானொலி நிகழ்ச்சிக்கு கொடுத்த செய்தியில் தெரிவித்துள்ளார் ஆயர் Ruperto Santos.
இறை இரக்கம் – ஆசியாவில் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளில் ஆறு நாள் நடைபெறும் இக்கூட்டத்தில் Malolos மறைமாவட்ட ஆயர் Dennis Villarojo, San Jose de Antique மறைமாவட்ட ஆயர் Marvyn Maceda, அன்னை மரியின் அருள்பணியாளர்கள் Chris Alar, Patrice Chocholski, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி Hilario Davide ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
அக்டோபர் 14 ஆம் தேதி பிலிப்பீன்ஸ் நேரம் மாலை 4 மணிக்கு செபு பேராலயத்தில் பிலிப்பீன்ஸ் தலத்திருஅவைக்கான திருப்பீடத்தூதர் பேராயர் Charles Brown அவர்கள் தலைமையில் தொடக்கத் திருப்பலியுடன் ஆரம்பமாக இருக்கின்றது.
அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு செபு மாநிலத்தின் தலைநகரில் பவனியுடன் ஆரம்பித்து செபு மறைமாவட்ட பேராலயத்தில் (Basilica Minore del Sto. Niño de Cebu) காலை 6:00 மணிக்கு நடைபெற உள்ள திருப்பலியுடன் நிறைவுபெற இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்